தமிழகத்தில் வெப்பம் தணிய போகுது.. அடுத்த 3 நாட்களுக்கு கொட்ட போகுது மழை - வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்குப் பரவலாக, அதிலும் குறிப்பாக மேற்கு மற்றும் வட தமிழகப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்த நிலையில், இப்போது மழை நின்று மீண்டும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் மொத்தம் 18 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.

அடுத்து ஒரு சில நாட்களுக்கு வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. அதன் பின்னரே வெப்பம் குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தில் சில பகுதிகளிலும் நேற்று துவங்கியது. இன்று மே 31ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை ஜூன் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நல்ல மழை: ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜூன் 4, 5 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும்; தமிழ்நாட்டின் இதர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை மே 1 முதல் மே 3 வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-2° செல்சியஸ்) சற்று குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விடச் சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று தென் வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மே 1ஆம் தேதி தென் வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்றும் நாளையும் லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகள், கேரளா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications