மாறியது கிளைமேட்.. தமிழக மாவட்டங்களில் பொளக்க போகும் மழை.. கூடவே வெயிலும் வரப்போகுது.. அலர்ட் மக்களே
சென்னை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், வடமேற்கு பகுதிகள் கடல் காற்றுடன் ஒன்றிணைந்து வெப்ப சலனத்தை தூண்டும் என்பதால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மிதமான மழை: எனவே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், வரும் 27ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் என்றும், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், காற்றின் வேக மாறுபாட்டால், வலுவான தரைக்காற்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. மற்றபடி, பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.. இதையடுத்து, வெப்பநிலை உயரும் என்றும் வானிலை மையம் கணித்து கூறுகிறது.
வானிலை மையம்: அதன்படி, மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளிலிருந்து வறண்ட காற்றின் வருகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெப்பநிலை ஒரு டிகிரி உயரக்கூடும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும்.. மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்து உள்ளதே இதற்கு காரணம். ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.. எனவே, சென்னை மண்டல வானிலையும் பெரும்பாலும் வறண்டதாகவே உள்ளது.
மழைக்கு வாய்ப்பு: ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் வானிலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமேற்கு பகுதிகள் கடல் காற்றுடன் ஒன்றிணைந்து வெப்ப சலனத்தை தூண்டும் என்பதால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நாளை முதல் வரும் 29ம் தேதி வரை தமிழகத்துக்கு நல்ல மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் மீண்டும் அறிவித்திருக்கிறது. இது தொடர்பான வெளியிடப்பட்ட அறிக்கையில், மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். மேலும், 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
நாளை முதல் மழை: நாளை அதாவது ஜூலை 25 முதல் வரும் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.
மன்னார்வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு, வடக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடலின் வடக்கு பகுதிகள், வடமேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள், மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
அறிக்கை: எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை மையம் தன்னுடைய அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவிலிருந்தே நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.. இன்று அதிகாலையிலும், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.. குளிர் காற்றுடன்கூடிய மழை பெய்து வருவதால், மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications