திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி திறந்து செயல்பட்டு வருவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இந்த புகைப்படங்களை பதிவிட்டு கருத்து பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், கூறுகையில், இரவு நேரங்களிலும் ராதாபுரம் அலுவலகம் திறக்கப்படுகிறது என்றும். சில நிலபுரோக்கர்கள் உள்ளே சென்று வருவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். இதுபற்றி சார்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட நிர்வாகம் விளக்கம் தந்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.
சர்பதிவாளர் அலுவலகங்களில் நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள் அல்லது விற்பவர்கள் சட்டப்படி பதிவு செய்யும் இடமாக இருக்கிறது. அதேபோல் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளவும், ரத்த உறவுகளுக்குச் சொத்தைத் தானமாக வழங்குவதை பதிவு செய்யும் இடமாகும் சர்பதிவாளர் அலுவலங்கள் இருக்கின்றன. அதேபோல் ஒருவர் தனது சொத்தின் மீதான அதிகாரத்தை பகிர்ந்த தரும் பவர் ஆப் அட்டர்னி எனப்படும் பவர் அதிகாரம் எழுதி தரவும் பத்திரப்பதிவு அலுவலகம் வருகிறார்கள்.
அத்துடன் இந்து திருமணச் சட்டம், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறும் திருமணங்களைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து திருமண சான்றிதழ் வாங்கவும் சர்பதிவாளர் அலுவலகம் தான் வர வேண்டும். வில்லங்கச்சான்று, பட்டா, சிட்டா, அடங்கல் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அறிய முடியும். பொதுவாக சார்பதிவாளர் அலுவலகங்கள் காலையில் 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை இயங்குவது வழக்கம் ஆகும். திங்கள் முதல் வெள்ளி வரை தான் இயங்கும். அதேநேரம் சுபமுகூர்த்த தினங்கள் என்றால் மட்டும் சனி, ஞாயிறுகளில் கூட சர்பதிவாளர் அலுவலங்கள் இயங்கும். மக்களின் தேவைக்காக சர்பதிவாளர் அலுவலங்கள் சிறப்பு டோக்கன் தந்து பத்திரப்பதிவு செய்வதும் வழக்கம். அதேபோல் வார நாட்களில் வேலைக்கு செல்பவர்கள் வாரஇறுதியில் பத்திரப்பதிவு செய்யவும் விரும்புவார்கள். அவர்களின் வதிக்காக தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பத்திரப்பதிவு அலுவலகங்களை பொறுத்தவரை ஒரு நாளும் இரவு நேரங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுவது இல்லை.. இரவு நேரங்களில் பத்திரப்பதிவு அலுவலங்கள் தமிழ்நாட்டில் எங்குமே திறந்து இருக்காது. இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி திறந்து செயல்பட்டு வருவதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. நள்ளிரவு நேரங்களிலும் இந்த அலுவலகம் திறந்து சில நிலபுரோக்கர்கள் உள்ளே சென்று வருவதாக சமூக வலைதளங்களில் சிலர் கடந்த மூன்று நாட்களாக குற்றம்சாட்டி பதிவிட்டு வருகிறார்கள். ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலமாக நிலங்களைப் பறிமுதல் செய்வதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் பகிரும் புகைப்படத்தில் உள்ள நேரம் தவறாக காண்பிக்கிறது. அதேபோல் சார்பதிவாளர் அலுவலகங்கள் இரவில் இயங்கும் வாய்ப்பு குறைவு... குறிப்பிட்ட நாளில் என்ன நடந்தது என்பதை சார்பதிவாளர் அலுவலகம் விளக்கம் தந்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். ஏனெனில் இன்றைய சூழலில் பிடிக்காத அதிகாரிகள் குறித்தும் சிலர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதும் நடக்கிறது. அதிகாரிகள் தரப்போ அல்லது மாவட்ட நிர்வாகமோ விளக்கம் அளித்தால் தான் உண்மை தெரியவரும்.