மோடிக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்கு வங்கம்.. மீண்டும் மம்தா தான்! காங்கிரஸ் ரேஸிலேயே இல்லை! புது சர்வே
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அங்குள்ள கள நிலவரத்தைக் காட்டும் வகையில் இந்தியா டுடே சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாஜகவின் செல்வாக்கு சற்றே உயர்ந்திருந்தாலும் கூட மம்தாவின் பிடியே அங்கு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், காங்கிரஸ் அங்கு போட்டியிலேயே இல்லை என்பதும் தெளிவாகிறது.
தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கும் அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே அங்கு இப்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால், திரிணாமுல் காங்கிரஸ் தான் மேற்கு வங்கத்தில் வெல்லும் என்று இந்தியா டுடே சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் தான்
மம்தா தலைமையிலான திரிணாமுல் 2024ல் தான் வென்ற அனைத்துத் தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும் என்று இந்தியா டுடே-சிவோட்டர் மூட் ஆஃப் தி நேஷன் (MOTN) கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குள்ள அரசியல் சூழலை இது பிரதிபலிப்பதாக இருக்கிறது.
2024 லோக்சபா தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 29 இடங்களைப் பெற்று, 2019ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்தது. பாஜகவால் அங்கு 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
எவ்வளவு தொகுதிகள்?
2026 இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி, இன்று லோக்சபா தேர்தல் நடந்தால், திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி பெறும். அவர்கள் 2024ஐ விட ஒரு இடம் குறைவாக 28 தொகுதிகளில் வெல்வார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.. அதேநேரம், பாஜகவின் இடங்கள் சற்று அதிகரித்து 14 தொகுதிகளாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவின் இடங்கள் 11ஆக இருந்த நிலையில், இப்போது அது 14ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஆகஸ்ட் கருத்துக் கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சர்வேயில் அது 28 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மனநிலை
மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த சர்வே வந்துள்ளது. இது அங்கு வாக்காளர்களிடையே நிலவும் மனநிலையைக் காட்டுவதாகவே இருக்கிறது. மேலும், வரவிருக்கும் தேர்தலின் போக்கைப் புரிந்துகொள்ள இது உதவும். இந்த கருத்துக் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறும் வாக்குகள் மூன்று சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 39 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு வாய்ப்பில்லை
இது மக்களவைத் தேர்தல் தொடர்பான சர்வே தான் என்றாலும் மேற்கு வங்கத்தில் தற்போது மக்கள் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதைக் கண்டறிய இது உதவும். மேற்கு வங்கத்தில் பாஜக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதும் அங்குத் திரிணாமுல் செல்வாக்கு தொடர்ந்து நீடிக்கும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
மேற்கு வங்கம் மாநிலம் இப்போது இரு ஒரு இருமுனைப் போட்டியாக மாறி வருவதாகவும், வாக்காளர்கள் கடுமையாகப் பிளவுபட்டுள்ளதாகவும் சி-வோட்டர் நிறுவனர்-இயக்குநர் யஷ்வந்த் தேஷ்முக் குறிப்பிட்டார். மாநில அரசியல் களம் மேலும் துருவப்படுத்தப்படுவதை இது எடுத்துக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications