சபாஷ்! இந்தியாவிடம் திடீரென இறங்கி வரும் இலங்கை.. வெளியுறவுக் கொள்கையில் யூ டர்ன்!
டெல்லி: இந்திய வெளியுறவுக் கொள்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து மெல்ல மெல்ல விலகி இந்தியாவின் தயவை நோக்கி கொண்டிருக்கிறது இலங்கை. இந்தியாவும் இலங்கையில் சாதிக்க வேண்டியவற்றை அடுத்தடுத்து சாதிக்கவும் தொடங்கி இருக்கிறது.
இந்தியா அண்மையில் இலங்கைக்கு 912 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியது. மேலும் இந்தியாவில் இருந்து மருந்துகள், எரிபொருட்கள் வாங்க 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்கியது. திடீரென இந்தியாவின் கரிசனப் பார்வை இலங்கை பக்கம் திரும்பியிருக்கிறது. அப்படியானால் இதுவரை சிங்களம் தமது நட்பு சக்தியாக கொண்டாடிய சீனாவின் கதி என்ன ஆனது?
சீனாவின் மேலாதிக்கம்
கொரோனா பரவலைத் தொடர்ந்து இலங்கையின் பிரதான வருவாய் தரக்கூடிய சுற்றுலாத்துறை முடங்கியது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பும் கரைந்து போனது. இன்னொரு பக்கம் சீனாவோ அம்பந்தோட்டா துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்து இலங்கையை தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது இலங்கை மிகப் பெரும் கடன்சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிற நிலையில் சீனா கடனுதவி, அபிவிருத்தி திட்டங்கள் பெயரால் அந்த தேசத்தையே டிராகன் போல விழுங்கி வருகிறது. இலங்கை அரசாங்கத்திடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 160 கோடி அமெரிக்க டாலர்தான் அன்னியச் செலாவணி கையிருப்பாக இருந்தது. இன்னொரு பக்கம் கடன்களாக இலங்கை செலுத்த வேண்டிய தொகை 730 கோடி டாலர். இந்தக் கடனை செலுத்த வேண்டிய நெருக்கடியில் இலங்கை இருந்து வருகிறது. இதில் சீனாவுக்கு மட்டுமே 650 கோடி டாலர் கடனை திருப்பிக் கட்ட வேண்டும் இலங்கை. சீனாவின் பொதுவான வியூகமே இத்தகைய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு கடனுதவிகளை வாரி வழங்கி அப்படியே அந்த நாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பதுதான். இதனை இலங்கை அனுபவித்தும் உள்ளது.
இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை மேம்படுத்த சீனாவிடம் 1400 கோடி டாலர் கடன் பெற்றது இலங்கை. இந்த கடனை அடைப்பதற்காக அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு தாரை வார்த்து கொடுத்தது இலங்கை. அம்பந்தோட்டாவுக்கு அடுத்ததாக அம்பந்தோட்டா ஏர்போர்ட், கொழும்பு துறைமுக நகரம் என அடுத்தடுத்த திட்டங்களை முன்வைத்து அந்த பகுதிகளும் சீனாவுக்கே 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சீனா இப்படி பெற்ற பகுதிகளை தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட காலனி பிரதேசங்களாக்கிவிட்டன. அங்கே சீனாவின் சட்டங்கள்தான் செல்லுபடியாகும் என்கிற விபரீதமும் உருவானது.
சீனாவுடனான இந்த நெருக்கம் இந்தியா- இலங்கை உறவில் கடுமையான தாக்கத்தையும் விரிசலையும் ஏற்படுத்தியது. குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா-இலங்கை- ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் திடீரென இலங்கை இதில் பின்னடித்தது. சீனாவின் நெருக்கடியால்தான் இலங்கை இப்படி ஒரு முடிவெடுத்தது. இதுதான் இந்தியா- இலங்கை உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இப்படி இலங்கையில் ஜெகஜோதியாக ஒளிவீசிய சீனாவின் ஆதிக்கத்துக்கு சிங்களர் பெரும் எதிர்ப்பை வெளிக்காட்டவும் ஆரம்பித்தனர். இது இலங்கையில் ஆளும் ராஜபக்சே சகோதரர்களுக்கு நெருக்கடியை கொடுத்தது.

சீனாவுடன் மோதல்
இதனால் வேறுவழியின்றி சீனாவுடன் மல்லுக்கட்ட வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இதன் முதல் கட்டமாக சீனா அனுப்பி வைத்த 20,000 மெட்ரிக் டன் உரக் கப்பலை அனுமதிக்க மறுத்தது இலங்கை. நச்சு பாக்டீரியா அந்த உரத்தில் இருப்பதால் அனுமதிக்க மறுப்பதாக இலங்கை கூறியது. 70 நாட்கள் இலங்கை கடற்பரப்பிலேயே நின்ற சீனாவின் கப்பல் கடைசியில் ஒருவழியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்ததாக தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயான தீவுகளில் மெகா காற்றாலை மின்சக்தி திட்டங்களை சீனா கையகப்படுத்தி இருந்தது. இதற்கு தொடக்கம் முதலே இந்தியா கடும் எதிர்ப்பை காட்டியிருந்தது. சீனாவுக்கு இலங்கையில் எதிர்ப்பு வலுத்ததால் இந்தியாவை நோக்கி ராஜபக்சே சகோதரர்களின் பார்வை திரும்பியது. இந்தியாவை சமாளிக்கும் வகையில் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட மெகா காற்றாலை மின்சார திட்டத்தை இலங்கை ரத்து செய்தது. அத்துடன் இத்திட்டத்தை இந்தியா விரைவில் செயல்படுத்தவும் உள்ளது.
இலங்கையின் இந்த திடீர் மாற்றங்களுக்கு இந்தியாவே காரணம் என்பதை சீனா மறைமுகமாக, 3-வது நாட்டின் தலையீடு என கோடிட்டுக் காட்டியது. இப்போது சீனாவிடம் இருந்து ரொம்பவும் விலகி விட்டோம் என்பதை காட்டும் வகையில் அடுத்தடுத்து இந்தியாவுக்கு நல்ல சமிக்ஞைகளை இலங்கை கொடுத்து வருகிறது. இதன்விளைவாகத்தான் நாமே மேலே குறிப்பிட்ட கடனுதவிகளை இலங்கை இந்தியாவிடம் ஜாக்பாட் போல பெற்றும் வருகிறது.
இந்தியாவிடம் சரணாகதி
இலங்கை-இந்தியா உறவில் மிக முக்கியமான திருப்பமாக அண்மையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தமிழர் தாயகத்தின் தலைநகரமாக போற்றப்படக் கூடிய திருகோணமலையை வைத்து இந்தியாவும் இலங்கையும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 1987-ம் ஆண்டு ராஜீவ்- ஜெயவர்த்தனே கையெழுத்திட்ட இந்தியா- இலங்கை ஒப்பந்தத்துக்கு பிந்தைய மிக முக்கியமான ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. அப்படி என்ன திருகோணமலையில் இருக்கிறது?
திருகோணமலை என்பது சர்வதேச போரியல் வரலாற்றில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். மன்னராட்சிகாலங்களிலும் இப்போதைய ஜனநாயக ஆட்சிக் காலங்களிலும் வரலாறு நெடுக திருகோணமலை மிக முக்கியமான பகுதி. திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அவர்களே தென்கிழக்காசியாவை ஆளக் கூடியவர்கள் என்கிற வகையில் கேட் வே ஆக இருக்கக் கூடிய துறைமுகம் திருகோணமலை. 1930-ம் ஆண்டு இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த போது 800 ஏக்கர் பரப்பளவில் 99 எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டன. 1924-ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை இந்த சேமிப்பு கிடங்குகள் கட்டமைக்கப்பட்டன. 45 அடி உயரம், 350 அடி சுற்றளவு கொண்டதாக இவை உருவாக்கப்பட்டன. 2-வது உலக யுத்தத்தின் போது பிரிட்டிஷ் படைகளுக்கு இந்த ஆயில் டேங்குகள்தான் பெருமளவு உதவி செய்தன.
இந்த 99 ஆயில் டேங்குகளில் லங்கா ஐஓசி எனப்படும் இந்திய அரசு நிறுவனத்தால் 14 கிடங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணெய் கிடங்குகளை தொடர்ந்து இந்தியா பயன்படுத்திக் கொள்ளத்தான் 2 வாரங்களுக்கு முன்னர் இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி இந்தியா மேலும் 50 ஆண்டுகளுக்கு இந்த எண்ணெய் கிடங்குகளை பயன்படுத்தும். அத்துடன் மேலும் 61 எண்ணெய் டேங்குகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து பயன்படுத்தும். இதற்காக அதாவது இந்தியா- இலங்கை நிறுவனங்கள் இணைந்து செயல்படும் வகையில் Trinco Petroleum Terminal Pvt Ltd என்கிற புதிய நிறுவனம் உருவாக்கப்படும். இதில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத் தாபன நிறுவனம் 51% பங்குகளையும் லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனம் 49% பங்குகளையும் வைத்திருக்கும். இதன் மூலம் திருகோணமலையில் இந்தியாவின் ஆதிக்கம் மேலும் வலுவடைந்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிக சாதகமான அம்சம். இந்திய வெளியுறவுக் கொள்கையில் புதிய மைல்கல்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா
இத்தகைய திருப்பங்களின் பின்னணியில்தான் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிடக் கோரி தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்ட 13-வது அரசியல் சாசன திருத்தம் அதாவது இலங்கையில் மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு செயல்படுத்தப்பட வேண்டும் என்கிற சரத்தை செயல்படுத்த இலங்கை ராஜபக்சேக்களின் அரசுக்கு நெருக்கடி தருவதுதான் இந்த கடிதத்தின் சாராம்சம்.
அதேநேரத்தில் சீனா சார்பு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் வலம் வருகின்றனர். அண்மையில் இலங்கைக்கான சீனாவின் தூதரை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து மீனவர் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக்க முயன்றவர் டக்ளஸ் தேவானந்தா எனும் தமிழ் அமைச்சர்தான். தமிழ்நாட்டில் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது இலங்கையை ஆரத் தழுவிக் கொண்டிருக்கும் இந்தியா ஆறப் போடாமல் ஈழத் தமிழர் பிரச்சனையையும் பேசும் என்கிற நம்பிக்கை தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு. ஆனால் இந்தியாவிடம் பெருமளவு கடன் பெற்றுவிட்டு மீண்டும் சீனாவுக்கு சாதகமான முடிவுகளைத்தான் சிங்களப் பேரினவாத அரசுகள் எடுக்கும் என இப்போதே எச்சரிக்கவும் செய்கின்றனர் ஈழத் தமிழர்கள்.












Click it and Unblock the Notifications