எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. உச்ச நடிகர்களை தமிழக முதல்வராக்கும் ‘இலங்கை சென்டிமென்ட்’.. கவனிச்சீங்களா
சென்னை: தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களாக இருந்த எம்ஜிஆருக்கு பிறகு தற்போது விஜய் முதல்வராக உள்ளார். பல நடிகர்கள் கட்சிகளை தொடங்கினாலும் இவர்கள் 2 பேர் மட்டுமே முதல்வர் பதவியை எட்டிப்பிடித்துள்ளனர். இந்நிலையில் தான், இருவருக்கும் 'இலங்கை சென்டிமென்ட்' உதவி செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
தமிழகத்தை எடுத்து கொண்டால் நீண்டகாலம் ஆண்ட முதல்வர்களுக்கு திரைத்துறையுடன் நீண்டகாலம் தொடர்பு உள்ளது. திமுகவை எடுத்து கொண்டால் மறைந்த முதல்வர் அண்ணா, கருணாநிதி திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளனர். 'அவுட்கோயிங்' முதல்வர் ஸ்டாலின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் அதிமுகவை எடுத்து கொண்டால் எம்ஜிஆர் திரைத்துறையில் டாப் நடிகராக ஜொலித்தவர். அதேபோல் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் திரைத்துறையில் நடிகையாக வலம் வந்தவர். அந்த வரிசையில் தமிழ் திரையுலகில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய்யும் இன்று தமிழக முதல்வராகி உள்ளார்.
எம்ஜிஆர் - விஜய் இலங்கை சென்டிமென்ட்
தமிழகத்தில் நிறைய நடிகர்கள் பல கட்சிகளில் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் பல உச்ச நடிகர்கள் கட்சி தொடங்கி வெற்றி பெற முடியாமல் கலைத்த வரலாறுகள் உள்ளன. ஆனால் திரைத்துறையிலும் டாப் நடிகராக இருந்து அரசியலிலும் உயர் பதவியான முதல்வராக பதவியை எட்டிப்பிடித்த நடிர்கள் என்றால் எம்ஜிஆருக்கு பிறகு விஜய் தான். இந்நிலையில் தான் இருவருக்கும் 'இலங்கை சென்டிமென்ட்' உள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எம்ஜிஆர் இலங்கை தொடர்பு
இதில் கட்சி தொடங்கிய உடன் முதல்வரானவர்கள் என்றால் அது எம்ஜிஆர் மற்றும் விஜய் தான். எம்ஜிஆர் முதலில் திமுகவில் செயல்பட்டு வந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதியை முதல்வராக்கியதில் எம்ஜிஆர் பங்கு மிகவும் முக்கியமானது. அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து 1972ல் அக்டோபர் 10ல் எம்ஜிஆர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அடுத்த 7 நாளில் அவர் அதிமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கிய பிறகு அவர் சந்தித்த 1977 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். பிறகு 1980, அதன்பிறகு 1985 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வென்று ஹாட்ரிக் முறையில முதல்வரானார். இந்த எம்ஜிஆர் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் பிறந்தவர்.
விஜய் - இலங்கை என்ன தொடர்பு?
அதேபோல் இன்று முதல்வராகும் விஜய் கடந்த 2024 பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். அதன்பிறகு அவரது கட்சி முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு அமோக வெற்றி பெற்றது. மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட தனிப்பெரும் கட்சியாக உருவானது. இதையடுத்து பிற கட்சிகளின் உதவியுடன் இன்று விஜய் முதல்வராகிறார். இவருக்கும், இலங்கைக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. எம்ஜிஆர் இலங்கையில் பிறந்தது போல் விஜய்யின் மனைவி சங்கீதா(விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது) இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.
இணையதளங்களில் பரவும் தகவல்
தமிழகத்தில் நடிகர்களாக இருந்த சிவாஜி கணேசன், டிஆர் ராஜேந்தர், பாக்கியராஜ், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உள்பட பல நடிகர்கள் கட்சி தொடங்கி உள்ளனர். இதில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். டிஆர் ராஜேந்தர், சரத்குமார் எம்எல்ஏக்களாக செயல்பட்டுள்ளனர். இவர்களால் முதல்வர் பதவியை எட்டி பிடிக்க முடியவில்லை. ஆனால் எம்ஜிஆர், விஜய் ஆகியோர் முதல்வர் பதவியை எட்டிப்பிடித்த நிலையில் இருவருக்கம் இலங்கை சென்டிமென்ட் உள்ளதாக பலரும் இணையதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications