For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் நேர்மையை அவமதிக்கும் விஜயகாந்த்

By Shankar
Google Oneindia Tamil News

- சுப. வீரபாண்டியன்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். தை முடிந்து மாசியிலும் பாதி நாள்கள் ஓடிவிட்டன. இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நிமிடம் வரை (27.02.2016 காலை), வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான எந்தக் கூட்டணியும் இறுதி வடிவம் எடுக்கவில்லை. விஜயகாந்த் முடிவுக்காவே எல்லாக் கூட்டணிகளும் காத்திருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவர் முடிவு எடுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் சடசடவெனக் காய்கள் நகர்ந்து, கூட்டணிகள் அனைத்தும் முடிவாகிவிடும் என்பதும் வெளிப்படையான செய்தி!

அனைத்துக் கட்சிகளும் தங்களுக்காத்தான் காத்திருக்கின்றன என்று நடந்து முடிந்த வேடல் (காஞ்சி) மாநாட்டில் பிரேமலதா உள்படப் பலரும் பெருமை பேசியுள்ளனர், விஜயகாந்த் தலைமை ஏற்றுள்ள தே.மு.தி.க.விற்கு இது பெருமையாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிற்கும், தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளுக்கும் இந்நிலை அவமானத்தையே தேடித் தந்துள்ளது என்பதை வெட்கப்படாமல் நாம் ஏற்க வேண்டியுள்ளது.

Vijaykanth insults the political honest- Suba Veerapandiyan

அ.தி.மு.க., விஜயகாந்தை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகின்றனர். உண்மைதான். அவ்விரு கட்சிகளும் ஒரே அணிக்கு இந்தத் தேர்தலில் வர முடியாது என்பது மிக எளிய உண்மை. ஆனால், அ.தி,மு.க.வும் விஜயகாந்த் எந்தப் பக்கம் நகர்கிறார் என்பதைத்தான் கவனித்துக் கொண்டுள்ளது. அதனைப் பொறுத்தே அதனுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். ஆகவே அந்தக் கட்சியும் அவருடைய முடிவுக்காகத்தான் காத்திருக்கிறது. வீம்புக்காக, அப்படியெல்லாம் இல்லை என்று அவர்கள் சொல்லலாம். ஆனாலும் உண்மை அதுதான்.

பா.ம.க., அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று இன்றுவரை கூறிவருகிறது. அந்த நிலைப்பாட்டில் இருந்து பிறழாத வரை, அந்தக் கட்சி விஜயகாந்த் வருகைக்குக் காத்திருக்கிறது என்று கூற முடியாது. நாம் தமிழர் கட்சி 234 இடங்களுக்கும் வேட்பாளரை அறிவித்து விட்டது. ஆதலால் அந்தக் கட்சியும் அவரை எதிபார்த்துக் காத்திருக்கவில்லை என்பதை ஏற்கலாம். ஆனால் பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகியன தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்கும் வலிமை இல்லாதவை என்பதை அவர்களே அறிவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் முதலமைச்சரானால் என்றெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தாலும் அவற்றில் எந்த எதார்த்தமும் இல்லை. அவை வெற்றுச் சொற்கள்! கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்க மட்டுமே அவை உதவும்.

Vijaykanth insults the political honest- Suba Veerapandiyan

ஆதலால் பெரிய கட்சிகள் அனைத்தும் அவர் முடிவுக்காகக் காத்திருக்கின்றன என்பதே கசப்பான உண்மை. இந்த வலிமை தே.மு.தி.க.விற்கு எப்படி வந்தது? விஜயகாந்த் எப்படி ஒரு விந்தை மனிதர் ஆனார்? இந்தக் கேள்விகளுக்கான விடையில்தான் தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தி.மு.க., அ தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளே ஆட்சியில் இருந்து வருவதால், அவற்றிற்கு மாற்று வேண்டும் என்னும் கருத்தைப் பிற கட்சிகள் ஏற்படுத்த முயல்கின்றன. இந்த முயற்சி புதிதன்று. 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. என் நினைவு சரியாக இருக்குமானால், மாற்றுக் கட்சியின் தேவை குறித்து முதன் முதலில் கூடுதலாகப் பேசப்பட்டது, 1983ஆம் ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் இடைத் தேர்தலில்தான். அப்போது அந்த முழக்கத்தை முன்னெடுத்த கட்சி காங்கிரஸ்.

தமிழக அரசியல் வரலாற்றில் அந்த இடைத் தேர்தலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அதில்தான் முதன்முதலாக, கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டார். தி.மு.க.வின் இன்றையப் பொருளாளர் தளபதி ஸ்டாலின் காயல்பட்டினம் பகுதித் தேர்தல் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் மூப்பனார் பொறுப்பேற்று இறங்கிய முதல் தேர்தலும் அதுதான். காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்காவது வந்துவிடும், பெரிய கட்சிகளில் ஒன்று மூன்றாம் இடத்திற்குப் போய்விடும் என்று கருதப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தன. காங்கிரஸ் வேட்பாளர், ஜனதா சார்பில் போட்டியிட்ட நெல்லை ஜெபமணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்கள் கட்டுத் தொகையை இழந்தனர். கடும் போட்டியில், அ. தி.மு.க. வேட்பாளர் ரத்தினராஜ் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1996 பொதுத் தேர்தலில் மீண்டும் மூன்றாவது அணி என்ற பேச்சு எழுந்தது. ம.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத் தேர்தல் அது. அதற்கு முன் நடந்த பெருந்துறை இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு வந்திருந்தது. எனவே எதிர்பார்ப்புகள் கூடுதலாக இருந்தன. பா.ம.க., வாழப்பாடி காங்கிரஸ் இணைந்து இன்னொரு வலிமையான கூட்டணியையும் அமைத்திருந்தன.

ஆனால் தேர்தல் முடிவுகள் பல கட்சிகளுக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொண்டு வந்தன. தி.மு.க. தலைமையிலான, மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி மிக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. கூட்டணி 4 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. ம.தி.மு.க. ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இரண்டாவது இடத்தில் இருந்த பெருந்துறையிலும் 7992 வாகுகளை மட்டுமே பெற்றுக் கட்டுத் தொகையை இழந்திருந்தது. ஆனால் அந்தக் கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

அதற்குப் பிறகு மூன்றாவது அணி என்னும் முழக்கம் முடங்கிப் போயிற்று. அதற்கு மீண்டும் 2006ஆம் ஆண்டு உயிர் கொடுத்தவர் விஜயகாந்துதான். தனித்துப் போட்டியிட்ட அவருடைய கட்சி, விருத்தாசலத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அவர் சட்டமன்ற உறுப்பினரானார். பெரிய வெற்றி இல்லை என்றாலும், 10 சதவீத வாக்குகள் அவருக்குக் கிடைத்திருந்தன. அது அவருக்குப் பெரிய வலிமையைக் கொண்டு வந்தது. ,

மக்களோடும், ஆண்டவனோடும்தான் கூட்டணி என்று பேசி வந்த அவர், மாற்றுக் கட்சியாக வளர்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் வளர்ந்தது. ஆனால் அதனை 2011இல் அவரே உடைத்தெறிந்தார். அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து, தானும் இன்னொரு துணைக் கட்சிதான் என்ற நிலையை உருவாக்கினார். இப்போது தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதைக் கூறாமல் 'ரப்பர்' போல இழுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய வாக்கு சதவீதம் முன்பை விடக் குறைந்துவிட்டது என்று எல்லாக் கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. ஆனாலும் அவருக்கு இன்றைய தமிழக அரசியல் சூழலில் ஒரு செல்வாக்கு இருப்பதை நாம் மறுக்க முடியாது.

அதற்கு என்ன காரணம்?

இரண்டே காரணங்கள்தாம்!

1. தன் கட்சிக்கென்று அவர் எந்தக் கொள்கையையும் வைத்துக் கொள்ளவில்லை.

2. இன்னும் தன் செல்வாக்கில் 5 சத வீத வாக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவை இரண்டும் உண்மையில் பலவீனங்களே! ஆனால் தமிழக அரசியலில் பலம் என்று பார்க்கப்படுகிறது.

எந்தக் கொள்கையும் இல்லாமல் அரசியல் நடத்துவதால்தான், எல்லாக் கட்சிகளும் அவரோடு பேச்சு வார்த்தை நடத்துகின்றன. அவரும் எல்லோரோடும் பேசத் தயாராக உள்ளார். ஒரே நேரத்தில் தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ஜ.க. காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளும் அவரை அழைக்கின்றன.

அவர் சமூக நீதியை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. பொதுவுடமைக் கோட்பாட்டை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. இந்துத்வா கொள்கையை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. அடேயப்பா, இப்படியொரு நடுநிலையான கட்சியை இனி நாம் பார்க்கவே முடியாது. எல்லோரோடும் 'பேச்சுவார்த்தை' நடத்த இதுதான் மிகப் பெரும் தகுதியாகவும், வலிமையாகவும் அவருக்கு உள்ளது.

5 சதவீத வாக்குகள் என்பது வலிமையா என்றால், உறுதியாக இல்லை என்பதுதான் விடை. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த எந்த ஒரு கட்சியும், தமிழ்நாட்டில் அந்த 5 சதவீத வாக்குகளைக் கூடப் பெற்றிருக்கவில்லை என்பதால், அதுவும் அந்தக் கட்சிக்கான வலிமையாக ஆகி விடுகிறது.

தமிழக மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு வரும்வரையில், இவை இரண்டும் விஜயகாந்துக்கு வலிமையாக இருக்கலாம். ஆனால் தலைமைப் பண்பு, பேச்சில் தெளிவு, நடைமுறையில் நாகரிகம் ஆகியனவற்றை எல்லாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், இந்த இரண்டு 'வலிமைகள்' மட்டும் போதும் என்று அவர் கருதுவாரெனில், அது நீண்ட காலம் நிலைக்காது.

அரசியல் நேர்மையை அவரால் தொடர்ந்து அவமதித்துவிட முடியாது.

பேச்சுக்காகக் கூட, " மக்கள் தொண்டாற்ற வருகிறேன்" என்று கூறாமல், 'கிங்'காக மட்டுமே வரக் காத்திருக்கும் அவருக்காகக் காத்திருப்பது, பெரிய கட்சிகளின் தகுதிக்கு உரியதன்று.

இனி அவருக்காகக் காத்திருக்கப் போவதில்லை, 200 தொகுதிகளில் நாங்களே போட்டியிடப் போகிறோம் என்று தி.மு.க. அறிவிக்குமானால், அது தொண்டர்களுக்கு ஊக்கம் தரும், வெற்றியின் முதல் படியாக அமையும்!!

English summary
Prof Suba Veerapandian's special article on Vijayakanth's oscillation stand in Tamil Nadu assembly election 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X