அடுத்த 2 மணி நேரம்.. பிச்சு உதற போகும் மழை.. சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்கால சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது அக்னி நட்சத்திர வெயில் அடித்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதியே அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் முதல் நாளிலே சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. அடுத்த நாளும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது வெயில் அவ்வளவாக இல்லை.

அக்னி நட்சத்திரம்
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் மழை படிப்படியாக குறைந்து வெயில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் நேற்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. நேற்று மட்டும் தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியசை தாண்டி பதிவானது. எனினும் நேற்று இரவு முதல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
இன்றும் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயிலே கொளுத்தி எடுத்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்படிருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர் உள்பட
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றும் நாளையும்
தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 13 ஆம் தேதி தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16 ஆம் தேதி வரை
வரும் 14 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* குறிப்பாக நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* வரும் 15 மற்றும் 16 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை இன்று மழைக்கு வாய்ப்பு
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (10-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை ஞாயிற்றுக் கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 - 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று தொடங்கி மே.13 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். மே.14ல் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும்.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று தொடங்கி 13 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக இன்று முதல் 13ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்த வரை இன்றும் நாளையும் எச்சரிக்கை ஏதுமில்லை. மே.12 மற்றும் 13ம் தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மே.14ல் எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளை பொறுத்தவரை, இன்று தொடங்கிய 14 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications