பேட்டிங் அவ்வளவு ஈஸி இல்லை தம்பி.. 36 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி.. சம்பவம்னா இதுதான்!
ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 36 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் வைபவ் சூர்யவன்ஷியின் இன்றைய சதம், 3வது அதிவேக சதமாக மாறியது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி இருவரும் தொடக்கம் கொடுத்தனர். பிரஃபில் ஹிங்கே வீசிய முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி 4 சிக்சர்களை விளாசி தள்ளினார்.

தொடர்ந்து 2வது ஓவரில் அட்டாக்கில் வந்த பேட் கம்மின்ஸை எதிர்கொண்ட முதல் பந்திலேயே சூர்யவன்ஷி சிக்சரை பறக்கவிட்டார். பின் இஷான் மலிங்கா பந்தில் பவுண்டரி மற்றும் சிக்ஸ் விளாசிய அவர், பவர் பிளே ஓவர்களிலேயே சிக்ஸ் அடித்து 15 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரி, சிக்சரிலேயே பவுலர்களை டீல் செய்தார். ஓவருக்கு 10 ரன்கள் குறைந்தபட்சம் பவுண்டரி, சிக்ஸ் மூலமாக மட்டுமே விளாசினார். தொடர்ந்து, ஷகிப் ஹொசைன் பந்தில் 6, 4, 6 விளாசிய வைபவ் சூர்யவன்ஷி 36 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன்பின் அடுத்த பந்திலேயே 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி மொத்தமாக 12 சிக்ஸ், 5 பவுண்டரியை விளாசினார். இதன் மூலமாக 103 ரன்களில் 92 ரன்களை சிக்ஸ், பவுண்டரி மூலமாக மட்டுமே சேர்த்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அடிக்கும் 3வது சதம் இதுவாகும். அதேபோல் ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட 3வது அதிவேக சதமாகவும் இது அமைந்திருக்கிறது. இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலில் 35 பந்துகளில் சதமடித்து வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே 2வது இடத்தில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இந்தப் போட்டியில் 103 ரன்களை விளாசியதன் மூலமாக வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்ச் கேப் ரேஸில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications