அடேங்கப்பா.. ரூ.4,80,00,000 கோடி.. மீண்டும் சாதித்துக்காட்டிய Nvidia ஜென்சன் ஹுவாங்!
உலக தொழில்நுட்பத் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது என்விடியா (Nvidia). வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தக சந்தை முடிவில் இந்த சிப் தயாரிப்பு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலரை தாண்டி ரூ.4,80,00,000 கோடியை எட்டியது.
இதன் மூலம் உலகளவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மத்தியில் அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாக என்விடியா உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக 5 டிரில்லியன் டாலரை எட்டிய என்விடியா ஏஐ பபுள், வர்த்தக பாதிப்பு, சிப் தயாரிப்பில் மந்தநிலை என பல பிரச்சனைகளை எதிர்கொண்ட 5 டிரில்லியன் டாலர் நிலையை வேகமாக இழந்தது. தற்போது மீண்டும் தனது நிறுவனத்தின் திறனை முதலீட்டாளர்களுக்கு காட்டியுள்ளார் என்விடியா நிறுவனத்தின் தலைவர் ஜென்சன் ஹுவாங்.

என்விடியாவின் சந்தை மதிப்பு சுமார் 5.08 டிரில்லியன் டாலராக உள்ளது. இது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் - 4.1 டிரில்லியன் டாலர், ஆப்பிள் - 3.97 டிரில்லியன் டாலர், மைக்ரோசாப்ட் - 3.13 டிரில்லியன் டாலர் மற்றும் அமேசான் - 2.82 டிரில்லியன் டாலர் ஆகியவற்றை விட அதிகம்.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் என்விடியா பங்கு விலை 5.04 சதவீதம் உயர்ந்து 209.7 டாலருக்கு வர்த்தகமானது. இன்ட்ராடே வர்த்தகத்தில் 210.95 டாலர் என்ற உயரிய விலையைத் தொட்டது.
என்விடியாவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதன் கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட்கள் (GPUs). இந்த சிப்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை பயிற்றுவிக்கவும், இயக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், என்விடியா அதன் முக்கிய சப்ளையராக இருப்பது நிறுவனத்தின் வளர்ச்சியை கடந்த 5 வருடத்தில் பெரிய அளவில் வேகப்படுத்தியுள்ளது.
என்விடியா முதலில் வீடியோ கேமிங் மற்றும் கிராபிக்ஸ் தேவைக்கான GPUs-ஐ உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. 1990களில் பல்வேறு கிராபிக்ஸ் பிராசஸர்களை உருவாக்கியது. இதன் வாயிலாக சிறந்த பெயரைப் பெற்றது. மைக்ரோசாப்ட்டின் Xbox கேமிங் கன்சோலுக்கு ஹார்ட்வேர் உருவாக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்த அடித்தளம் தான் இன்று என்விடியாவை உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றியுள்ளது.
இதன் பின்பு இந்த GPU எடிட்டிங், கிராபிக்ஸ் போன்ற நேரம் அதிகம் எடுக்கும் சேவைகளுக்கு பூஸ்டராக பயன்படுத்தப்பட்டது. இதன் பின்பு ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு ஒட்டுமொத்த துறையும் ஒரே சப்ளையராக மாறியது என்விடியா. தற்போது என்விடியாவுக்கு போட்டியாக கூகுளின் டென்சார் சிப் சந்தையில் பிரபலமடைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications