For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மாறினாலும் கருணாநிதி மாற விடமாட்டார் போலிருக்கிறதே!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேட்டி இன்று வெளியாகியிருக்கிறது. 'தி ஹிந்து' ஆங்கில நாளிதிழுக்கு கருணாநிதி அளித்திருக்கும் பேட்டி விரிவாக பல விஷயங்களை அலசுகிறது. ஆனால் இதில் முத்தாய்ப்பான விஷயம் அஇஅதிமுக எம்எல்ஏ க்களைப் பற்றி கருணாநிதி சொல்லியிருக்கும் கருத்துதான் இடிக்கிறது.

'32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழத்தில் ஒரு ஆளுங் கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் திமுக வின் முன்னிருக்கும் சவால்கள் என்ன?' என்பது கேள்வி.

இதற்கு கருணாநிதியின் பதில்: "திமுக எந்த சவால்களையும் சந்திக்கும். தற்போது திமுக வை விட ஆளுங்கட்சிக்குத் தான் சவால்கள் அதிகம். ஒரு எம்எல்ஏ மறைந்த பிறகு அஇஅதிமுக வின் பலம் தற்போது 130. குறைந்த பட்ச பெரும்பான்மை அதாவது சிம்பிள் மெஜாரிட்டியை விட இது 12 எம்எல்ஏ க்கள் தான் அதிகம். இவர்கள் சலனப்படாமல் இருப்பதும், இவர்களைப் பத்திரமாக தங்களிடமே தக்கவைத்துக் கொள்ளுவதும் அஇஅதிமுக வின் முன்னுள்ள சவால். இது மெல்லியதோர் கயிற்றின் மீது நடப்பது போன்றது."

Karunanidhi hits for 'horse trade' in future?

திமுக தலைவர் வழக்கமான தன்னுடைய நாடகத்தை ஆடத் தொடங்கி விட்டார் என்று தான் தெரிகிறது. மே 19 ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு முதன் முறையாக மிக, மிக முக்கியமானதோர் அரசியல் கருத்து பிரதான எதிர்கட்சித் தலைவரிடம் இருந்து வந்திருக்கிறது. திமுக வுக்கும் அண்ணா திமுக வுக்கும் 30 எம்எல்ஏ க்கள் தான் வித்தியாசம். இந்த பின்னணியில் பார்த்தால் தான் கருணாநிதியின் இன்றைய பேட்டியின் முழு அர்த்தமும் புரியும்.

அதிமுக எம்எல்ஏ க்களை விலைக்கு வாங்கி தாங்கள் ஆட்சியமைக்க உதவும் குதிரை பேரத்திற்கு திமுக ஆசைப்படுகிறதோ என்ற சந்தேகம்தான் இந்தப் பேட்டியிலிருந்து கிடைக்கும் தகவலாகும். திமுக குதிரைப் பேரத்தில் ஈடுபடப் போகிறதோ இல்லையோ அதை விட முக்கியம் இந்த கருத்து, இந்த பேட்டி முதலமைச்சர் ஜெயலலிதா விடம் என்ன மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான்.

கடந்த காலங்கில் இது போன்று கருணாநிதி அதிமுக தலைமையை சீண்டி பார்த்த காலங்களில் ஏற்பட்ட எதிர்விளைவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இது தெளிவாகப் புரியும். 2001 ல் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றவுடன் விழுப்புரத்தில் அரசுக்கு சொந்தமான பொது விநியோகக் கிட்டங்கியில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி சோதனை மேற்கொண்டு கைதானார். அப்போது அதனை படம் பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை ஏன் கைது செய்யவில்லை? கைது செய்ய வேண்டுமென்றால் எல்லோரையும் கைது செய்ய வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்பினார் கருணாநிதி. மறுநாளே அந்தத் தனியார் தொலைக் காட்சி செய்தியாளரையும் கைது செய்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்கள் ஜெயலலிதா வின் காரை மறித்தது, அதன் பின்னர் கருணாநிதியின் கைது நடவடிக்கைகள் போன்றவை அரங்கேறின. இந்த விவகாரத்தின் பிள்ளையார் சுழி, ஏன் அந்தத் தனியார் தொலைக் காட்சி செய்தியாளரை கைது செய்யவில்லை? என்ற கருணாநிதியன் கேள்விதான்.

Karunanidhi hits for 'horse trade' in future?

இதே போன்றுதான் 2003 ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டமும், அதில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப் பட்டதும். இந்த வேலை நிறுத்தம் 2003 ம் ஆண்டு ஜூலை 2 ம் தேதி தொடங்கியது. ஆனால் அதற்கு கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே அதாவது 2002 ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக திமுக தலைவரின் பேச்சும், 'முரசொலியில்' வந்த கட்டுரைகளும்தான் ஜெயலலிதா அரசு அதிரடியாக ஒன்றரை லட்சம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யும் அளவுக்குப் போனது என்று கூறப்படுகிறது.

‘எப்போதுமே மாநில அரசு ஊழியர்கள் திமுக வுக்கு ஆதரவானவர்கள். ஆகவே இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் தன்னுடைய ஆட்சியை, நிர்வாகத்தை கருணாநிதி நிலை குலைய வைத்துவிடப் போகிறார் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் ஒன்றரை லட்சம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யும் எல்லைக்கு ஜெயலலிதா போனார்,' என்று கூறுகிறார் அப்போது மாநில அரசு நிருவாகத்தில் உயர் பதவியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

இன்னோர் தகவலையும் இந்தப் பேட்டியில் கருணாநிதி சொல்லியிருக்கிறார்.

"1971ல் 184 இடங்களை வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது நாங்கள் தான் அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏ க்களை கொண்ட எதிர்கட்சியாக இருக்கிறோம். ஆளுங் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் திமுக வின் சாதனைகளை யாரும் மறந்து விட முடியாது".

89 எம்எல்ஏ க்களை கொண்ட திமுக வை சட்டமன்றத்தில் சமாளிப்பது உங்களுக்கு அவ்வளவு சுலபமல்ல என்ற கருத்தைத்தான் இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எடுத்துக் கூறுகிறார்.

தமிழகத்தின் நலனுக்காக திமுக வுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று சொல்லிய ஜெயலலிதா இன்றைய கருணாநிதியின் பேட்டியை ரசிக்க மாட்டார் என்பது உண்மை. இதில் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் திமுக தலைவரின் நடவடிக்கைகளின் உண்மையான பரிமாணம் மற்றவர்கள் எல்லோரையும் விட ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.

காரணம் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட கடந்த 29 ஆண்டுகாலமாக கருணாநிதியை ஜெயலலிதா மட்டும்தான் தமிழக அரசியிலில் வெற்றிகரமாக சமாளித்து வருகிறார். இந்த நிலைமை தமிழக அரசியிலில் நிலவும் இரு துருவ அரசியிலின் சாபக்கேடு என்றுதான் நாம் புரிந்து கொள்ள முடியும். அதுதான் சரியான புரிதலாகவும் இருக்கும். புதிய சட்டமன்றம் முறையாக தன்னுடைய அலுவல்களை துவங்குவதற்கு முன்பே ‘குதிரைப் பேரத்திற்கான' சாத்தியக் கூறு பற்றி பிரதான எதிர்கட்சியின் தலைவர் பேசத் துவங்கியிருப்பது தனி மனித துவேஷத்திலேயே சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியிலின் நாகரீகத்தை, ஆரோக்கியத்தை மேலும் சிதைத்து சின்னாபின்னமாக்கப் போகிறது என்பது ஒதுக்கித் தள்ளிவிட முடியாத உண்மைதான்.

ஜெயலலிதா வின் நான்காவது ஆட்சிக் காலத்தின் ஆரம்பக் கட்டமே கோலாகலமாகத்தான் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. திமுக தலைவரின் இன்றைய பேட்டியின் முக்கியக் கருத்து, செயல் வடிவம் பெற துவங்கினால் வான வேடிக்கைகளுக்கு தமிழக அரசியிலில் எந்தப் பஞ்சமும் இருக்காது!

English summary
R Mani is analysing DMK President M Karunanidhi's interview on possibilities of 'horse trade' in Tamil Nadu politics in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X