மானத்தை வாங்கிய.. மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதிரடியாக கைது.. விசாரணைக் குழு அமைப்பு!
கொல்கத்தா: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் டிக்கெட்டுக்கான கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெஸ்ஸி காணொளி மூலமாக திறந்து வைத்தார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் மெஸ்ஸி தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்காக டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் பெற்று மைதானத்திற்கு வந்திருந்தனர். ஒரு டிக்கெட் மதிப்பு ரூ.4,500 முதல் ரூ.12,500 வரை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் மெஸ்ஸி மைதானம் முழுக்க சுற்றி வந்து ரசிகர்களை சந்திப்பார் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா தெரிவித்திருந்தார்.
ஆனால் மைதானத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே தோன்றிய மெஸ்ஸி, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மெஸ்ஸி மைதானத்தில் இருந்த போதும், அவரை சுற்றி பிரபலங்களும், பாதுகாவலர்களும் சூழ்ந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தை சூறையாட தொடங்கினர். ஒரு கட்டத்தில் சால்ட் லேக் மைதானத்தில் வன்முறை வெடித்தது.
ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் தடியடி நடத்தினர். இதனால் ஏராளமான ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மெஸ்ஸியை பார்க்க வந்தோமா, கலவரத்தை பார்க்க வந்தோமா என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கினர். இதனையறிந்த மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி, உடனடியாக ரசிகர்கள் மற்றும் மெஸ்ஸியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அதேபோல் நிகழ்ச்சி சொதப்பல் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில் மெஸ்ஸி நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் மெஸ்ஸியின் இந்திய பயணத்திற்கு முக்கிய காரணமாகவும் இருப்பவர்.
இதற்கு முன் இந்தியாவுக்கு பீலே மற்றும் மாரடோனா ஆகியோர் வந்ததற்கும் இவர்தான் முக்கிய காரணம். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று கூடுதல் ஏடிஜிபி ஜாவேத் ஷமிம் தெரிவித்துள்ளார். இதனால் கொல்கத்தாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications