கண்ணதாசனை காணுவோம்
5. மனிதன் மாறி விட்டான் ..
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை - வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை!
மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான்!
நிலை மாறினால் குணம் மாறுவான் - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் - தினம்
சாதியும் பேதமும் கூறுவான் - அது
வேதம் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான்!
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான்!
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதன் சாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே!
மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான்! (வந்த)
6. எந்த ஊர் என்றவனே ..
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூ
கண்ணூகையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)
வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!
கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)
7. ஆசையே அலைபோல ..
ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)
8. மயக்கமா, கலக்கமா ..
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்! (மயக்)
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! (மயக்)












Click it and Unblock the Notifications