ஆரம்பமே அசத்துதே.. தமிழ்நாட்டில் ஜூலை 3 வரை வெளுக்க போகும் மழை.. இந்த 6 மாவட்டங்களை நோட் பண்ணுங்க
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அத்துடன், வரும் ஜூலை 3-ம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் தாமதமாகவே, தென்மேற்கு பருவமழை மழை துவங்கி உள்ளது.. நாட்டின் 80 சதவீத பகுதிகளில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகிவிட்டது.. கடந்த 8ம் தேதி கேரளா மற்றும் குமரி முனைப்பகுதிகளில், மழை தொடங்கினாலும், எதிர்பார்த்த அளவுக்கு மழையை தரவில்லை.
கடந்த 2 நாட்களாகத்தான், கேரளாவில் மழை தீவிரமாகி வருகிறது.. இதனால் கேரளாவை ஒட்டிய தமிழகத்தின் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது...
நல்ல மழை: கடந்த வாரமும் சென்னையில் பலத்த மழை பெய்து வரும்நிலையில், இந்த வாரமும் அது தொடர்ந்தபடியே உள்ளது.. சென்னையில், வெயில் சுட்டெரித்து வருகிறது என்றாலும், தென்மேற்கு பருவமழையால் மழை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டின் சில பகுதிகளில், 70 மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை ரெய்ன்ஸ் என்ற தனியார் அமைப்பு தெரிவித்திருந்தது.

அதேபோல, நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும், 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருந்தது.
மன்னார் வளைகுடா: இன்று அதாவது 30ம் தேதி, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று கூறியிருந்தது.
அத்துடன், ஜூலை 01ம் தேதி அன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.. அதில், உள்ளதாவது:
இடி மின்னல்: "தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 30) ஓரிரு இடங்களிலும், வரும் 1, 2-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, வரும் ஜூலை 3-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டம்: ஜூன் 29-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 3செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாறு, தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications