Infosys பங்குகள் 40% சரிவு.. ஆடிப்போன முதலீட்டாளர்கள்.. அப்போ ஐடி ஊழியர்கள் நிலைமை?
இந்திய ஐடி சேவை துறையின் 2வது பெரிய நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் பங்கு விலை கடந்த மூன்று நாட்களில் 11 சதவீதம் சரிந்துள்ளது. நேற்று வெளியான நான்காவது காலாண்டு முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தும் இன்று 6 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் இன்போசிஸ் பங்கு அதன் உச்ச விலையிலிருந்து சுமார் 40 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது என பிரபல ஆப்ஷன் டிரேடரான பிஆர் சுந்தர் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இந்த சரிவுக்கு முக்கிய காரணம் மார்ச் காலாண்டு முடிவுகள் அல்ல, மார்ச் காலாண்டு முடிவில் இந்நிறுவனம் அடுத்த ஆண்டுக்கான எதிர்கால வருவாய் மற்றும் லாப கணிப்புகள் (கைடன்ஸ்) தான் என்பது சந்தை வல்லுநர்களின் கருத்து.

நல்ல முடிவுகள், பங்கு விலை சரிவு ஏன்?
இன்போசிஸ் நேற்று வெளியிட்ட நான்காவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருந்தன. டாலர் அளவிலான வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 1.2 சதவீதம் குறைந்திருந்தாலும், வருமான வரி விகிதம் மூன்றாவது காலாண்டின் 27.77 சதவீதத்திலிருந்து 21.19 சதவீதமாக குறைந்தது. இது நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க உதவியது. இதேபோல் நிலையான நாணய அடிப்படையில் வருவாய் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனாலும் சந்தை இந்த முடிவுகளை சிறப்பானதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், எதிர்காலத்துக்கான வழிகாட்டுதல் மிகவும் குறைவாக இருந்தது.
FY27 கணிப்பு மிகவும் குறைந்தது
இன்போசிஸ் 2026-27 நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சியை நிலையான நாணய அடிப்படையில் (கான்ஸ்டன்ட் கரன்சி) 1.5 முதல் 3.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 முதல் 3.5 சதவீதம் என்று வழிகாட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. சந்தை எதிர்பார்ப்பு 2 முதல் 5 சதவீதம் வரை இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், இந்த காலாண்டில் புதிய ஒப்பந்த மதிப்பு (டிசிவி) 4.8 பில்லியன் டாலரிலிருந்து 3.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 8,440 ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதும் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அனைத்து காரணங்களும் சேர்ந்து பங்கு விலையை கீழே இழுத்துள்ளன.

உலகளாவிய சந்தை மனநிலை
இன்போசிஸ் போன்ற வலுவான நிறுவனத்தின் பங்கு 40 சதவீதம் வீழ்ச்சியடைவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இது நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்சனை அல்ல. உலகளாவிய சந்தை மனநிலை "ரிஸ்க்-ஆஃப்" (ஆபத்தை தவிர்க்கும்) நிலையில் உள்ளது.
கொரோனா காலத்துக்கு பிறகு ஐடி துறை பங்குகளின் மதிப்பு மீண்டும் சரிசெய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. ரூபாய் மதிப்பு அழுத்தம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (எஃப்ஐஐ) விற்பனை ஆகியவை இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
இன்போசிஸ் வணிகம் வலுவாக உள்ளது
இன்போசிஸ் நிறுவனம் இன்னும் பெரும் அளவில் பணத்தை உருவாக்கி வருகிறது. புதிய ஒப்பந்தங்களை வென்று வருகிறது. இந்தியாவின் மிக நம்பகமான நிறுவனங்களில் ஒன்றாகவே தொடர்கிறது. நிறுவனத்தின் அடிப்படை வலிமை மாறவில்லை. மாறியது சந்தை மனநிலை மட்டும்தான். இந்த மனநிலை மாற்றம் எப்போதும் மாறும் என்பது சந்தை வரலாறு.
இதேவேளையில் இன்போசிஸ் இந்த ஏஐ தொழில்நுட்ப பிரிவில் எந்தளவுக்கு வளர்கிறது என்பதை பொருத்தே இனி வரும் காலக்கட்டத்தில் இதன் வளர்ச்சி இருக்கும். இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு சிஇஓ தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது, இதுவும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
முக்கிய அட்வைஸ்
இந்திய ஐடி துறையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த பங்கு விலை சரிவை ஒரு வாய்ப்பாகவும் பார்க்கலாம். வலுவான நிறுவனம் உச்ச விலையிலிருந்து 40 சதவீதம் கீழே வரும்போது அது red flag இல்லை sale tag என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். இருப்பினும், இது முழுக்க முழுக்க சந்தை போக்குகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் ஐடி பங்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுவோர் 2 விஷயங்களை பார்க்க வேண்டும்.
1. இன்போசிஸ் ஏஐ துறையில் எந்தளவுக்கு புதிய வர்த்தகத்தை பெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
2. சர்வதேச முதலீட்டாளர்கள், முதலீட்டு வங்கிகள் இன்போசிஸ் நிறுவனத்தையும், நிர்வாகத்தையும் எப்படி அளவிடுகின்றனர். இதன் மூலம் புதிய முதலீடுகள் வருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications