சென்னை: நிர்மலா சீதாராமன் சொன்ன ஒரு தகவல் தான் இப்போது UPI பயன்படுத்தும் பலரது கவனத்தையும் திருப்பியுள்ளது. ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் இனிமேல் கூடுதல் கட்டணம் வந்துவிடுமோ என்ற குழப்பம் கடந்த சில வாரங்களாகவே இருந்து வந்தது... இப்போது அதற்கான விதிமுறைகள் வெளியாகியுள்ள நிலையில், அந்தக் கட்டணத்தை யார் செலுத்த வேண்டும் என்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் எனப்படும் கட்டணம் கொண்டு வருவது குறித்து கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதியே தகவல் வெளியானது.
அப்போது, இந்தக் கட்டணம் பொதுமக்களிடம் வசூலிக்கப்படாது என்றும், குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஆனால், எவ்வளவு கட்டணம், எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு அது பொருந்தும் என்பது அப்போது தெளிவாகவில்லை. இந்நிலையில், இப்போது அதற்கான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரூ.2000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். பரிவர்த்தனை தொகை ரூ.75,000 அல்லது அதற்கு மேல் இருந்தாலும், அதிகபட்சமாக ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் தனியாக வசூலிக்கக்கூடாது என்பதுதான் முக்கியமான விஷயம். ரூ.2000-க்கும் குறைவான வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் கிடையாது. அதேபோல், ஒருவர் இன்னொருவருக்கு பணம் அனுப்பும் தனிநபர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் இந்தக் கட்டணம் கிடையாது. இதனால் சுமார் 96 சதவீத வணிக UPI பரிவர்த்தனைகள் புதிய கட்டணத்தால் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒருவர் ரூ.5,000 மதிப்புள்ள பொருளை யுபிஐ மூலம் வாங்குகிறார் என்றால், அந்தப் பொருளுக்கான ரூ.5,000 மற்றும் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி மட்டுமே அவர் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் தனியாக வசூலிக்கக் கூடாது. அதேபோல், சில குறிப்பிட்ட துறைகளுக்கு வேறு கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 என்ற ஒரே கட்டணமும், பங்குச்சந்தை தொடர்பான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீதமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது நிர்மலா சீதாராமன் மீண்டும் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அதில், "இது வரியோ, செஸ் எனப்படும் கூடுதல் வரியோ கிடையாது. இந்தத் தொகை அரசின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லாது. இந்தக் கட்டணத்தை செலுத்துபவர் வணிகர்தான். வாடிக்கையாளர் மீது இந்தக் கட்டணம் சுமத்தப்படாது. ரூ.2,000-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு வணிகரிடம்கூட இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்தத் தொகை வங்கிகள், க்யூஆர் சேவை வழங்குநர்கள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட யுபிஐ அமைப்பில் உள்ளவர்களுக்கு இடையே பகிரப்படும். தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், பேமெண்ட் வங்கிகள் முடிவை, நாங்கள்தான் திணித்ததாக சொல்ல முயற்சிக்கிறீர்கள். இப்போது, நாங்கள் ஏதோ அழுத்தத்தின் காரணமாக இதை செய்ததாக விளம்பரங்கள் மூலம் சொல்கிறார்கள்.. கோவிட் தொற்று போர்களையும் எதிர்கொண்டு, இந்தியாவின் இறையாண்மையையும் காத்து பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்கிறோம். இது நான் விதிக்கும் வரியும் கிடையாது.. எதிர்க்கட்சிகளிடம் இது குறித்து எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார்கள்.. இந்த அரசின் மீது தேவையில்லாமல் பழி சுமத்துகிறார்கள்" என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதாவது, ரூ.2000-க்கு மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் வாடிக்கையாளரிடம் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று அர்த்தம் இல்லை. குறிப்பிட்ட பெரிய வணிகப் பரிவர்த்தனைகளில் கட்டணம் செலுத்த வேண்டியது வணிகர்தான் என்பதே மத்திய நிதியமைச்சரின் விளக்கமாகும்..!!!யுபிஐ கட்டணம்
வாடிக்கையாளரிடம் வசூலிக்கக்கூடாது
நிர்மலா சீதாராமன் மீண்டும் விளக்கம்
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு