இலங்கை உணவு பஞ்சம்.. கோத்தபாய ராஜபக்சே அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டதன் பின்னணி என்ன?
கொழும்பு: இலங்கையில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுவதால் அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜபக்சே வெளியிட்ட அவசர நிலை பிரகடனத்துக்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடி கையிருப்பு இல்லாத சூழ்நிலையில் உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 30-ந் தேதி இலங்கையில் உணவு பொருட்கள் பற்றாக்குறை தொடர்பான அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே.

அப்போது நாட்டு மக்களுக்கு டிவியில் உரையாற்றிய கோத்தபாய ராஜபக்சே, 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. ஆடைகள் உற்பத்தி துறை மூலம் ஆண்டுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு வருவாய் கிடைத்து வந்தது. இது தற்போது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 4.5 பில்லியன் டாலர் வருவாய் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்து வந்தது. இவ்வளவு வருவாய் கிடைத்த சுற்றுலாத் துறையும் சரிந்துள்ளது. உள்நாடு, வெளிநாட்டு முதலீடுகள் இழக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிப்பு வழங்குகிற நடுத்தர மற்றும் சிறு வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, தினசரி ஊதியதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களில் சுமார் 4.5 மில்லியன் மக்கள் தங்கள் வருமான ஆதாரங்களை இழந்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.
இந்த அவசர நிலை பிரகடனத்தை தொடக்கம் முதலே எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கொழும்பில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அவசரகால நிலை தேவையில்லை. இது மக்களின் மீதான தாக்குதல் என சாடியிருந்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய தமிழ் எம்.பி. சுமந்திரன், உணவு விநியோகம், விலைவாசி அதிகரிப்பு ஆகியவை எங்களுக்கும் ஒரு பெரிய பிரச்சினை. ஆனால் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்திதான் இதைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் தர முடியும். உணவுப் பொருட்கள் பதுக்கல்களை தடுக்க எத்தனையோ சட்டங்கள் இருக்கும் போது அவசரகால பிரகடனம் எதற்காக பிறப்பிக்கப்பட்டது? உண்மையில் ஒட்டுமொத்த நாட்டையும் அவசரநிலை காலத்தின் கீழ் கொண்டுவருவதற்கே இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய அளவு கடன்சுமையில் சிக்கித் தவிக்கிறது. இந்த கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதால் அன்னிய செலாவணி கையிருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இலங்கையின் சுற்றுலாத்துறை படுவீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா பரவலால் இலங்கைக்கு மிகப் பெரிய வருவாய் தரக் கூடிய தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் ஏற்றுமதி கடுமையான சரிவை எதிர்கொண்டிருக்கிறது.
ஜூலை மாதத்தில் இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு 2.7 பில்லியன் டாலர். ஆனால் வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகையோ 4 பில்லியன் டாலர். சீனாவிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அம்பாந்தோட்டா துறைமுகத்தை 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருப்பதில் இருந்தே அந்நாட்டின் பொருளாதார நிலைமையின் லட்சணத்தை புரிந்து கொள்ள முடியும். இலங்கைக்கு சீனா குறுகிய கால கடன்களைத்தான் தருகிறது. அப்படி குறுகிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலையில் அம்பாந்தோட்டா துறைமுகத்தை குத்தகைக்கு விட்டது போல ஏதேனும் ஒன்றை செய்தாக வேண்டிய நெருக்கடிக்குள்ளாகிறது இலங்கை. கடந்த மார்ச் மாதம் 1.5பில்லியன் டாலரை சீனாவிடம் கடனாக வாங்கியது இலங்கை. அவ்வளவு ஏன் குட்டிநாடான வங்கதேசத்திடம் 200 மில்லியன் டாலர் கடன் பெற ஒப்பந்தம் போட்டிருக்கிறது இலங்கை. இதில் முதல் கட்டமாக 50 மில்லியன் டாலரையும் வாங்கிவிட்டது இலங்கை. இப்படி வகைதொகை இல்லாமல் கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறது இலங்கை.
இலங்கை அரசானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாகனங்கள், மஞ்சள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டது. இந்த இறக்குமதி தடை விதிப்பானது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை கடுமையாகப் பாதித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் அத்தியாவசியப் பொருட்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, கோதுமை மாவு, காய்கறிகள் ஆகியவற்றை இறக்குமதிதான் செய்கிறது. இந்த அத்தியவாசியப் பொருட்களையும் கடனுக்குத்தான் இலங்கை வர்த்தகர்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. வர்த்தகர்கள் உணவுப் பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யவும் நேரிடுகிறது. இதனால் இயல்பாகவே உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டன.
இலங்கையில் கடந்த ஆண்டு ரூ135-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை இப்போது ரூ182க்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் விலை உயர்வு ஒப்பீடு

இப்படி கட்டுக்கடங்காமல் விலைவாசி உயர்ந்ததாலும் இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொண்டதாலும் உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார் கோத்தபாய ராஜபக்சே.
இலங்கை உணவுப் பொருட்கள் பற்றாக்குறைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இலங்கையின் இறக்குமதியில் உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் முக்கியம் வகிக்கின்றன. ஆனால் திடீரென இலங்கை அரசாங்கம் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதாக அறிவித்தது. இதனால் இலங்கையில் தேயிலை, மிளகு, நெல், காய்கறிகள் உற்பத்தி மிக மோசமாக அதாவது பகுதி அளவு குறைந்துவிட்டது. இதுவும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை பொதுவான அவசரநிலை, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்தில் அமலில் இருந்தது. அதன்பின்னர் 2019-ல் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.
இலங்கையில் இதற்கு முன்னர் 1978-ல் உணவுப் பொருட்கள் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகினர். அப்போது கிழங்குகளை உண்டு மக்கள் உயிர்வாழ்ந்தனர். தற்போதைய கோத்தபாய ராஜபக்சே அரசாங்கம் மீண்டும் அந்த 1978 காலத்தை நோக்கி இலங்கையை தள்ளிவிட்டுவிட்டது என்கின்றன எதிர்க்கட்சிகள்.












Click it and Unblock the Notifications