For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மநகூவுக்கு 35% வாக்குகள் 'கன்பார்ம்'... மத்திய உளவுத்துறை அதிகாரியே கூறியதாக வைகோ புளகாங்கிதம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணிக்கு 35% வாக்குகள் கிடைக்கும் என்று மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுகவினருக்கு வைகோ எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்ணா மறைவுக்குப் பின் தமிழ்நாட்டைச் சீரழித்து பாழ்படுத்திய அண்ணா திமுகவோ, திமுகவோ ஆட்சி பீடத்திற்கு வரக்கூடாது என்று நாட்டு நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டிய ஏடுகளும், ஊடகங்களும் நமது அணிக்கு எதிராகவே புழுதி வாரித் தூற்ற ஆரம்பித்தன. அதனால்தான் சென்னை பதிப்பு தினமலர் நாளிதழில், நியூஸ் 7 தொலைக்காட்சியும் - தினமலர் ஏடும் ஒரு விசித்திரமான கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை ஏவிவிட்டுள்ளது.

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு

அண்ணா திமுகவினுடைய கோட்டை என்று இதுவரை கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் 57 தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 34 தொகுதிகளில் திமுக வெல்லும் என்றும், 23 தொகுதிகளில் அண்ணா திமுக வெல்லும் என்றும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது என்றும், அனைத்துத் தொகுதிகளிலும் நமது அணிக்கு 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் விழும் என்றும் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு கருத்துக் கணிப்பை திணித்திருக்கிறது. ஆனால் கச்சிதமாக கெட்டிக்காரத்தனமாக ஒரு வேலையைச் செய்திருக்கிறார்கள்.

நடுநிலையா?

நடுநிலையா?

ஒரு தொகுதியில் ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாகவும், நடு நிலை நிருபர்கள், மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டதாகவும் அந்தக் கருத்துக் கணிப்புத் தாளை ஒட்டிக்கொடுத்துவிட்டதாகவும், இது உண்மையான கருத்துக் கணிப்பு என்றும் தினமலர் கூறுகிறது. இவர்களே எழுதி ஒட்டிக் வைத்துக்கொள்வதில் என்ன சிரமம். அல்லது திமுகவினரிடமும், காங்கிரஸ்காரர்களிடமும் முகவரி, அலைபேசி எண் முதற்கொண்டு வாங்கிக் கொண்டு அதனையே கருத்துக் கணிப்பு என்று சொல்லும் சாமர்த்தியம் படைத்தவர்களே! திமுக அணி மூன்றாவது இடத்துக்குப் போய்விடும் என்பதுதான் உண்மை.

திமுகவுக்கு 3-வது இடம்

திமுகவுக்கு 3-வது இடம்

முதலிடத்தைப் பெறும் நாம் ஆட்சி அமைக்கப் போகிறோம். அதிமுக இரண்டாவது இடம். திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும். தேமுதிகவும் - தமாகாவும் மக்கள் நலக் கூட்டணியோடு கரம் கோர்க்காது, எப்படியும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக தங்கள் அணிக்கு வந்துவிடும் என்று திமுக தலைமையும், இளவரசு மகுடதாரியும், திமுகவுக்கு தொடர்பே இல்லாத மருமகப் பிள்ளையும் போட்ட திட்டம் எல்லாம் மண்ணாப் போச்சே! ஆசை கனவெல்லாம் கானல் நீராச்சே! மனக்கோட்டை எல்லாம் தூள் தூளாச்சே! இந்த ஆறு கட்சி கூட்டணியையும் ஒருங்கிணைத்துச் செல்கிற சூத்திரதாரியாக வைகோ இருக்கிறானே என்ற கட்டுக்கு அடங்காத ஆத்திரத்தில், அடக்க முடியாத கோபத்தில் வழக்கம்போல திமுக தனது மூர்க்கத்தனமான வேலைகளை ஏவியது.

என்னைத் தாக்க சதி

என்னைத் தாக்க சதி

நான் போட்டியிட திட்டமிட்ட கோவில்பட்டி தொகுதியில் என்னைத் தாக்கவும், அதனால் ஏற்படும் எதிர் விளைவால் ஒரு சாதி கலவரத்தை நடத்தவும், அதில் சிந்தும் இரத்தத் துளிகளை நக்கிக் கொள்ளலாம் என்ற நரி வேலைக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டானே! திருவாரூக்குள் நுழையும்போதே தாக்க திட்டமிட்டோமே, அதிலும் தப்பி விட்டானே! என்பதால் பித்துப் பிடித்தவர்களாய் வெறிப்போக்கோடு செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதில் ஒரு அஸ்திரம்தான் நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு.

உளவுத்துறை தகவல்

உளவுத்துறை தகவல்

மத்திய அரசின் உளவுத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி என்னிடம், 28 சதவிகிதத்தை தாண்டி விட்டீர்கள். தேர்தல் நெருங்கும்போது 35 சதவிகிதமாக உயரவும் வாய்ப்பு உண்டு" என்றார். எத்தனை கோடி பணத்தைக் கொட்டினாலும் தோற்றுப் போவோம் என்று கலக்கத்தில் உள்ள திமுக, இந்த கோயபல்ஸ் கருத்துக் கணிப்பின் மூலம் அண்ணா திமுவை வீழ்த்த நினைப்பவர்கள் மனதில் கேப்டன் விஜயகாந்த் தலைமையிலான அணிக்கு வாக்களித்தாலும் நம் நோக்கம் நிறைவேறாது என்று எண்ணி திமுவுக்கு அவர்கள் வாக்களிக்கட்டும் என்பது ஒரு திட்டம்.

இதுதான் நோக்கம்

இதுதான் நோக்கம்

இதுவரை அண்ணா திமுகவுக்கு ஆதரவாக இருந்த ஓட்டுகள் இந்தத் தேர்தலில் நமது கூட்டணிக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் கிடைக்கும் என்பதால், அண்ணா திமுக மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது இந்தத் திட்டத்தில் ஒரு அங்கம்.

பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லாத ஆதரவை இருப்பதாகக் காட்டி, சதவிகிதக் கணக்கை உயர்த்தி இருப்பதின் நோக்கம் என்னவென்றால், அண்ணா திமுக, திமுக இரண்டும் வேண்டாம் என்று கருதும் பலரின் ஓட்டை பாஜகவுக்கு ஓட்டுவிழச் செய்வது இவர்கள் நோக்கத்தின் இன்னொரு அங்கம். திமுகவின் இந்த சூழ்ச்சி திட்டம் தவிடுபொடி ஆகும். அவர்கள் சதிவலை அறுத்து எறியப்படும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK Leader Vaiko today exuded confidence that their PWF will get 35% votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X