மதுரை, திண்டுக்கல்லில் வெளுக்கும் மழை.. தேனி, கொடைக்கானலுக்கு தமிழ்நாடு வெதர்மேன் போட்ட பதிவு
மதுரை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பதிவில், மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மேகங்கள் அடுத்த 1 மணி நேரத்தில் தேனி மாவட்டம் மற்றும் கொடைக்கானலில் நகரும் வாய்ப்பு உள்ளது. இன்று இரவு முதல் நாளை காலை வரை தென் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிக அளவில் வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தொடங்கி திருநெல்வேலி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமான மழை இந்த முறை பெய்துள்ளது. தூத்துக்குடி, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தான் மழை இயல்பைவிட சற்று குறைவாக பெய்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆங்காங்க மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழை இந்த காலக்கட்டத்தில் எல்லாம் பெரும்பாலும் விடைபெற்றுவிடும். ஆனால் இந்தமுறை அப்படி இல்லை.. அப்படி பெய்து கொண்டே இருக்கிறது.
இந்த சூழலில் வரும் டிசம்பர் 30ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புத்தாண்டின் போது மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் தொடர்ந்து மழை தமிழகத்தில் பெய்து வருவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று காலை வெளியிட்டிருந்த பதிவில், "குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை 10 நாட்கள் நீடித்து மீண்டும் வந்து 2 நாட்கள் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆந்திராவின் நகரி மற்றும் நந்தியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 82 மி.மீ மழையும், நகரி நீர்ப்பிடிப்பு பகுதியில் 70 மி.மீ மழையும் பெய்துள்ளது.
எனவே பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் உள்பட பெரும்பாலான ஏரிகள் 90 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் உள்ளன. இந்த சூழலில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதி அன்று சிறயஅளவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஜனவரியில் மீண்டும் வருகிறது, இதனால் இலங்கை நாடு தான் ஜனவரியில் அதிகபட்ச மழையைப் பெறும். தென் தமிழகம் மற்றும் டெல்டாவில் இந்த மாத இறுதியிலும், ஜனவரியில் தொடக்கத்திலும் மழை இருக்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் இறுதி நாளான இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, டெல்டா பெல்ட்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவையில் மழை பெய்யும். ஆனால் பெரிய மழையாக இருக்காது, மகிழ்ச்சிகரமான மழையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மாலைக்கு பிறகு நல்ல மழை பெய்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மேகங்கள் அடுத்த 1 மணி நேரத்தில் தேனி மாவட்டம் மற்றும் கொடைக்கானலில் நகரும் வாய்ப்பு உள்ளது. இன்று இரவு முதல் நாளை காலை வரை தென் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications