2008க்கு பிறகு பிறந்தவரா நீங்க? வாழ்நாள் முழுக்க உங்களால் "இதை" செய்ய முடியாது! வருகிறது புது சட்டம்
லண்டன்: புகைபிடித்தல் என்பது உலகெங்கும் மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மிக மோசான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதற்கிடையே பிரிட்டன் அரசு புகைபிடிப்பதைத் தடுக்க சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது அங்கு 2009க்கு பிறகு பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க எப்போதுமே சிகரெட் வாங்க முடியாத வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது..
கடந்த நூற்றாண்டில் ஆரம்பித்த உலகின் மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது புகை பிடிப்பது! அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஆரம்பித்துப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்துமே இந்த புகையிலை பிரச்சனையால் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டன. பல லட்சம் பேர் இன்றும் புகையிலையால் ஏற்படும் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்து வருகிறார்கள்.

சிகரெட்
இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் சிகரெட் உட்பட அனைத்து வகையான புகையிலை பழக்கத்தை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இலங்கை, நியூசிலாந்து நாடுகள் இதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே தற்போது இங்கிலாந்தும் புகையிலை ஒழிப்பில் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இளம் தலைமுறையினர் யாரும் தங்கள் வாழ்நாள் முழுக்க சிகரெட் வாங்கவே முடியாது.
யாருக்கெல்லாம் இந்தத் தடை?
இந்தச் சட்டத்தின்படி, ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த யாருக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். அதாவது, தற்போது 17 வயது அல்லது அதற்கு உட்பட்டோர் தங்கள் வாழ்நாளில் சிகரெட் வாங்க முடியாது. அவர்களுக்கு எவ்வளவு வயதானாலும் சிகரெட் வாங்கும் சட்டப்பூர்வ உரிமையைப் பெற மாட்டார்கள். இதன் மூலம் ஒரு புகையில்லா தலைமுறையை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
சிகரெட் மட்டுமின்றி, 'வேப்பிங்' எனப்படும் மின்னணு சிகரெட் மீதான பிடியும் இறுக்கப்பட்டுள்ளது.
- பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வெளியே மற்றும் விளையாடும் மைதானங்களில் வேப்பிங் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் இருக்கும் கார்களுக்குள் வேப்பிங் செய்ய அனுமதி இல்லை.
- வேப் பொருட்களின் சுவைகள், பேக்கேஜிங் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த அமைச்சர்களுக்குப் புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மக்கள் வீடுகளுக்குள்ளும், கடற்கரைகள் மற்றும் மதுபான கடைகளில் புகைபிடிக்கத் தற்போதைக்குத் தடையில்லை.
ஏன் முக்கியம்
"வருமுன் காப்பதே சிறந்தது. இந்தச் சீர்திருத்தம் பல உயிர்களைக் காப்பதோடு, அரசு மருத்துவமனைகள் (NHS) மீதான அழுத்தத்தைக் குறைக்கும்" என்று இங்கிலாந்து சுகாதாரத் துறைச் செயலாளர் வெஸ் ஸ்டிரீட்டிங் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனில் பல லட்சம் பேர் புகைபிடித்தல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்நிலை பாதிப்பு ஒரு பக்கம் என்றால்.. இவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆகும் செலவு பிரிட்டனுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. எனவே, அதையும் கூட இது பெருமளவில் குறைக்கும் எனத் தெரிகிறது.
கவலை
இது குறித்து ஆஸ்துமா + லங் யுகே அமைப்பின் சாரா ஸ்லீட் கூறுகையில், "இது பொதுச் சுகாதாரத்தில் ஒரு மிகப் பெரிய மைல்கல். புகையிலை நிறுவனங்கள் தாங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஈடாகக் கூடுதல் வரி செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். அதேநேரம் இந்தச் சட்டம் சில்லறை வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும் இந்த சட்டம் குறித்து அரசு மீண்டும் யோசிக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக மக்களைப் புகைபிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்துவதற்கு முறையான கல்வி முறையே சிறந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தின் இந்த அதிரடி முடிவு, உலக நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக அமையும். குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், 18 வயது வரை தடை.. 21 வயது வரை தடை என்று இல்லாமல்.. அடுத்த தலைமுறையை முழுமையாகப் புகையிலையில் இருந்து விலக்கி வைப்பதே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.












Click it and Unblock the Notifications