சிங்காரவேலன் கம்ப்யூட்டருக்கே டஃப் கொடுத்த ஏஐ! 19 ஆண்டுக்கு பிறகு மாட்டிய ஷேக் அப்துல்லா

  • சென்னை: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கொலை வழக்கு குற்றவாளி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை திருவொற்றியூரில் 2007 ஆம் ஆண்டு யாதவர் சங்கத் தலைவர் பாண்டியமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஷேக் அப்துல்லா என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்துள்ளார். அவரை பிடிக்க பொன்னேரி நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ஷேக் அப்துல்லாவை தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார், தேடி வந்தனர். ஆனால் அவர கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரை தேடும் பணிகள் தொடர்ந்தன.

    அந்த வகையில் அவர் கைது செய்யப்பட்ட போது எடுத்த படத்தை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தற்போது அவர் எப்படி இருப்பார் என்பதை வடிவமைத்தனர். அதில் கிடைத்த படத்தை கொண்டு வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அவரை தேடி வந்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சூளைமேடு அருகே ஷேக் அப்துல்லா போல் இருக்கும் ஒரு நபரை பிடித்துள்ளனர். அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு முரணாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர்தான் ஷேக் அப்துல்லா என தெரியவந்தது.

    19 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அவர், அடிக்கடி இடங்களை மாற்றி மாற்றி இருந்துள்ளாராம். தற்போது திருமணம் செய்து கொண்டு திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருகிறார். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறாராம். விசாரணைக்கு பிறகு ஷேக் அப்துல்லாவை, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Advertisement

    பழைய குற்றவாளிகளுக்கு தங்களது அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருவதை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது உண்மையில் அது போல் நடந்துள்ளது.

    இது போல் சிங்காரவேலன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மாமா மகள் சுமதியின் (குஷ்பு) சிறிய வயது புகைப்படத்தை கம்ப்யூட்டர் சென்டரில் கொடுத்து அவர் 18 வயதில் எப்படி இருப்பார் என்பதை காமெடி கலந்து காட்டுவார்கள். அப்போது யதார்த்தமாக காட்டப்பட்டது, இது போல் செய்ய முடியுமா என யோசித்த காலம்! ஆனால் இன்று ஏஐ எல்லாவற்றையும் செய்து விடுகிறது.

    English Summary

    Police found an accused in Chennai using AI technology who was fled away before 19 years.