டிரம்ப் தான் காரணம்.. விண்வெளிக்கே பறக்கும் தங்கம் விலை.. சர்வதேச அரசியலை விளக்கும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இந்தியாவில் தங்கம் விலை ரூ.8000ஐ தொடும் நிலையில், அதன் விலை குறையும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே மெல்லக் குறைந்தே வருகிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை எந்தளவுக்கு அதிகரிக்கும்.. அது உயர என்ன காரணம்.. இதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியல் ஆகியவை குறித்து விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 680 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று பிப்ரவரி 14ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7,990க்கு விற்பனையானது.

தங்கம் விலை
இப்போதே வரி எல்லாம் சேர்த்தால் தங்கத்தை வாங்க ரூ.8500 தர வேண்டிய சூழல் தான் இருக்கிறது. தொடர்ந்து இப்படி உச்சம் தொடுவதால் தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இருக்கிறதா என்றே கூட மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கிடையே தங்கம் விலை உயர்வு குறித்தும் அதன் பின்னால் உள்ள சர்வதேச காரணங்கள் குறித்தும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை மேலே ஏறிக்கொண்டே போகிறது. ராக்கெட்டை தாண்டி விண்வெளிக்கே போய்விட்டது எனக் கூடச் சொல்லலாம். அப்படிப் பறந்து கொண்டு இருக்கிறது. அடுத்து தங்கம் விலை ரூ.10 ஆயிரம் வரை போகும் என்றே நினைக்கிறேன். டிரம்ப் இருக்கும் வரை நாம் கவலையே பட வேண்டாம். அவர் நமக்காக விழுந்து விழுந்து வேலை செய்து வருகிறார்.
அதேபோல இங்கு ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பைக் காப்பாற்றுகிறேன் எனச் சொல்லி டாலரை விற்றுக் கொண்டே இருக்கிறது. பல பில்லியன் டாலரை விற்று வருகிறார்கள். ஆனால், ரூபாய் மதிப்பு சரிந்தே வருகிறது. இதுவும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது" என்றார்.
டிரம்ப் வரி அறிவிப்பு
அதேபோல அவர் மற்றொரு வீடியோவில், "தங்கம் விலை (பிப்ரவரி 14) ரூ.7990ஆக இருக்கிறது. வரியை எல்லாம் சேர்த்தால் கிட்டதட்ட ரூ.8500ஐ தாண்டிவிட்டது. தங்கம் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. டிரம்ப் அனைத்து நாடுகளுக்கும் ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதாவது நீ எனது பொருள் மீது எவ்வளவு வரி விதிக்கிறாயோ.. அதே அளவுக்கு நானும் பதிலுக்கு வரி போடுவேன் என்கிறார்.
அதிலும் குறிப்பாக இந்தியா தான் அதிக வரி விதிப்பதாகவும் அது குறித்து ஆலோசிக்கப் பிரதமர் மோடி ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிடுகிறார். விசா குறித்து எதாவது சொல்வார் எனப் பார்த்தால் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. மாறாக எஃப்5 விமானங்களை மட்டுமே தருவதாகக் கூறியிருக்கிறார். இந்தியாவுக்கு லாபம் எதுவும் இல்லை. இதுபோல வரி விதித்தால் அது இந்தியாவுக்குப் பெரிய நஷ்டமாகவே இருக்கும்" என்றார்.
தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்
அதாவது இதுபோல வரி விதிக்கப்பட்டு, அது சர்வதேச வணிகத்தைப் பாதிக்கும் சூழல் இருந்தால் தங்கம் விலை உயரவே செய்யும். டிரம்ப் தனது ஆட்சிக் காலம் முழுக்க இதுபோல வரி போட வாய்ப்புள்ள நிலையில், இதனால் தங்கமும் கூட அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கவே செய்வதாகப் பல பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications