இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவு.. உச்சத்திற்கு பறக்கும் தங்கம் விலை.. இனி நிற்க வாய்ப்பே இல்லை!
சென்னை: தங்கம் விலை இப்போது வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. இந்தளவுக்குத் தங்கம் விலை உயரும் என நம்மில் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டோம். அதிலும் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.9520 உயர்ந்து ரூ.1.34 லட்சத்திற்கு உயர்ந்துள்ளது. சட்டென தங்கம் விலை இவ்வளவு உயர இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவே காரணமாகும். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த ஆண்டு மளமளவென உயர்ந்தது. கடந்த ஒரே ஆண்டில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிட்டத்தட்ட 70% வரை உயர்ந்திருந்தது. இந்தியாவில் ரூபாய் பலவீனமடைந்ததால் தங்கம் விலை இதை விட அதிகமாகவே உயர்ந்தது. சரி, 2025 தான் இப்படி ஆகிவிட்டது. 2026ல் ஆவது தங்கம் விலை சற்று நிம்மதியைக் கொடுக்கும் என்றால் இந்தாண்டு அதை விடப் பெரிய இடியை இறக்குகிறது.

தங்கம் விலை
ஜனவரி மாதம் கூட முடியவில்லை. அதற்குள் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 27% வரை உயர்ந்துவிட்டது. இந்தியாவிலும் அது நேரடியாக எதிரொலிக்கிறது. அதிலும் இன்றைய தினம் புதிய உச்சமாக ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 9520 உயர்ந்து ரூ.1.34 லட்சத்திற்கு உயர்ந்துள்ளது. அதேபோல வெள்ளியும் கூட தங்கத்தை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வேகமாகவே உயர்ந்து வருகிறது.
அமெரிக்கா எடுத்த முடிவு
இன்று தங்கம் விலை இந்தளவுக்கு உச்சம் தொட ஓவர்நைட்டில் அமெரிக்கா எடுத்த முடிவே பிரதானக் காரணம். அமெரிக்க மத்திய வங்கி, அதாவது ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறித்த முடிவை நள்ளிரவில் அறிவித்தது. அதில் வட்டி விகிதங்களை 3.5%-3.75% வரம்பில் மாற்றமின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டது.. இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முடிவு தான். இந்த முடிவால், தங்கத்தின் விலைகள் புதிய உச்சம் தொட்டன. ஒரு அவுன்ஸ் தங்கம் $5,500 தாண்டி வர்த்தகமாகிறது. அதுவே இப்போது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கிறது.
கடந்தாண்டு கடைசி 3 மீட்டிங்கில் அமெரிக்க மத்திய வங்கி தொடர்ச்சியாக 3 முறை வட்டியைக் குறைத்த நிலையில், இந்த முறை வட்டியைக் குறைக்காமல் இருந்தது. அமெரிக்க பெடல் கூட்டத்தில் இருவரைத் தவிர 10 பேர் வட்டி குறைப்பு வேண்டாம் என்றே வாக்களித்தனர். இதனால் வட்டி குறைப்பு முடிவு ஏற்படவில்லை. இது பலரும் எதிர்பார்த்தது தான் என்றாலும் அடுத்து ஃபெட் தலைவர் ஜெரோம் பவல் சொன்ன கருத்துகளும் முக்கியத்துவம் பெற்றது.
முக்கியம்
அதாவது ஜெரோம் பவல், அமெரிக்கப் பொருளாதாரம் உறுதியான அடித்தளத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், வேலைவாய்ப்பு குறைந்தளவே அதிகரித்தாலும் வேலையின்மை உயரவில்லை எனக் குறிப்பிட்டார். இதனால் வட்டி விகிதம் குறித்து எதிர்காலத்தில் தேவையான முடிவுகளை எடுக்கும் எனக் குறிப்பிட்டார். அதாவது எதிர்காலத்தில் வட்டி குறைப்பு இருக்குமா இல்லையா என்பதற்குத் தெளிவான பதிலை அளிக்கவில்லை. இதனால் அடுத்த மார்ச் மாதக் கூட்டத்திலேயே வட்டி குறைப்பு இருக்கும் என மார்கெட் நினைத்துவிட்டது. இதன் காரணமாகவே அமெரிக்கப் பங்குச்சந்தைகள் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் முடிந்தது.
காரணம் என்ன
மறுபுறம் அமெரிக்க பெட் வங்கியின் இந்த அறிவிப்போடு சேர்ந்து புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பலவீனமான டாலர் மதிப்பு ஆகியவையும் இணைந்து, தங்கம் விலையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு போய்விட்டது. டிரம்ப் என்ன தான் கிரீன்லாந்தை விட்டாலும் ஈரானைத் தொடர்ந்து மிரட்டியே வருகிறார். அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஈரான் பக்கம் போய் இருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மத்தியக் கிழக்கில் ஒரு பெரிய குழப்பமே ஏற்படும். இந்த அச்சமும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமான தங்கம் பக்கம் வர காரணமாக இருக்கிறது. இதுவே தங்கம் விலை உச்சத்திற்குப் பறக்கக் காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications