TN +2 results 2026: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது? பொறியியல் சேர்க்கை தொடங்குவது எந்த தேதியில்?
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், உயர்கல்விக்கான அடுத்தகட்ட அறிவிப்புகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், 2025-26 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகளை எழுத மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 7,99,692 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுகள் நிறைவடைந்ததும், விடைத்தாள் திருத்தும் பணிகளைத் தேர்வுத் துறை உடனடியாகத் தொடங்கியது.
தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் மே 8-ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியானதும் அந்த மதிப்பெண்களை வைத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 3ஆவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பியதும் தரவரிசைப் பட்டியல், ஜூன் மாதம் வெளியிடப்படும். தரவரிசைப்பட்டியலின் படி மாணவர்கள் கலந்தாய்வுக்காக ஜூலை மாதம் ஆன்லைனில் அழைக்கப்படுவர்.
2 லட்சம் இடங்களுக்குக் கடும் போட்டி
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்கம் (DOTE) நடத்தும் ஒற்றைச் சாளர முறை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
கடந்த ஆண்டு 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை
நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பெரும்பாலான கல்லூரிகளில் கீழ்க்கண்ட புதிய பாடப்பிரிவுகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன:
- செயற்கை நுண்ணறிவு (AI)
- இயந்திர கற்றல் (ML)
- சைபர் செக்யூரிட்டி
- டேட்டா சயின்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ்
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே கலந்தாய்வுக்கான துல்லியமான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால், மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வித் திட்டமிடலை இப்போதே தொடங்கலாம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.













Click it and Unblock the Notifications