ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி! அமெரிக்க மோதலுக்கு நடுவே அறிவித்த ஈரான்
டெல்லி: ஈரான் - அமெரிக்கா இடையே ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்ட வர்த்தக கப்பல்கள் சென்று வர வசதியாக ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்பட்டு இருக்கும். இந்திய கப்பல்களுக்கு எந்த தடையும் இல்லை என்று ஈரானுக்கான இந்திய தூதர் முகமது ஃபதாலி அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மையப்படுத்தி ஈரானும், அமெரிக்காவும் மோதி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள நிலையில் ஈரானும் பதிலுக்கு படைகளை குவித்துள்ளது. அதோடு பல இடங்களில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்துள்ளது.

இதனால் தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், கேஸ் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய நம் நாடு பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் ஈரானுக்கான இந்திய தூதர் முகமது ஃபதாலி கூறியதாவது: ''அமெரிக்காவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஹார்முஸ் ஜலசந்தியை இந்திய கப்பல்கள் கடக்க எந்த தடையும் இல்லை. இந்திய வர்த்தக கப்பல்கள், கச்சா எண்ணெய், கேஸ் ஏற்றி செல்லும் கப்பல்கள் செல்ல ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறந்து இருக்கும்.
இந்தியா உட்பட எங்களின் நட்பு நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கு எந்தவித தடையும் இல்லை. இதுவரை பல இந்திய கப்பல்கள் முழு பாதுகாப்புடன் இந்த வழியே கடந்து சென்றுள்ளன, எதிர்காலத்திலும் இந்த நடைமுறை தொடரும். சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்வதில் ஈரான் உறுதியாக உள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் பங்கேற்காத நாடுகளின் கப்பல்கள் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லலாம்" என்றார். அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஈரானின் இந்த கருத்து நம் நாட்டுக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications