கடைசி நேரத்தில் சேர்ந்த 7 லட்சம் 'மர்ம' ஓட்டுகள்! தேர்தல் ஆணையத்தின் மௌனம்.. கலக்கத்தில் கட்சிகள்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தீதியா... இல்லை பாஜகவா என்பதே இப்போது பெரும் கேள்வியாக இருக்கிறது. அங்கு வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு புதிய புள்ளிவிவரம் அரசியல் கட்சிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் இப்போது அனல் பறக்கிறது. அங்கு ஒரு பக்கம் 4வது முறையாக முதல்வர் அரியணையில் இருக்க மம்தா களமிறங்குகிறார். இன்னொரு பக்கம் எப்படியாவது மம்தாவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. இதனால் அங்குப் போட்டியில் அனல் பிறக்கிறது.

தேர்தல் ஆணையம்
இந்தச் சூழலில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு புதிய புள்ளிவிவரம் அரசியல் கட்சிகள் இடையே பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலில் புதிதாக 7 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவர்களில் 3.22 லட்சம் பேர் முதற்கட்டத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மீதமுள்ள 3.88 லட்சம் பேர் இரண்டாம் கட்டத் தேர்தலில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். இதன் மூலம் மேற்கு வங்காளத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,82,51,008 ஆக உயர்ந்துள்ளது.
விவரம் இல்லை
இது தொடர்பான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதேநேரம் இந்தப் புதிய வாக்காளர்களின் வயது அல்லது பாலினம் குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது. இதில் எத்தனை பேர் 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள்? எத்தனை பேர் பெண்கள்? என்று எந்தவொரு விவரத்தையும் பகிரவில்லை. அதாவது இந்த வாக்காளர்கள் 18 வயது பூர்த்தியானதால் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட நபர்களா அல்லது இடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சேர்க்கப்பட்டார்களா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
அதேபோல, பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித்த 'ஃபார்ம்-6' (Form-6) மனுக்கள் எத்தனை? அதில் எத்தனை நிராகரிக்கப்பட்டன? என்ற கேள்விக்கும் முறையான பதில் இல்லை. இப்படி பல்வேறு கேள்விகளுக்கும் பதில் மர்மமாகவே இருக்கும் சூழலில், அங்குள்ள அரசியல் கட்சிகளும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளன.
கடும் போட்டி
மேற்கு வங்க தேர்தலில் இந்த முறை பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 5,000க்கும் குறைவாகவே இருக்கும். இந்தச் சூழலில், புதிதாகச் சேர்ந்துள்ள 7 லட்சம் வாக்காளர்கள் குறைந்தது 20 முதல் 30 தொகுதிகளின் தலையெழுத்தை மாற்றும் வலிமை கொண்டவர்கள். மம்தாவின் லக்ஷ்மிர் பண்டார் திட்டம் போன்றவற்றுக்குப் பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவு உண்டு. இதில் எத்தனை பேர் பெண்கள் என்று தெரிந்தால் மட்டுமே கட்சிகளால் தங்களின் தேர்தல் வியூகத்தை வகுக்க முடியும். ஆனால், தேர்தல் ஆணையம் இதில் மவுனம் காத்தே வருகிறது.
மேற்கு வங்கத்தில் இந்த முறை ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. அதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படவுள்ளது. அங்குத் தேர்தல் சுமுகமாக நடைபெறத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications