இனி நிக்கவே வேணாம்! டோல்கேட்டில் புது வசதி! தமிழ்நாட்டின் முதல் பேரியர் இல்லாத சுங்கச்சாவடி

  • சென்னை: சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி சாலை வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடி, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பூத் இல்லாத மற்றும் தடுப்புகள் இல்லாத நேரடிப் பயண சுங்கச்சாவடியாக (Multi-Lane Free Flow - MLFF) பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    Advertisement

    இனி கார்கள் மற்றும் பிற வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் காத்து நிற்கவோ, தடுப்புக் கம்பிகளுக்கு முன் வாகனத்தை மெதுவாக நிறுத்தவோ தேவையில்லை. வழக்கம் போல தங்கள் வேகத்திலேயே சுங்கச்சாவடியைத் தாண்டிச் செல்ல முடியும்.

    Advertisement

    இது எப்படி வேலை செய்கிறது?

    பொதுவாக சுங்கச்சாவடிக்கு வரும்போது பூத்கள் இருக்கும், அதற்கு முன் தடுப்புக் கம்பிகள் (Barriers) போடப்பட்டிருக்கும். காரை நிறுத்திய பின் ஃபாஸ்டேக் ஸ்கேன் ஆகி கம்பிகள் மேலே தூக்கிய பிறகே நாம் செல்ல முடியும். ஆனால் பரனூரில் இந்த பழைய முறைகள் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன.

    மேலே பொருத்தப்பட்ட நவீன சென்சார்கள்: சாலையின் மேல் அமைக்கப்பட்ட ஆர்ச் போன்ற அமைப்பில் அதிநவீன ரேடியோ அதிர்வெண் (RFID) சென்சார்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஏஎன்பிஆர் (ANPR - Automatic Number Plate Recognition) கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    தானாகப் பணம் கழிப்பு: வாகனம் அந்த இடத்தை கடக்கும் போது, கேமராவும் சென்சாரும் காரில் உள்ள ஃபாஸ்டேக் மற்றும் வண்டியின் பதிவு எண்ணை நொடிப் பொழுதில் ஸ்கேன் செய்துவிடும். கட்டணம் தானாகவே ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.

    தடை இல்லாத வேகம்: கார் நிற்க வேண்டியதில்லை; வேகத்தைக் குறைக்காமல் நேராகப் பறந்து செல்லலாம்.

    வாகன ஓட்டிகளுக்கு என்னென்ன நன்மைகள்?

    1. நேரம் மிச்சம்: வார இறுதி நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நேரங்களில் பரனூர் டோல்கேட்டில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவதி இனி முழுமையாக முடிவுக்கு வரும்.

    Advertisement

    2. எரிபொருள் மிச்சம்: வண்டியை ஸ்டார்ட் செய்து செய்து நிறுத்துவதால் அதிக பெட்ரோல், டீசல் வீணாகும். இப்போது தடையில்லாமல் செல்வதால் எரிபொருளும் மிச்சமாகும்.

    3. புகை மாசு குறையும்: டோல்கேட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே இடத்தில் நின்றுகொண்டு புகையைக் கக்குவது தடுக்கப்படும்.

    ஃபாஸ்டேக் இல்லை என்றால் என்ன நடக்கும்?

    இந்த புதிய வசதியில் ஃபாஸ்டேக் மிக முக்கியம். ஒருவேளை ஃபாஸ்டேக்கில் போதிய பணம் இல்லை என்றாலோ அல்லது காரில் ஃபாஸ்டேக் ஒட்டாமல் சென்றாலோ, அங்கே இருக்கும் அதிநவீன கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டை படம் பிடித்துவிடும்.

    அதன் மூலம் வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணுக்கு அபராதக் கட்டணச் சலான் (Challan) உடனடியாக அனுப்பப்படும். அடுத்த சுங்கச்சாவடிகளிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ அந்த அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே எப்போதும் ஃபாஸ்டேக் கணக்கில் போதிய இருப்புத் தொகையை வைத்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    அடுத்து எங்கெல்லாம் வரப்போகிறது?

    தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) இந்த முறையை முதற்கட்டமாகப் பரனூரில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடி மற்றும் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளிலும் இந்த MLFF முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

    அதேபோல் தாம்பரம் முதல் புழல் வரையிலான சென்னை பைபாஸ் சாலையிலும் வழக்கமான டோல்கேட்டுகளை அகற்றிவிட்டு இந்த புதிய டிஜிட்டல் முறையைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

    பரனூர் டோல்கேட்டின் இந்த அதிரடி மாற்றம், தென் மாவட்டங்களை நோக்கிப் பயணிக்கும் லட்சக்கணக்கான சென்னை மக்களுக்குப் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைத்து பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.

    English Summary

    TN’s First Barrier-Free Toll Gate: Paranur MLFF System Operational on Chennai-Trichy Highway, Zero Waiting Time