அக். 6 தேர்தல்.. விநாயகர் சதுர்த்தியால் வந்த சிக்கல்! தேதியை மாற்ற வேண்டும் என கேட்பது யார் பாருங்க

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தியால் பக்தர்கள் ஊர்வலம் செல்லவும், வியாபாரிகள் தொழில் செய்யவும் தேர்தல் விதிமுறைகள் சிக்கலை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழலில், அதிமுகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா உள்ளிட்டோர் ராஜினாமா செய்ததை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியாகின.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

    இதையடுத்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 9 முதல் அதாவது இன்று முதல் 16-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.

    அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தல் நடத்தும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.. .

    அக்டோபர் 6 வாக்குப்பதிவு

    தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், திமுகவும் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

    Advertisement

    இந்த சூழலில், இடைத்தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்பதே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் முக்கிய கோரிக்கையாக கிளம்பி உள்ளது.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா

    மேலும், வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளால் விழாவை முன்னிட்டு நடைபெறும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக விநாயகர் சிலைகள் விற்பனை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    Advertisement

    அதேபோல், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதிலும், பக்தர்கள் ஊர்வலமாக செல்வதிலும் தேர்தல் விதிமுறைகள் காரணமாக நடைமுறை சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    ஒருபுறம் தேர்தல் பணிகளும், மறுபுறம் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளும் நடைபெறுவதால் பக்தர்களும் வியாபாரிகளும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்து, மாற்று தேதியை அறிவிக்க வேண்டும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் தேதியை மாற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..!!!

    English Summary

    Maduranthakam, Dharapuram By Elections.. October 6 Polling, Key Demand Raised Over Vinayagar Chaturthi