உங்கள் ஊரில் எப்போது, எவ்வளவு மழை? பொதுமக்கள் எளிதாக அறிய தமிழக அரசு வசதி
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் எப்போது, எவ்வளவு மழை பெய்கிறது, அல்லது பெய்யும் என்பதை அறிந்து கொள்ள ஆப்பில் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. 'TN Alert' என்ற ஆப் மூலம் மழை விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. வானிலை முன்னறிவிப்பு, பெறப்பட்ட மழை, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் பாதிக்கும் பகுதிகள் உள்பட பல்வேறு விவரங்கள் தெரியும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (புதன்கிழமை) புயலாக உருவாக உள்ளது. இது தமிழகப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், இதனால் 1-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மழை, புயல், வெள்ளங்கள் போன்ற இயற்கை இடர்பாடுகளை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு, தமிழகம் அலர்ட் என்ற செயலியில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றி பார்ப்போம்

கூகுள் பிளே ஸ்டோரில் டிஎன் - அலர்ட் (TN-Alert) என்ற பெயரில் இருக்கும் ஆப்பை பொதுமக்கள் டவுன்லோடு செய்ய வேண்டும். அதில் நமது இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வதற்கான அனுமதி கேட்கும். அந்த அனுமதியை நாம் தர வேண்டும். அதன் மூலம் நமது பகுதியில் ஏற்படும் இயற்கை நிலவரங்களை எளிதாக அறியலாம்
டின் அலர்ட் ஆப்பில் இப்போது உங்கள் ஊரில் என்ன வானிலை நிலவுகிறது.. வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு, உங்கள் ஊரில் பெய்த மழை அளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் பாதிக்கும் வசிப்பிட பகுதிகள், தங்களின் பாதுகாப்புக்கான தகவல், பேரிடர் தொடர்பான புகார் பதிவு, சென்னை மாநகர பகுதிக்கு வெள்ள முன்னறிவிப்பு, நீர் தேக்கங்கள், தன்னார்வலர்கள் பதிவு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சுயப்பதிவு ஆகிய மெனுக்கள் இடம் பெற்றுள்ளது. அதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து அதற்கான தகவல்களை பெற முடியும்.
மேலும் வானிலை தொடர்பான விவரங்களில் தாங்கள் இருக்கும் இடத்தின் தாலுகா அளவிலான விவரங்கள் இருக்கும். உதாரணமாக நீங்கள் சென்னையில் பள்ளிக்கரணையில் இருந்தால் உங்களது வார்டு மற்றும் உங்களது தாலுகா விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். மேலும் உங்கள் பகுதியில் எவ்வளவு மழை பெய்யும் நேர வாரியான தகவல்களையும் அறிய முடியும்.
அதில் உள்ளே கிளிக் செய்து சென்றால், அதில் ஐரோப்பிய வானிலை மையம் மற்றும் இந்திய வானிலை மையம் என 2 பிரிவுகள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொண்டால் இப்போது உங்கள் பகுதியின் மழை நிலவரம், மழை குறித்த எச்சரிக்கையை பார்க்க முடியும். மேலும் அடுத்த 4 நாட்களுக்கான மழை குறித்த முன்னறிவிப்பும் அதில் இடம் பெற்று இருக்கும். இந்த வசதிகள் மூலம் பொதுமக்கள் தங்களது கிராமம், நகர் என அனைத்து பகுதிகளிலும் மழை எவ்வளவு பெய்யும், எப்போது பெய்யும் என்ற தகவல்களை எளிதாக அறியலாம்.
மழை குறித்து மக்களிடம் சில ஊடகங்கள் பயமுறுத்தும் வகையிலும், வதந்தியை பரப்பும் வகையிலும், தலைப்புகளை தவறாக வைப்பதும் நடக்கிறது. இதனால் பதற்றத்திற்கு உள்ளாகும் மக்கள், அச்சத்துடன் இருக்கும் நிலை இருக்கிறது. சென்னை போன்ற ஊர்களில் மழை என்றால் வரமாக பார்க்காமல் சாபமாக பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை டின் அலர்ட் ஆப்பில் அறிய முடியும்.












Click it and Unblock the Notifications