தமிழகத்தையே தலைகீழாக புரட்டிய தென்மேற்கு பருவமழை.. ஜூனில் இயல்பை விட 115% அதிகமாமே.. அடேங்கப்பா
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 115% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தது.. முக்கியமாக, நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்யும் என்றும், வரும் 6ம் தேதி வரை தமிழகத்தில் பரவலான மிதமான மழைபெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆய்வு மையம்: நேற்றைய தினமும் வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்ட மழை பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. 2ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை தமிழகம் புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 5ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று தெரிவித்திருக்கிறது.
தென்மேற்கு பருவமழை: இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 115% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது..
தமிழகத்தை பொறுத்தவரை, தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கியது... இப்போது, இந்த தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது.. தென் மேற்கு பருவமழை ஆரம்பித்து, ஒரு மாதத்திலேயே 115 சதவீதம் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுவை: குறிப்பாக, தென்மேற்கு பருவமழை தமிழகம் புதுவையில் கடந்த ஜூன் 1ம் தேதியிலிருந்து இன்று வரையிலும் 109.2 மி.மீட்டர் மழை பாதிவாகியிருக்கிறது.. இந்த காலகட்டத்தில் இயல்பாகப் பதிவாக கூடிய மழையின் அளவு 50.8 மி.மீட்டர் மழையாகும்.
ஆனால் இப்போது பதிவாகி இருக்கக்கூடிய மழை என்பது இயல்பிலிருந்து 115 சதவீதம் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி: மாநில அளவில் சராசரியாக 5.2 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக 11.2 செ.மீ. மழை பெய்திருக்கிறது.. இதில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 2.3 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 412 சதவீதம் அதிகமாக, 11.8 செ.மீ., மழை பெய்துள்ளது.
சென்னையில் 6.6 செ.மீ., பெய்ய வேண்டிய நிலையில், 200 சதவீதம் அதிகமாக, 20 செ.மீ., பெய்துள்ளது. கரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், தேனி, திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், இயல்பான சராசரி அளவை விட, 200 சதவீதத்துக்கு அதிகமாக பெய்து உள்ளது.
இடி, மின்னல்: நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி செருமுள்ளியில், 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இன்று முதல், 7ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications