தேவநாதன் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அவர் சிறையிலேயே இருக்கட்டும்! சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்

  • சென்னை: நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிறையில் உள்ள தேவநாதன் யாதவ் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் சில காட்டமான கருத்துகளை கூறியுள்ளது. தேவநாதன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா? சிறையிலேயே இருக்கட்டுமே என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி பொதுமக்கள் பலரும் புகாரளித்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    தேவநாதன் வழக்கு

    இந்த நிலையில் தேவநாதன் யாதவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாகவும், இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்றைய தினம் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதாகவும், தனது சொத்துக்களை விற்று பணத்தை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், இதை கேட்டவுடன் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் குறுக்கிட்டனர்.

    Advertisement

    சுதந்திர போராட்ட தியாகியா?

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "அவர் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா? சிறையிலேயே இருக்கட்டுமே" என காட்டமாக கருத்து தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் தங்களது பணத்தை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில், அந்த பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

    ரூ.100 கோடி டெபாசிட்

    முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தேவநாதன் யாதவ் நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி டெபாசிட் நிபந்தனையை கூட இதுவரை நிறைவேற்றவில்லை என வாதிட்டார். மேலும், அவர் சிறையில் இருந்தபோதிலும், சிறை கண்காணிப்பாளர் ஒப்புதலை பெற்று மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். உண்மையிலேயே முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி செலுத்தும் எண்ணம் இருந்தால், ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி டெபாசிட் நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    Advertisement

    இதை குறித்து கொண்ட நீதிபதி, தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Madras High Court has made strong observations in the Devanathan Yadav financial fraud case(தேவநாதன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்): Devanathan Yadav Case latest news in tamil.