கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத இந்தியா.. 49 வருடத்தில் முதல் முறை.. கைவிட்ட கேரள மக்கள்!
தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் கேரளா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 140 தொகுதிகளில் 100 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 71 இடங்களை எளிதாகத் தாண்டும் அளவுக்கு யுடிஎஃப் வலுவான நிலையில் உள்ளதால் கேரளாவில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த பிறகு தற்போதையை தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
2016 முதல் ஆட்சியில் இருந்த எல்டிஎஃப் அரசு தற்போது அரியணையை விட்டு இறங்கியுள்ளது. கேரளா இதுவரை இடதுசாரி அரசியலின் வலுவான தளமாகக் கருதப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

கடைசி கோட்டை
கேரளா இடதுசாரி அரசியலுக்கு மிகவும் முக்கியமானது. மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரிகள் ஆட்சியை இழந்த பிறகும், கேரளா மட்டும் தொடர்ந்து இடதுசாரிகளுக்கு வலுவான ஆதரவைத் தந்து வந்தது. இதனாலேயே கேரளா இடதுசாரிகளின் 'கடைசி கோட்டை' என்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் 1977-க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இடதுசாரி அரசு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
மேற்கு வங்கம்
இடதுசாரிகளின் வீழ்ச்சியைப் புரிந்துகொள்ள மேற்கு வங்கத்தின் வரலாறு முக்கியமானது. 1977-ல் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அங்கு ஆட்சிக்கு வந்து 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தது. இது உலக அளவில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து இடதுசாரி அரசுகளில் ஒன்றாகும்.
ஜோதி பாசு 1977 ஜூன் 21 முதல் 2000 நவம்பர் 6 வரை 23 ஆண்டுகளுக்கு மேல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். அதன் பிறகு புத்ததேப் பட்டாசார்ஜி 2011 வரை ஆட்சியைத் தொடர்ந்தார். 2011-ல் ஆட்சியை இழந்த பிறகு, அந்தக் கட்சி மீண்டு வர முடியவில்லை. 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் அது வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
திரிபுரா
மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலமான திரிபுராவும் இடதுசாரிகளின் வலுவான தளமாக இருந்தது. 1978 முதல் 1988 வரையும், 1993 முதல் 2018 வரையும் இடதுசாரிகள் ஆட்சி செய்தனர். என்.ரிபன் சக்ரவர்த்தி, தாசரத் தேப், மணிக் சர்க்கார் ஆகியோர் அந்த மாநிலத்தின் முதலமைச்சர்களாகப் பணியாற்றினர். 2018-ல் ஆட்சியை இழந்த பிறகு, அவர்களின் செல்வாக்கு பெருமளவு குறைந்தது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தற்போது சிபிஐஎம் வெறும் 11 இடங்களில் மட்டுமே உள்ளது.
கேரளா
கேரளாவில் இடதுசாரி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிகள் மாறி மாறி வந்துள்ளன. 1957-1959, 1967-1977, 1996-2001, 2006-2011, 2016-2021 ஆகிய காலகட்டங்களில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தனர். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், இ.கே. நாயர், பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்று இடதுசாரிகளிழ் ஆட்சி வலுவலாக இருந்தன. பினராயி விஜயன் தலைமையில் இரண்டு தொடர்ச்சியான ஆட்சிகள் அமைந்தது கேரளா வரலாற்றில் அரிதான சம்பவமாகும்.
செல்வாக்கு குறைந்தது
தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹீமாச்சலப் பிரதேசம், பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் இருந்தன. ஆனால் மாநில கட்சிகள் மற்றும் மத்திய கட்சிகளின் போட்டிக்கு மத்தியில் இடதுசாரிகள் கட்சிகள் காணாமல் போனது.
தற்போது கேரளாவும் இடதுசாரிகளின் கைகளில் இருந்து வெளியேறியதால், இந்திய அரசியலில் ஒரு இடதுசாரிகளின் யுகம் முடிவுக்கு வந்ததா என்ற கேள்வி எழுந்தள்ளது.












Click it and Unblock the Notifications