"தங்கத்தை பதுக்குங்க! ஆனா.." ஆனந்த் சீனிவாசன் கொடுத்த முக்கியமான அட்வைஸ்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: தங்கம் விலை இப்போது நிலையாக இருந்தாலும் கூட அது எப்போது வேண்டும் என்றாலும் அதிகரிக்கும் என்ற நிலையே இருக்கிறது. இதற்கிடையே தங்கச் சேமிப்பு தொடர்பாக நீண்ட காலமாகவே பேசி வரும் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை தொடர்பாகவும் தங்கச் சேமிப்பு தொடர்பாகவும் சில முக்கியமான தகவல்களைக் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருக்கிறது. தங்கம் இப்படி மதில் மேல் பூனையாக இருப்பதால் பொதுமக்களும் கூட தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இன்றைய தினம் கூட சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்ததுள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 800 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனையாகிறது. இதற்கிடையே தங்கச் சேமிப்பு தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தங்கம் ஃபிளாட்டா இருக்கு. இன்டர்நேஷனல் மார்க்கெட்ல தங்கம் விழுந்திருந்தது, அதனால் இங்கேயும் விழும்னு நினைத்தேன். ஆனால், 24 கேரட் தங்கம் பெரிதாக விழவில்லை. நிலையாகவே இருக்கிறது. எப்போதும் நான் சொல்வது போல.. ரூபாய் மதிப்பு குறையும்போது,, தங்கம் கில்லி மாதிரி இருக்கும். இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலை விழுந்தாலும் இந்தியாவில் தங்கம் விலை விழாமல் அப்படியே மேலே இருக்கிறது.
தங்கத்தை பதுக்கணுமாம்
தங்கம் தான் எப்போதுமே உங்கள் ஆபத்பாந்தவன். கையில் இருக்கிற தங்கத்தைப் பத்திரமாக வைங்க. இன்னொன்னு சொல்லிவிடுகிறேன், அரசுக்கு, அது எந்தவொரு அரசாக இருந்தாலும் சரி, தங்கம் என்றாலே பிடிக்காது. அதனால் வாங்கும் தங்கத்தை பதுக்குங்க.. அதாவது தங்கத்தை முறையான பில் மற்றும் சர்டிபிகேட் உடன் வாங்கிப் பதுக்கி வைங்க. இதுதான் என்னோட அட்வைஸ். அமெரிக்காவில் 1930-40-களில் நடந்ததை மட்டும் மறந்துடாதீங்க!" என்று அவர் தெரிவித்தார்.
அதாவது ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யத் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதே அவரது கருத்து. அப்படித் தங்கத்தை வாங்கி, அதைப் பத்திரமாக வைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் சிக்கில்லாமல் இருக்கலாம் என்கிறார். அதுவும் டிஜிட்டல் கோல்ட் அது இது என இல்லாமல் தங்கமாக வாங்கி வைக்கச் சொல்கிறார். இதற்கு 1930-40களில் அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தையும் நினைவுகூருகிறார்.
என்ன நடந்தது
ஆனந்த் சீனிவாசன் அடிக்கடி குறிப்பிடும் 1930களின் அமெரிக்க நிகழ்வு என்பது அங்குப் பிறப்பிக்கப்பட்ட 'Executive Order 6102' மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளாகும். 1930-கள் இறுதியில் மற்றும் 1940-களின் தொடக்கத்தில், அமெரிக்காவில் பொதுமக்கள் தங்கம் வைத்திருப்பதைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இருந்தன. ஒருவர் 100 டாலர் மதிப்பிற்கு மேல் தங்கம் வைத்திருக்கக் கூடாது என்று அரசு தடை விதித்தது. கூடுதலாக இருக்கும் தங்கத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
மக்கள் வைத்திருந்த தங்கக் காசுகள் மற்றும் கட்டிகளை அரசு நிர்ணயித்த விலைக்குக் கொடுத்தாக வேண்டும். அரசு விலை என்பது சந்தை விலையை விட குறைவு. ஆனாலும், அரசு தங்கத்தைக் கட்டாயமாக வாங்கிக்கொண்டது. மீறுபவர்களுக்கு அபராதமும் சிறைத் தண்டனையும் கூட விதிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் இருந்த பொருளாதார சிக்கல் மற்றும் 2ம் உலகப் போர் நடந்து வந்த நிலையில், அதைச் சமாளிக்கவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
ஏன் முக்கியம்
அமெரிக்கா என்று இல்லை எந்தவொரு ஒரு நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் அல்லது போர்க் காலத்தில், நாட்டின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்ய மக்களின் சொத்துக்களை, குறிப்பாகத் தங்கத்தை, தன் வசப்படுத்த முயற்சிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஆனந்த் சீனிவாசன் இதனை ஏன் குறிப்பிடுகிறார் என்றால், தங்கம் என்பது ஒரு நாட்டின் கரன்சி மதிப்பை விடப் பலமானது. டிஜிட்டல் கோல்ட் அல்லது வங்கியில் இருக்கும் தங்கம் என்றால் அரசு ஒரே ஒரு 'கிளிக்' மூலம் முடக்கிவிடும். ஆனால் கையில் இருக்கும் தங்கத்திற்கு அப்படிச் செய்ய முடியாது. அதாவது தங்கத்தைப் பதுக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார் என்றால் அரசுக்குத் தெரியாமல் வாங்க வேண்டும் எனப் பொருளில்லை.. தங்கத்தை உரிய முறையில் பில் செலுத்தி, அரசுக்குக் கணக்குக் காட்டி வாங்கி, அதைப் பாதுகாப்பாக வையுங்கள் என்பதே அவரது கருத்தாகும்!












Click it and Unblock the Notifications