பாரதி பக்கம்
மே 14, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
13
மின்னல் வெட்டுகின்றது.
புலவர்களே, மின்னலைப் பாடுவோம், வாருங்கள்.
மின்னல் ஒலித்தெய்வத்தின் ஒரு லீலை - ஒளித் தெய்வத்தின்
ஒரு தோற்றம்.
அதனை யவனர் வணங்கி ஒளி பெற்றனர்.
மின்னலைத் தொழுகின்றோம்:
அது நம்மறிவை ஒளியுறச் செய்க.
மேகக் குழந்தைகள் மின்னற் பூச் சொரிகின்றன.
மின்சக்தி இல்லாத இடமில்லை.
எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே.
கல்லிலே வெண் மணலிலே, பச்சை இலையிலே,
மலரிலே, நீல மேகத்திலே,
காற்றிலே, வரையிலே - எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றது.
அதனைப் போற்றுகின்றோம்,
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.
நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்கு.
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.
நமது பாட்டு, மின்ன லுடைத்தாகுக.
நமது வாக்கு மின்போல் அடித்திடுக.
மின் மெலியதைக் கொல்லும்.:
வலியதிலே வலிமை சேர்க்கும்:
அது நம் வலிமையை வளர்த்திடுக.
ஒளியை, மின்னலை, சுடரை, மணியை.,
ஞாயிற்றை, திங்களை, வானத்து வீடுகளை, மீன்களை,
ஓளியுடைய அனைத்தையும் வாழ்த்துக்கின்றோம்.
அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.
ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்.
DVD












Click it and Unblock the Notifications