For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஓடி விளையாடு பாப்பா!

நவம்பர் 14. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம். குழந்தைகள் தினமாகவும் இது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

இளைய இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு அடிக்கல் போன்றவர்கள் மழலைகள். அவர்களுக்காக பாரதி பாடி வைத்த ஒரு பாடலை இன்று நினைவுகூர்வோம்.

ஓடி விளையாடு பாப்பா!


ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. (1)


சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! (2)


கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேனும் பாப்பா! (3)


பாலைப் பொழிந்து தரும் பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா,
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா! (4)


வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! (5)


காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு தரும் நல்ல பாட்டு,
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா! (6)


பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா! (7)


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! (8)


துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! (9)


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! (10)


தமிழ்மத்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! (11)


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தாயென்று கும்பிடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் -அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! (12)


வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! (13)


வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு;
சேதமில் லாதஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா. (14)


சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். (15)


உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும் ;
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா! (16)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X