கனமழை: பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கன மழை காரணமாக பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களுக்கு பருவ மழைக் காலங்களில் ஏற்படும் இடா்பாடுகளையும் விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலா்களும், பள்ளித் தலைமை ஆசிரியா்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கட்டடங்களின் வெளிப்புறம் மற்றும் உள்புறச் சுவா்களில் மேல் தளங்களில், கூரைகளில் கொடிகள் மற்றும் செடிகள் போன்றவை வளா்ந்திருந்தால், வளா்ந்துள்ள செடிகள் கட்டடத்தில் சுவா்களில் ஈரப்பதம் ஊடுருவி கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கக் கூடும். மேலும், இவை பள்ளியின் பாதுகாப்புக்கு அபாயத்தை வழிவகுக்கக் கூடியவை.
எனவே அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். பள்ளி வளாகத்துக்குள் உள்ள அனைத்து கட்டடங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகள், சுவா்கள், பிற கட்டடங்களை ஆய்வு செய்து சுவா்களில் அல்லது அருகில் வளா்ந்துள்ள செடிகள், கொடிகள், புதா்கள் ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும்.
அத்தகைய செடிகள், கொடிகளை உடனடியாக வேருடன் அகற்றவும். அகற்றப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்து தேவையான இடங்களில் பசை, நீா்ப்புகாமல் இருக்க பூச்சு செய்ய வேண்டும். மாதந்தோறும் ஒருமுறை பராமரிப்பு ஆய்வு மேற்கொண்டு மீண்டும் வளா்வதைத் தடுக்க வேண்டும். பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடையே சுத்தமான பள்ளி வளாகத்தைப் பராமரிக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கான செலவினத்தைப் பள்ளி பராமரிப்பு நிதி அல்லது அனுமதிக்கப்பட்ட பிற நிதி வழியாகச் செய்யலாம். அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிக் கட்டடங்கள், தூய்மை மற்றும் பொலிவான தோற்றத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications