அமித் ஷா பற்றி அந்த ஒரு சொல்! சுல்தான்பூர் கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆதாரங்களை தாக்கல் செய்வாரா

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தின் எம்.பி. - எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு இன்று மார்ச் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.. கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி நேரில் ஆஜராகி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் இந்த விசாரணையானது, தேசிய அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன? கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது..

Rahul Gandhi Amit Shah Sultanpur Court

அமித் ஷா பற்றி சர்ச்சை பேச்சு

அப்போது பாஜக தேசியத் தலைவராக பொறுப்பு வகித்த அமித் ஷாவை, "கொலை வழக்கின் குற்றவாளி" என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் 2018 ஆகஸ்ட் மாதம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தார்..

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்து வந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.. அந்த சமயத்தில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி பகுதியில் தன்னுடைய "இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை" மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்..

ராகுல் காந்தி வாக்குமூலம்

அன்று காலை 10.40 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த ராகுல் காந்தி, சரியாக 11.15 மணியளவில் நீதிபதி முன்னிலையில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்..

அப்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதோடு, அவரது தரப்பு வாதங்களுக்கு ஆதரவாகத் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.. மேலும் வழக்கை மார்ச் 9ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் கூறியிருந்தது..

அந்த உத்தரவின் அடிப்படையில்தான், இன்று நடைபெறும் விசாரணையில் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா தரப்பிலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன..

திட்டமிட்ட அவதூறு

இந்த வழக்கைப் பொறுத்தவரை, இது ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது.. பாஜக தரப்பில் இது திட்டமிட்ட அவதூறு என்றும், ஒரு தேசியக் கட்சியின் தலைவரை பற்றி பொதுவெளியில் தவறான தகவல்களைப் பரப்பியதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வாதிடப்படுகிறது..

அதேசமயம், "சத்யமேவ ஜயதே" என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சியினர் இந்த வழக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்து வருகின்றனர்..

கடந்த முறை ராகுல் ஆஜரானபோது சுல்தான்பூர் நகரெங்கும், காங்கிரஸ் தொண்டர்கள் இந்த போஸ்டர்களைதான் ஒட்டி, தங்கள் ஆதரவைத் திரட்டினர்..

சுல்தான்பூர் கோர்ட்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வருகிறது.. இன்றைய விசாரணையின்போது ராகுல் காந்தி தரப்பில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்திற்குத் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், இந்த வழக்கின் போக்கில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.. ஆதாரங்கள் வலுவாக இருக்கும் நிலையில், வழக்கின் இறுதி வாதங்களுக்கான தேதியை நீதிமன்றம் இன்று அறிவிக்கக்கூடும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

இன்றைய விசாரணையில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவாரா அல்லது அவரது வழக்கறிஞர்கள் மூலம் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பும் நிலவுகிறது..

சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள்?

மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த வழக்கின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.. உத்தரப் பிரதேசத்தின் அரசியல் சூழலில் இந்த வழக்கு காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலான ஒரு நேரடி மோதலாகவே உருவெடுத்துள்ளது..

எனவே, இன்று சமர்ப்பிக்கப்படும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களைப் பொறுத்தே இந்த அவதூறு வழக்கின் அடுத்தகட்ட நகர்வு தீர்மானிக்கப்படும் என்பதால், ஒட்டுமொத்த இந்திய அரசியலின் பார்வையும் இப்போது சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தின் மீதே குவிந்துள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+