சூறைக்காற்றுடன் கூடிய கனமழை! எந்தெந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன? முழு விவரம்
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான 'மிக்ஜாம்' புயல் சென்னைக்கு அருகே, தெற்கு ஆந்திராவில் கரையை கடப்பதால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்று, 11.30 மணி அளவில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கே 230 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு வரும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (டிச.5) தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்(ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை மணிக்கு, 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
வானிலை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 3, 4) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டிச.4ம் தேதி நடைபெற இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுகளும் ஒத்துவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து டிச.4ம் தேதி நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications