51 வயதில் முதல்வராகும் விஜய்! தமிழகத்தின் இளம் வயது முதல்வர் யார்? அவங்களா? ஆச்சர்யமா இருக்கே!
சென்னை: தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 51 வயதில் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில் தமிழகத்தின் இளம் வயது முதல்வரா விஜய்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உண்மையில், விஜய் இளம் வயது முதல்வராக பதவி ஏற்கவில்லை. விஜய்யை விட குறைந்த வயதில் பதவி ஏற்ற இரு பெரும் ஜாம்பவான்கள் இருக்கின்றனர். அவர்கள் யார்? என்பது குறித்து பார்ப்போம்..
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வராக பதவியேற்ற தலைவர்களின் வயது எப்போதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இளம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் முதல் நீண்ட அரசியல் அனுபவத்துக்குப் பிறகு முதல்வரானவர்கள் வரை பல்வேறு தலைவர்கள் தமிழகத்தை வழிநடத்தியுள்ளனர்.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் அவர் தமிழகத்தின் இளம் வயது முதல்வரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் வரலாறு அப்படி சொல்லவில்லை .விஜய்க்கு 51 வயதாகும் நிலையில் அதைவிட குறைந்த வயதிலேயே ஆட்சியைப் பிடித்தவர்கள் தமிழக வரலாற்றில் உள்ளன.
அவர்கள் யார் என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
காங்கிரஸ் ஆட்சியில், அதாவது திராவிட கழகங்கள் வருவதற்கு முன்னதாக பலர் ஆட்சியிலிருந்தாலும், குறிப்பிடத்தக்க தலைவர் என்றால் அது காமராஜர் தான். காமராஜர் 50 வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றார். எளிமை, கல்வி வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறன் காரணமாக "கல்வி கண் திறந்த தலைவர்" என்ற பெயரை பெற்றார்.
அறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கு 57 வயது. காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுகவை முதன்முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்த தலைவராக அண்ணா வரலாற்றில் இடம்பிடித்தார்.
மிக இளம் வயதில் முதலமைச்சரானவர்களில் முக்கியமானவர் கருணாநிதி. 1969ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்றபோது அவருக்கு வயது 44 மட்டுமே. அண்ணா மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்ற கருணாநிதி, தமிழக அரசியலில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய தலைவராக உருவெடுத்தார்.
பின்னர் திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றிகரமாக ஆட்சியை பிடித்தவர் எம்ஜிஆர். அவர் 1977ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற போது 60 வயதில் இருந்தார். மக்கள் மனதில் தனி இடம் பிடித்த எம்ஜிஆர் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை தக்க வைத்தார் என்பது வரலாறு.
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரான ஜெயலலிதா 43 வயதில் முதல்வராக பதவியேற்றார். மிகவும் இளம் வயதில் ஆட்சியை பிடித்த தலைவர்களில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார். பின்னர் தமிழக அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவானார்.
ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கு 50 வயது. ஜெயலலிதா பதவி விலகிய சூழலில் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்று பின்னர் தமிழக அரசியலில் முக்கிய முகமாக மாறினார்.
எடப்பாடி பழனிசாமி 62 வயதில் முதலமைச்சராக பதவியேற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட கடுமையான அரசியல் குழப்பத்துக்கிடையே முதல்வரானார்.
மு.க.ஸ்டாலின் நீண்ட அரசியல் அனுபவத்துக்குப் பிறகு 68 வயதில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். திமுக இளைஞரணி செயலாளர் முதல் மேயர், துணை முதல்வர் என பல கட்டங்களை கடந்த பிறகே அவர் முதல்வர் பதவியை அடைந்தார்.
தற்போது நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் 51 வயதில் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக பேசப்படுகிறது. அரசியலுக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்திருப்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்திற்குப் பிறகு அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின் போன்றோர் முதல்வரான நிலையில், மிகக் குறுகிய கால அரசியல் பயணத்திலேயே விஜய் ஆட்சியை பிடித்திருப்பது புதிய அரசியல் அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications