கன்னியாகுமரி: நடுமலையில் திடீர் வெடிப்பு-உருண்டு விழுந்த "பெரும் பாறை"- பழங்குடிகள் அதிர்ச்சி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கிளா மலைத் தொடரின் நடுவில் திடீரென பெரும் வெடிப்பு ஏற்பட்டது; இதனைத் தொடர்ந்து பெரும் பாறை ஒன்று மலையில் இருந்து கீழே உருண்டு விழுந்தது. இதனால் கிளாமலைப் பகுதி ஆதி பழங்குடிகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே கிளா மலைத் தொடர் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான இந்த கிளா மலைத் தொடர் பகுதி காப்பு காடுகள் நிறைந்த பகுதி. பத்துகாணி, கீழ் மலை, ஒரு நூறாம் வயல், புறத்தி மலை ஆகியவை கிளா மலைத் தொடரைச் சுற்றிய ஆதி பழங்குடிகளின் வாழ்விடங்களாகும்.

இந்த கிளாமலையின் நடுப் பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு பெரும் புகை ஏற்பட்டது. கிளா மலையின் நடுவே ஏற்பட்ட இப்பெரிய வெடிப்பானது ஏதோ எரிமலை குழம்பு வெடிப்பதற்கு முந்தையதைப் போல பெரும் புகை மூட்டத்தை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து கிளா மலைத் தொடரின் உச்சியில் இருந்து மிகப் பெரிய பாறை ஒன்று திடீரென பெயர்ந்து கீழ் பகுதியை நோக்கி அதிவேகத்தில் உருண்டோடி வந்தது. இதனை நேரில் பார்த்த கிளா மலைத் தொடர் ஆதி பழங்குடிகள் பெரும் அச்சமடைந்தனர். இந்த பெரும் பாறை உருண்டு கீழே விழுந்த போதும் பழங்குடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த கனியல் வனத்துறை அதிகாரிகள், கிளா மலைத் தொடரில் இருந்து பெரும் பாறை உருண்டு விழுந்துள்ளது. இது தொடர்பாக நேரில் சென்றுதான் ஆய்வு நடத்த வேண்டும். தற்போது பழங்குடி மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றனர்.
அதே நேரத்தில் கடுமையான வெப்பம் காரணமாக கிளா மலைத் தொடரின் நடுவே இருந்த பாறை வெடித்து சிதறி இருக்கலாம் என்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் கனிம வளங்கள் குறித்த ஆராய்வு அல்லது கனிமவளங்களை வெட்டி எடுப்பதற்கான முன் நடவடிக்கையா என்பது குறித்தும் தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications