தென்காசி கோயில்ல யார் பாருங்க.. ரிசல்ட் டென்ஷன் வேற.. 7 கி.மீ காட்டுக்குள் நடந்தே போன நயினார் நாகேந்திரன்
தென்காசி: சாத்தூர் தொகுதியில் மும்முனைப் போட்டி மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் அதிருப்தியால் நயினார் நாகேந்திரனுக்கு வெற்றி வாய்ப்பு சவாலாகியுள்ள நிலையில், மே 4 ரிசல்ட்டுக்காக அரசியல் களம் காத்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், அவர் தென்காசி அத்ரிமலைக்கு 7 கி.மீ தூரம் அடர்வனப் பாதையில் நடந்து சென்று அத்ரி பரமேஸ்வரரைத் தரிசித்துள்ளார். தேர்தல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மன அமைதி தேடி நயினார் நடத்திய இந்த மலை உச்சி வழிபாடு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொகுதியான சாத்தூரில் இந்த முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நெல்லையில் இருந்து சாத்தூருக்குக் களம் மாறிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இந்தத் தேர்தல் ஒரு மிகப்பெரிய அக்னிப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு 85.15 சதவீதம் என்ற உச்சகட்ட அளவை எட்டியுள்ள நிலையில், மே 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை நோக்கி ஒத்த மொத்த அரசியல் வட்டாரமும் காத்திருக்கிறது.
தென்காசி - நயினார் நாகேந்திரன்
பல்வேறு கருத்துக்கணிப்புகள் திமுகவின் வெற்றியை முன்னிறுத்தினாலும், களத்தில் நிலவும் மும்முனைப் போட்டி நயினார் நாகேந்திரனுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது.
சாத்தூர் தொகுதியின் சமூகக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வு நயினார் நாகேந்திரனுக்கு சாதகமாக இல்லை என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் கடற்கரை ராஜ் மற்றும் சசிகலா தரப்பில் களமிறக்கப்பட்டுள்ள முக்குலத்தோர் சமூக அமைப்பைச் சேர்ந்த இசக்கி ராஜா ஆகியோர் நயினாருக்குக் கடுமையான முட்டுக்கட்டைகளை உருவாக்கி உள்ளனர்.
குறிப்பாக, இசக்கி ராஜா முக்குலத்தோர் வாக்குகளில் சுமார் 10 ஆயிரம் வாக்குகளைப் பிரிப்பார் என்று கணிக்கப்படுவது பாஜக முகாமுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
முக்குலத்தோர் சமூகம்
அத்துடன் மட்டுமல்லாமல், தவெக வேட்பாளர் அஜித் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்தச் சமூக வாக்குகளும் கணிசமாக பிரியும் சூழல் உள்ளது. இத்தகைய வாக்குப்பிரிப்பு நயினார் நாகேந்திரனின் வெற்றி வாய்ப்பை பெருமளவு பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
அரசியல் ரீதியான சவால்களை தாண்டி, தேர்தல் மேலாண்மையில் நயினார் நாகேந்திரன் கையாண்ட சில நடைமுறைகள் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சலசலக்கப்படுகிறது.
சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளை முழுமையாக நம்பாமல், தனது சொந்த ஊரான நெல்லையில் இருந்தே குழுக்களை இறக்கி அவர் பணியாற்றியது உள்ளூர் மட்டத்திலான ஒருங்கிணைப்பை குலைத்துள்ளது. தேர்தல் பணிகளிலும், இறுதிக்கட்ட மேலாண்மையிலும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால், அவர்கள் மந்தமான நிலையிலேயே காணப்படுகிறார்களாம்.
அதே சமயம், திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் அனைத்து நிலைகளிலும் சம பலத்துடன் களம் கண்டிருப்பதால், வெற்றி-தோல்வி இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தென்காசி கோயில் - 7 கிலோ மீட்டர்
இப்படிப்பட்ட சூழலில்தான், கடும் தேர்தல் நெருக்கடிக்கு மத்தியிலும் நயினார் நாகேந்திரன் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அத்ரிமலைக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
அத்ரி முனிவர் மற்றும் அனுசுயா தேவி குடிகொண்டுள்ளதாகக் கருதப்படும் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல சுமார் 7 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியையும், கரடுமுரடான மலைப்பாதையையும் அவர் கடந்து சென்றுள்ளார். வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில், மன அமைதிக்காகவும் வெற்றிக்காகவும் அவர் மேற்கொண்டுள்ள இந்த ஆன்மீக பயணம் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
85% சாத்தூர் தொகுதி
தேர்தல் களத்தில் நிலவும் அனல் பறக்கும் அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், நயினார் நாகேந்திரனின் இந்தத் திடீர் ஆன்மீகப் பயணம் ஒரு முதிர்ச்சியான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும், சாத்தூர் தொகுதியின் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதும், நயினார் நாகேந்திரனின் நெல்லை டூ சாத்தூர் பயணம் அவருக்குக் கைகொடுத்ததா என்பதும் மே 4ம் தேதி தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications