சென்னை: ஒரு கல்யாண பத்திரிக்கையை பார்த்ததும் இப்படி ஆச்சரியப்பட முடியுமா என்று கேட்க வைக்கும் அளவுக்கு ஒரு வீடியோ இப்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகர் சுராஜுக்கு தயாரிப்பாளரும் தொழிலதிபருமான கண்ணன் ரவி கொடுத்த திருமண அழைப்பிதழ்தான் இதற்கு காரணம். சாதாரணமாக ஒரு கவரில் பத்திரிக்கையை வைத்து கொடுப்பதற்கு பதிலாக, திறந்து பார்த்ததும் ஒவ்வொன்றாக ரசிக்க வைக்கும் வகையில் பிரம்மாண்டமான பெட்டிக்குள் இந்த அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த பெட்டியை சுராஜ் திறந்து பார்க்கும் வீடியோவை பார்த்த ரசிகர்களும், "இது கல்யாணப் பத்திரிக்கையா, இல்ல தங்கப் பெட்டியா?" என்று வியக்கும் அளவுக்கு அதன் வடிவமைப்பு இருக்கிறது. கண்ணன் ரவி கொடுத்த அந்த அழைப்பிதழ் பெட்டியின் வெளிப்புற தோற்றமே வித்தியாசமாக இருக்கிறது. முதலில் சாமி படம் இடம்பெற்றிருக்க, அதை திறந்ததும் உள்ளே அழகாக வடிவமைக்கப்பட்ட சிறிய அறைகள் போன்ற பகுதிகள் தெரிகின்றன. பெட்டியை திறக்கும் போது இரண்டு பக்கங்களிலும் மயில் தோகை விரிவதை போன்ற அலங்கார அமைப்பும் இருக்கிறது.
அந்த பகுதிகளுக்குள் குட்டிக் குட்டியாகப் பரிசுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பெட்டிகளுக்கு நடுவில்தான் திருமண அழைப்பிதழும் வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு அழைப்பிதழ் என்பதைத் தாண்டி நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் ஒரு பரிசு பொருளை போலவே இது இருக்கிறது. இதையெல்லாம் திறந்து பார்த்த நடிகர் சுராஜ் ஒரு நிமிடம் வியந்துபோய்விட்டார். தான் இதுவரை இப்படியொரு திருமண அழைப்பிதழை பார்த்ததில்லை என்று ஆச்சரியத்தோடு கூறுகிறார். அப்போது கண்ணன் ரவி, சுராஜும் அவருடைய குடும்பத்தினரும் திருமணத்துக்கு அவசியம் வர வேண்டும் என்று அன்புடன் அழைப்பு விடுக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அழைப்பிதழின் பிரம்மாண்டத்தை பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். திருமணத்துக்கு அழைப்பதற்காகக் கொடுக்கப்படும் ஒரு பத்திரிக்கையையே இவ்வளவு வித்தியாசமாகவும் அழகாகவும் வடிவமைத்திருக்கிறார்களே என்பதுதான் பலருடைய வியப்பாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட திருமண அழைப்பிதழ் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவியின் திருமணத்துக்காக வழங்கப்படுவது. தீபக் ரவிக்கும், திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தியான செந்தாமரைக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. செந்தாமரை, வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகள் தான். இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் கடந்த ஜூலை மாதம் வேலூர் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் நவம்பர் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற இருப்பதாக அப்போது வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இரு குடும்பங்களிலும் ஏற்கெனவே திருமண ஏற்பாடுகள் கவனம் பெற்றுவரும் நிலையில், தற்போது பிரபலங்களுக்கு வழங்கப்படும் அழைப்பிதழ்களும் பேசுபொருளாகியுள்ளன. தொழிலதிபராக பிரபலமான கண்ணன் ரவி, தமிழ் சினிமாவிலும் தயாரிப்பாளராக தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சாந்தனு நடித்த ராவண கோட்டம் படத்தைத் தயாரித்த இவர், நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். நட்டி நட்ராஜ் நடித்த TN 2026 படத்தையும் தயாரித்தவர் இவர்தான். இப்போது அவருடைய மகன் திருமணத்துக்காக வழங்கப்படும் இந்த அழைப்பிதழ், அதன் வித்தியாசமான வடிவமைப்பால் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, இப்படி ஒரு பிரம்மாண்ட அழைப்பிதழை பார்த்ததும் பிரபலங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதையும் ரசிகர்கள் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.யார் இந்த மணமக்கள்
கண்ணன் ரவி யார்