For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனிமேலாவது புத்தி வருமா பாகிஸ்தான் ராணுவத்துக்கு?

Google Oneindia Tamil News

டெல்லி: தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்த ஒரு ராணுவமாக இத்தனை காலமாக திகழ்ந்து வந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு அதே தீவிரவாதிகள் நேற்று மிகப் பெரிய அடியைக் கொடுத்து விட்டனர். வளர்த் கடா மார்பில் பாய்ந்தது என்பது போல எந்த ராணுவம் இத்தனை காலமாக தங்களுக்குப் பாதுகாப்பாக இருந்ததோ, அதே ராணுவம் தங்களுக்கு எதிராக மாறியைதப் பொறுக்க முடியாமல் மிகப் பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளனர் தீவிரவாதிகள்.

Will Pakistan army change after the brutal Peshawar attack?

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தீவிரவாதிகளை கண்ணும் கருத்துமாக பார்ப்பதும், ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், பிற நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை அடுத்தடுத்து நடத்த தூண்டுவதும் நீண்ட கால குற்றச்சாட்டு.

பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்த நாட்டு ராணுவத்தின் ஆதிக்கம்தான் அதிகம். ஆட்சியாளர்கள் எல்லாம் பொம்மைகள் போலத்தான். ராணுவத்தைத் தாண்டி அவர்களால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது. அது நவாஸ் ஷெரீப்பாக இருந்தாலும் சரி, முஷாரப்பாகவே இருந்தாலும் சரி. ராணுவம் வைத்ததுதான் சட்டம். ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்தாலும் கூட ராணுவத்தைக் கேட்காமல் எந்த முக்கிய விஷயத்தையும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் எடுக்க முடியாது, முடிவு செய்ய முடியாது.

இப்படி சர்வ வல்லமை படைத்த பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் சேர்ந்து தீவிரவாதத்தின் காவலர்களாக தங்களை இத்தனை காலமாக வரித்துக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.

தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஏதோ தங்களது சொத்து போல இவர்கள் பாவித்து நடந்து கொண்டனர். உலகையே அச்சுறுத்திய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் மிக பத்திரமாக இருந்ததை உலகம் பார்த்தது. அவருக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்தது பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் தான்.

அதேபோல இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி விட்டு இன்று பாகிஸ்தானில் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் பாதுகாப்பான கரங்களில் பத்திரமாக உள்ளார் தாவூத் இப்ராகிம்.

மும்பையில் 10 தீவிரவாதிகளை அனுப்பி வைத்து மிகக் கொடூரமான தீவிரவாதத் தாக்குதலைத் தொடுத்த பல முக்கியத் தீவிரவாதிகளும் இன்று பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் நேரடிக் கட்டுப்பாட்டில் மிகப் பத்திரமாக உள்ளனர்.

இப்படி தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் தரும் நாடாக பாகிஸ்தானை மாற்றி வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு இன்று தெஹ்ரிக் இ பாகிஸ்தான் என்ற பெயரில் இயங்கி வரும் பாகிஸ்தான் தாலிபான்கள் மிகப் பலத்த அடியைக் கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தை பழிவாங்குவதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த பள்ளிக்குள் நுழைந்து அப்பாவி சிறார்களை துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்துள்ளனர்.

உண்மையிலேயே நெஞ்சு பதைக்கிறது இந்த செயலைப் பார்த்து. பாகி்ஸ்தான் ஆட்சியாளர்கள், ராணுவம், ஐஎஸ்ஐ ஆகியவற்றின் தவறான தறிகெட்ட கொள்கைகளால் இன்று அப்பாவி குழந்தைகள் தங்களது இன்னுயிரைப் பறி கொடுத்து நிற்கின்றனர். அவர்களை இழந்த பெற்றோர்கள் பரிதவித்துக் கொதித்துப் போயுள்ளனர்.

எந்தத் தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்தார்களோ இன்று அதே தீவிரவாதம் பாகிஸ்தான் மக்கள் மீதே பயங்கரமாக திரும்பியிருப்பதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களும், ராணுவமும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றன. ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை, கருத்தொற்றுமை இல்லை, ஒத்துழைப்பு இல்லை, சேர்ந்து செய்படுவது என்ற பழக்கமும் இல்லை.

இந்த நிலை நீடித்தால் பாகிஸ்தான் என்ற நாடே இல்லாமல் போய் விடும் அல்லது பாகிஸ்தான் உலகப் பயங்கரவாதத்தின் மிகப் பெரிய தலைமையகமாக மாறிப் போய் விடும். இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கூட நல்லதில்லை. உண்மையில் இப்போது பாகிஸ்தானை விட இந்தியாவுக்குத்தான் பேராபத்து.

இந்தியாவுக்கு ஒரு நாள் முன்பே சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் இன்று இந்தியாவை விட பல மடங்கு பின்னடைந்து போய்க் காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி இல்லை. கல்வியறிவு இல்லை, வளம் இல்லை, செழிப்பு இல்லை, மக்களிடம் நிம்மதி இல்லை. உலகெங்கும் கெட்ட பெயரை சம்பாதித்துதான் மிச்சம். இத்தனைக்கும் காரணம் தீவிரவாதம்.. அதை ஊட்டி வளர்த்து இடுப்பில் தூக்கி வைத்து பாதுகாத்த ஒழுங்கீனமான ராணுவம், அதன் முன்னாள் தளபதிகள்.

ராணுவம் எதைச் செய்தாலும் அதை பாகிஸ்தான் அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கும். மீறிப் பேசினால் ஆட்சி கவிழும், புரட்சி நடக்கும்... இதுதான் பாகிஸ்தான் மக்கள் இதுவரை கண்டது. ஆனால் இந்த நிலை நிச்சயம் வரும் நாட்களில் மாறும் என்று தெரிகிறது. தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் பாரபட்சமே இல்லாமல், இரும்புக் கரம் கொண்டு ராணுவம் உறுதியோடு அடக்காவிட்டால் அடக்க முன்வராவிட்டால் பாகிஸ்தான் மக்கள் புரட்சியில் குதிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
The brutal attack in an army school in Peshwar, may well be a watershed for a country long accused by the world of treating terrorists as strategic assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X