ஈரான் அனுப்பிய சர்ப்ரைஸ்.. மளமளவென குறைந்த க்ரூட் ஆயில் விலை.. இனி டிரம்ப் கையில் தான் எல்லாமே!
ஈரான் அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான தனது புதிய திட்டத்தை மத்தியஸ்த நாடான பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ வெள்ளிக்கிழமை இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈரான் - அமெரிக்கா தரப்பில் கொடுக்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தை இரு நாடுகளும் மறுத்துவிட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கும் வண்ணம் ஈரான் புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.

ஈரான் ஹார்முஸ் நீரிணையை முடக்கியதால் உலக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதம் பாதிக்கப்பட்டது. இதனால் உலக எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்த நிலையில், ஈரான் புதிய முன்மொழிவு அனுப்பிய செய்தி வெளியானதும் விலை குறைந்தது.
ஐஆர்என்ஏ அளித்த விவரங்கள் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த முன்மொழிவு இன்னும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதேவேலையில் நேற்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 126 டாலர் வரையில் உயர்ந்த நிலையில் இன்று 109 டாலர் வரையில் குறைந்துள்ளது.
ஈரான் பொருளாதாரம், நிதி நிலை, உணவு பொருட்கள் இருப்பு ஆகியவை மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதேபோல் அமெரிக்காவில் பெட்ரோல் விலை 2 டாலரில் 4.30 டாலர் அளவுக்கு ஈரானா போரால் உயர்ந்துள்ளது. இதேவேளையில் அந்நாட்டில் பொருளாதாரம், வர்த்தகம், பணவீக்கம் என அனைத்தும் மோசமான நிலையில் உள்ளது.
இதனாலேயே டிரம்ப் போர் தாக்குதலை நிறுத்திவிட்டு ஈரான் துறைமுகத்தை முற்றுகையிட்டுள்ளார். இதேவேளையில் ஈரானும் தற்போது பேச்சுவார்த்தைக்கு கதவுகளை திறந்துள்ளது.
ஏப்ரல் 8 போர்நிறுத்தம்
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் அமெரிக்க தளங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தொடர்புடைய நிறுவனங்களைத் தாக்கியது.
ஈரான் ஆதரவு லெபனான் குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு ஏவுகணைகளை ஏவ, இஸ்ரேல் லெபனானைத் தாக்கியது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்; பெரும்பாலும் ஈரான் மற்றும் லெபனானில் இஸ்ரேல் தாக்கியது.
ஏப்ரல் 8 முதல் போர்நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய ராணுவத் தாக்குதல் திட்டங்கள் குறித்து அறிவுறுத்தப்படுவார் என செய்திகள் வெளியானதால், வியாழக்கிழமை எண்ணெய் விலை நான்கு ஆண்டுகளில் உயர்ந்த உச்சத்தைத் தொட்டது.
ஈரான் ரெடி
ஈரான் மூத்த அதிகாரிகள் இருவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் அளித்த தகவலின்படி, மீண்டும் போர் துவங்கினால் பெரியதாக இருக்கும், எனவே ஈரான் வான்பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்தியுள்ளது மற்றும் பரந்த அளவிலான பதிலடி தாக்குதலைத் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் திட்டம் என்ன?
அமெரிக்கா அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை. டிரம்ப் செவ்வாய்க்கிழமை ஈரானின் முந்தைய அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தை முழுமையாக மறுத்தார். இதை பாகிஸ்தானில் இரு நாட்டு தலைவர்கள் சந்திக்க முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது.
அடுத்த டிவிஸ்ட்
அமெரிக்காவின் 1973 போர் அதிகாரத் தீர்மானத்தின்படி, வெள்ளிக்கிழமை வரை போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது அமெரிக்க நாடாளுமன்றத்தில் காங்கிரஸிடம் நீட்டிப்புக்கு விளக்கம் அளித்து போரை தொடர ஒப்புதல் பெற வேண்டும் என நெருக்கடி உள்ளது. இதனால் இன்றே 60 நாள் கால்கெடு முடிவதால் நாடாளுமன்ற கூட்டம் துவங்குவதற்கு முன்பு ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது முக்கியமான டிவிஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications