ஹாட் ஸ்பாட்டை ஃபிக்ஸ் செய்த ஃபெங்கல் புயல்! புதுவை- சென்னை அருகே கரையை கடக்க அதிக வாய்ப்பு!
சென்னை: வங்கக் கடலில் நாளை உருவாக போகும் ஃபெங்கல் என்ற புயல் புதுவை - சென்னை இடையே கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.நேற்று முன் தின நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. நேற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த நிலையில் இது இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது. இதனால் இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சென்னையின் பழைய மாமல்லபுரம் சாலையில் தண்ணீர் தேங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதே வேளையில் சென்னையில் இன்று கனமழை பெய்த நிலையிலும் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை. அது போல் சாலைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை, போக்குவரத்தும் சீராக உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு புயலாக மாறினால் அதற்கு ஃபெங்கல் என பெயரிடப்படும். இந்த பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமானது நாகையிலிருந்து 590 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 710 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 800 கி.மீ. தூரத்திலும் இது நிலைக் கொண்டுள்ளது.
அது போல் இலங்கை - திரிகோணமலை அருகே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.இது மெதுவாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாறி தமிழகத்தை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக செயலிழக்கும்.
இந்த புயலால் சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும். புதுவை தொடங்கி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை தொடர்ச்சியாக இருக்கும். அது போல் இந்த புயலால் காற்று அதிக வேகத்தில் வீசாது என்றும் மழைதான் அச்சுறுத்தல் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து புதுவை- சென்னை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் உருவாகவுள்ள நிலையில் சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications