சென்னையை நோக்கி வரும் டிரெய்லர் மழை! இரவில் ஸ்டார்ட் மியூசிக்குடன் மெயின் பிக்சர்! வெதர்மேன் தகவல்
சென்னை: மழையின் டிரெய்லர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, இந்த மழை இன்னும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு கனமழையாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகவுள்ளது. இதற்கான டிரெய்லர் மழை சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த மழையானது 15 முதல் 20 நிமிடங்களுக்கு கனமழையாக நீடிக்கும்.

பிறகு காற்றழுத்தத்தில் இருந்து பெய்யக் கூடிய பிரதான மழையானது இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும் என தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் 12 மணி முதலே குளிர்ந்த காற்று வீசி வருகிறது. காற்றும் பலமாக வீசி வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யவுள்ளது. நாளை முதலே சென்னையில் கன மழை பெய்யும் என முன்னர் சொல்லப்பட்ட நிலையில், அது இன்றே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் மீண்டும் கணித்து கூறியுள்ளது.
10.11.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
12.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13.11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
11.11.2024: தமிழக கடலோரப்பகுதிகள் மன்னார் வளகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக் கடல் பகுதி:
11.11.2024: தென்மேற்கு வங்ககடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 15 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்” என வானிலை மைய அறிக்கையில் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications