நாகை: நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவுக்காக தமிழக அரசு வழங்கும் சந்தனக்கட்டைகளைப் பெறப்போவதில்லை என்று தர்கா நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்தனக்கட்டைகளைப் பெற்றுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதில் முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது. முதல்வர் விஜய் நாளை சந்தனக்கட்டைகளை வழங்கவுள்ள நிலையில், தர்கா நிர்வாகத்தின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 470வது ஆண்டு கந்தூரி விழா நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பார்கள். ஊர்வலத்தில் கொண்டுவரப்படும் சந்தனம், தர்காவில் உள்ள ஆண்டவர் சமாதியில் பூசப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்நிலையில், நாகூர் தர்காவின் கந்தூரி விழாவுக்காக தமிழக அரசு சார்பில் 40 கிலோ சந்தனக்கட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதன்படி, தர்காவின் தலைமை அறங்காவலர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் முதல்வர் சந்தனக்கட்டைகளை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டும் சந்தனக்கட்டைகளைப் பெற்றுக்கொள்ள வருமாறு முதல்வர் அலுவலகத்திலிருந்து தர்கா தரப்பினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த முறை அழைப்பு விடுக்கப்பட்ட விதம் தொடர்பாக தர்கா நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு தர்கா தலைமை அறங்காவலர் மற்றும் மற்றொருவருக்கும் அரசு சார்பில் முதல்வர் அலுவலகத்திலிருந்து நாளை (22ம்தேதி) வந்து சந்தன கட்டைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தர்காவில் நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தர்காவின் 11 அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசு வழங்கும் சந்தனக்கட்டைகளை வழக்கமான நடைமுறையின்படி தர்கா நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து சந்தனக்கட்டைகள் வழங்கப்படுவதாக இருந்தால், தர்கா நிர்வாகிகள் யாரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள சந்தனக்கட்டை வழங்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், தங்களது முடிவு குறித்து தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் துறைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஷாஜகானைத் தொடர்புகொள்ளப் பலமுறை முயற்சி செய்தும், அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர் தர்கா நிர்வாகத்தினர்.விஜய்யின் வேளாங்கண்ணி, நாகூர் தர்காவுக்கான பயணம் ரத்து? கருத்துக் கணிப்புதான் காரணமா?