"இது" நடந்தால் யாருமே தங்கம் வாங்க மாட்டார்கள்.. அப்போ விலை பாதாளத்திற்கு போகுமா? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: நமது நாட்டில் முதல் சேமிப்பாகத் தங்கத்தையே மக்கள் கருதுகிறார்கள். இதனால் தங்கம் விலையில் ஏற்படும் சின்ன மாற்றங்கள் கூட கவனம் பெறும். இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் ரூ 8935 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் ஒரு சவரன் ரூ 71,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது
நமது நாட்டில் முதல் சேமிப்பாகத் தங்கத்தையே மக்கள் கருதுகிறார்கள். இதனால் தங்கம் விலையில் ஏற்படும் சின்ன மாற்றங்கள் கூட கவனம் பெறும். கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இரு நாட்களாக குறைந்தாலும் கூட நீண்ட கால நோக்கில் அது அதிகரிக்கவே செய்யும் என்பதாலேயே மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். அதேநேரம் தங்கத்தை மக்கள் வாங்கவில்லை என்றால் விலை தானாகக் குறைந்துவிடும் எனப் பலரும் சொல்லிக் கேட்டிருப்போம்.

ஆனந்த் சீனிவாசன்
உண்மையில் மக்கள் ஏன் தங்கத்தை வாங்குகிறார்கள்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.. அரசுக்கு எப்போதும் தங்கத்தைப் பிடிக்கவே பிடிக்காது.. இந்த அரசு என்றில்லை.. எந்தவொரு அரசுக்கும் தங்கத்தைப் பிடிக்காது. நீங்கள் புரோடக்டிவ் சொத்துக்களை (productive assets) நான்- புரோடக்டிவ் சொத்துக்களாக (non-productive assets) மாற்றுகிறோம்.
நீங்கள் பங்குகளை வைத்திருந்தாலோ அல்லது கடன் பத்திரங்கள் வைத்திருந்தாலோ அல்லது பிக்சுடு டெபாசிட்டாக இருந்தாலும் பணம் நமது பொருளாதாரத்திற்குள் ரோடெஷனில், சர்குலேஷனில் இருக்கிறது என அர்த்தம். அதேநேரம் நீங்கள் தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ மாற்றினால் அது சர்குலேஷனில் இருந்து வெளியே போய் நான்- புரோடக்டிவ் சொத்துக்களாக மாறிவிடுகிறது.
அரசு தடுக்கவே செய்யும்
நீங்கள் ரியல் எஸ்டேட்டில் பணத்தைப் போட்டால் கூட அதில் எப்போதாவது கட்டிடம் வரும். ஒரு பொருளாதார நடவடிக்கை இருக்கும். ஆனால், தங்கம் வெள்ளியில் எதுவும் நடக்காது. எனவே, சர்குலேஷனில் இருக்கும் பணம் நான்- புரோடக்டிவ் சொத்துக்களாக மாறுவதை எந்தவொரு அரசாக இருந்தாலும் தடுக்கவே முயற்சி செய்யும்.
அப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்.. ஏன் ரிசரவ் வங்கி உள்ளிட்ட மத்திய வங்கிகள் மட்டும் தங்கத்தை வாங்கி குவிக்கிறது என்று சந்தேகம் வரும். பொதுவாக ரிசர்வ் கரன்சியாக மத்திய வங்கிகள் வைத்திருப்பார்கள். டாலருடன் சேர்த்துத் தங்கத்தை மட்டுமே ரிசர்வ் கரன்சியாக வைத்திருக்க முடியும். சீன கரன்சியை எல்லாம் வைத்திருக்க முடியாது. இதன் காரணமாகவே அவர்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்.
பணத்தை அரசு உருவாக்க முடியாது
நம்மில் பெரும்பாலானோர் அரசுக்குப் பணம் நிறைய இருக்கிறது. அரசு நினைத்தால் எதையும் செய்யலாம் என நினைப்போம். ஆனால், அப்படி இல்லை. எந்தவொரு அரசால் பணத்தை உருவாக்க முடியாது. ரிசர்வ் வங்கி உள்ளிட்ட மற்ற வங்கிகள் இணைந்தே பணத்தை உருவாக்கும். அரசு கூடுதலாகக் கடனை வாங்கலாம். அதை மட்டுமே செய்ய முடியும்! பணம் சர்குலேஷனில் குறைந்து.. எல்லாம் தங்கத்தில் போய்விட்டால் அரசு தான் வாங்கிய கடனுக்கே அதிக வட்டி கொடுக்க வேண்டும்.
அமெரிக்காவில் 10 ஆண்டு கடன் பத்திரத்திற்கு அந்நாட்டு அரசு 4.5 முதல் 5% வரை மட்டுமே வட்டி இருக்கும். ஆனால், இந்தியாவில் அதே கடன் பத்திரத்திற்கு நமது 7.5% வரை வட்டி தர வேண்டும். மார்கெட்டிற்கு அந்த குறிப்பிட்ட கரன்சியில் எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ரூபாயில் சேமிப்பை வைத்திருந்தால் பணவீக்கத்தில் பணத்தின் மதிப்பு போய்விடும் என்பதாலேயே மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்.
இது நடந்தால் தங்கம் வாங்குவது குறையும்
வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டுமே தங்கம் வாங்குவது குறையும். பிக்சுடு டெபாசிட்டிலேயே நல்ல வட்டி கிடைக்கும் என்றால் யாருமே தங்கத்தை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். ரூபாய் மதிப்பை உயர்த்தி, மக்கள் தங்கத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றால் வட்டி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும். வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் பணவீக்கம் சரியும்.. ஆனால், பொருளாதாரம் படாத பாடுபடும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications