For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நன்றி நவில ஓர் நாள்

By Staff
Google Oneindia Tamil News

" எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு" –

இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது; அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றிசொல்ல ஒதுக்கியிருக்கிறார்கள். அதுக்காக மத்த நாள்ல அமெரிக்கர்கள் நன்றி சொல்ல மாட்டாங்களா? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் கூட பார்க்காத மாதிரி ஒதுங்கியும், முகத்தைத் திருப்பிக்கொண்டும் செல்வதை பெரும்பாலும் அமெரிக்காவில் காண முடியும். அறிமுகமில்லாத ஒரு இந்தியர் இன்னொரு இந்தியரைப் பார்த்துநமஸ்தே.....வணக்கம்....ஹாய்..... என்று சொல்கிறார் என்றால் சொன்னவர் அமெரிக்காவுக்கு புதுசு என்று அர்த்தம்; அதே நேரத்தில் அறிமுகமில்லாதஒரு அமெரிக்கர்/ரி ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டால் ஹலோ... ஹாய் என்பார்கள்.

Mayflowerஎப்படி இருக்கிறீர்கள்? என்றெல்லாம் கூட விசாரிப்பதும், உதவி என்ற வகையில் அல்லாமல் ஒரு சாதாரண தகவலைச் சொன்னால் கூட நன்றி என்றுநாலு முறை நாவலிக்காமல் சொல்லுகிறவர்கள் அமெரிக்கர்கள்; வருசம் முழுக்க எங்களுக்காக உழைச்சீங்க, உங்களுக்கு எங்கள் நன்றிகள்!முதலாளிகள், தொழிலாளிகளுக்கும்; நிர்வாகம் தங்கள் ஊழியர்களுக்கும்; ஒருவருக்கொருவர் நன்றி பரிமாறிக்கொள்ளும் நன் நாளாக, ஆண்டுதோறும்நவம்பர் மாதம் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமை அனுசரிக்கப்படுகிறது.

"உதவி" என்ற மூன்றெழுத்தைச் செய்யும் போதோ, பெறும் போதோ, அடிமனத்து வானில் உதயமாகும் மூன்றெழுத்துத் தான் "நன்றி". அந்தநன்றியை கொடுக்கிறவருக்கும் பெறுகிறவருக்கும்தான் எவ்வளவு பேரானந்தப் பெருவெள்ளம் மனதில் பொங்கிவழிகிறது.இன்றைக்குஅமெரிக்கா முழுமைக்கும் இந்த நன்றி நவிலப்படுகிறதற்கு காரணம் யார்?

இங்கிலாந்து...! ஏன்? இதற்கும் ஒரு பின்னணி உண்டு. அது என்னவென்று பார்ப்போமா?

இங்கிலாந்து...1600களில் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்தவக் கோவில்கள் அந்த நாட்டை ஆண்டுவந்த அரசனின் இரும்புப்பிடிகளுக்குள் சிக்கித்தவித்தது.இப்படித்தான் கோவில்களில் வழிபடவேண்டும்; மதச் சடங்குகள் இன்னின்னபடிதான் நடைபெறவேண்டும்; பிறப்பாயிருந்தாலும், இறப்பாயிருந்தாலும்அரசகட்டளைப்படிதான் நடக்கவேண்டும், என்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.

இவர்கள் அரச கட்டளைக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்டுசித்திரவதைகளுக்கு ஆளாகினர். தங்களுக்கு விருப்பமானமுறையில் கடவுளை வணங்கமுடியவில்லையே என்று எண்ணியவர்கள் ரகசியமாக திட்டம் தீட்டிஇங்கிலாந்தைவிட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தனர். இவர்கள் "புரிடான்ஸ்" (puritans) என அழைக்கப்பட்டனர்.

மத சுதந்திரம் வேண்டி, தங்கள் தாயகத்தை விட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக, "ஸ்பீட் வெல்" மற்றும் "மேஃப்ளவர்" என்ற இரண்டு கப்பல்களில் இலக்கு இல்லாத தங்கள் பயணத்தை (செப்டம்பர் ,1620ம் ஆண்டு) துவங்கினர். புதியஉலகம் புகுவோம்; புதிய, புதிய இன்பம் காண்போம்; நமக்கென ஒரு வரலாறு சமைப்போம் என்கிற உறுதிமொழியோடுபுறப்பட்டனர்.

உணவு, துணி, ஆயுதம், விவசாயக் கருவிகள், விதைகள் என்கிற சேகரிப்புகளோடு நிரந்தரமாகப் புலம் பெயர்ந்துவிடுகிறமுயற்சியாகப் பயணித்தனர். இந்த மரக்கலங்களில் பயணித்த பயணிகள் பட்டியலைப் பார்க்கவேண்டுமா? கிளிக்குங்கள்இங்கே...

http://www.mayflowerhistory.com/Passengers/passengers.php

கனவுப் பூமி...

Foodஏதோ ஒரு துணிச்சலில் குழந்தைகுட்டிகளோடு 1620ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ஆறாம் தேதி 102 பயணிகளுடன் 32குழந்தைகள் உட்பட கிளம்பிய அவர்களுக்கு இன்ன இடத்துக்குத்தான் போகிறோம் என்கிற உறுதியில்லாமல் மனம்போனபோக்கில்....அல்ல.....அல்ல கப்பல் போன போக்கில் பயணித்தனர்!

கடற்பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. நிலம் காணா நீர்ப்பரப்பு நீண்டு கொண்டே போக, கடல் நோய் கண்டு பலர் தங்கள்கனவு நிறைவேறாமலேயே மாண்டுபோயினர். கடற்பயணத்திலேயே இரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.ஸ்டீபன் எலிசபெத் தம்பதியருக்கு பிறந்த குழந்தைக்கு சமுத்திரம் (Oceanus) என்றும், இன்னொரு தம்பதியருக்கு பிறந்தகுழந்தைக்கு பிரிகிரீன் என்றும் பெயர் சூட்டியதும் ஒரு வித்தியாசமான நிகழ்வாக இருந்தது.

பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர்கள் வந்து சேர்ந்த இடம் அமெரிக்காவின் மஸாச்சுசெட்ஸ் மாநிலத்தின் வடக்கு கேப் காட்நகரின் ப்ளைமவுத் பகுதியாகும். கனவுப் பூமியில் கால் பதித்த நேரம் (டிசம்பர் 11ம் தேதி) உடலை ஊடுருவி உள்ளெலும்பைக்குளிர வைக்கிற டிசம்பர் குளிர்; பயணக்களைப்பு, பழக்கமில்லாத சீதோஷ்ண நிலை என அவர்களில் பலர் பலியாக நேரிட்டது.

ப்ளைமவுத்தில் கால் பதித்ததும் அங்கிருந்த ஒரு கல்லில் அவர்கள் கால் பதித்த வருடத்தை பதிவு செய்து வைத்தனர். இன்றும் அதுகாணக் கிடைக்கிறது.

எஞ்சியிருந்தோர், கனவுகள் கலைந்து, எதிர்காலம் இருண்ட கவலை சூழ, நம்பிக்கைகள் பொய்த்துப் போன நிலையில்அவர்களுக்கு விடிவெள்ளியாக, ஸ்குவாண்டோ என்ற அமெரிக்கர் தனது சகாக்களோடு உதவ முன் வந்தார். புதிய சுற்றுச்சூழலில் தங்களைக் காத்துக் கொள்ள, வாழ்வை எதிர்கொள்ள வழி முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். அநேக விஷயங்களைபூர்வீக அமெரிக்கர்களிடம் கற்றுக்கொண்டனர்.

அமெரிக்கச் சூழலுக்கு ஏற்றவாறு எப்படி விவசாயம் செய்வது? விஷத்தன்மை வாய்ந்த பயிர்கள் எது? முக்கியமாக நோய்எதிர்ப்பு சக்திக்கு என்ன முறைகளை கடைப்பிடிப்பது? வேட்டையாடுவதற்கான சிறந்த வழிமுறைகள் எது? போன்றவற்றைக்கற்றுக் கொண்டனர்.

" ஸ்குவாண்டோ " தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இவர்களுக்கு உதவச் செய்தார். இவர்களுக்கு மீனைச் சாப்பிடமட்டும் கொடுக்காமல் மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். இது அவர்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. மண்ணின்மகிமைக்கு ஏற்றவாறு பயிர் செய்தனர்; மக்காச் சோளம் பொன் போல் விளைந்தது; மிகப் பெரிய பூசணி மற்றும் காய்கறி,பழவகைகளை பயிரிட்டனர்.

டர்க்கி எனப்படும் காட்டு வான்கோழிகளை வளர்த்து உணவுக்குப் பயன் படுத்தினர். இங்கிலாந்திலிருந்து கையோடுகொண்டுவந்த விதைகள் பல இந்த மண்ணில் முளைக்கும் சாத்தியமற்றுப் போனாலும் அமெரிக்கர்களின் அன்பான உதவியாலும்வழி காட்டுதலாலும் கடின உழைப்பால் கற்பாறை நிலங்களை பொன்கொழிக்கும் பூமியாக மாற்றினர்.

அறுவடைத்திருவிழா...

அறுவடைக்காலம் வந்தது; அதாவது 1621ம் ண்டு அவர்களுக்கு கிடைத்த செழிப்பான பூமி விளைச்சலால் அகமும் முகமும்ஒருசேர மகிழ்ந்து அதைச் சிறப்பாக கொண்டாட எண்ணினர். புதிய பூமியில் அவர்களுக்கு வழிகாட்டியஅமெரிக்கர்களைகெளரவிக்க விரும்பினர். அபரிமிதமான விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்ததற்கும், தங்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கைஒளியை எண்ணெய்யும் திரியுமாக இருந்து உதவிய அமெரிக்கப் பேருள்ளங்களை மகிழ்விக்க மூன்று நாட்கள் விருந்தைஏற்பாடு செய்தனர். எப்படி இங்கிலாந்து தேசத்தில் அறுவடைத் திருநாளை பரம்பரை பரம்பரையாகக் கொண்டாடுவரோஅதைப்போலக் கொண்டாடினர்.

Speedwelmfஉற்சாக ஷாம்ப்பெய்ன்...

இங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்குத் தலைவராக இருந்த "கேப்டன் மைல்ஸ் ஸ்டாண்டிஷ்," வெனிசன் என்ற ருசிமிக்க காட்டுவான்கோழி, காட்டுப் பறவைக்கறி வகைகள், விதவிதமான மீன்வகைகள், பழங்கள், பூசணி, வெள்ளரிக்காய், கார்ன்

(மக்காச் சோளம்) இனிப்பு உருளைக்கிழங்கு, க்ரான்பெர்ரீஸ் பழங்கள் என்று தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.வந்தாரை வரவேற்று... வாழ வழிகோலியவர்களுக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் வகையில், செய் நன்றி மறவாமல்அவர்களுக்கான விருந்தை விமரிசையாகப் படைத்தனர்.

இவ்விருந்திற்கு ஸ்குவாண்டோவும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எனஅழைக்கப்பட்டு கலந்துகொண்டனர்.பொதுவிடத்தில் பெருவிருந்து நடத்தி தங்கள் நன்றியைவெளிப்படுத்தினர்.

மூன்று நாட்கள் நடை பெற்ற இந்த நன்றித் திருவிழாவில் விளையாட்டு, கேளிக்கைகள், நடனங்கள் என அமெரிக்கர்களைமகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர். மூன்றாம் நாள் விசேஷ மதுபானவகைகளுடன் "பம்ப்கின் பை"எனப்படும் பூசணி கேக் வெட்டி,ஷாம்ப்பெய்ன் பாட்டில்கள் உற்சாகமாய் பொங்கித் திறக்க, உல்லாசப் பொழுதாகிப்போனது.

அன்றிலிருந்து "தாங்க்ஸ் கிவ்விங் டே" மெனுக்களில் இன்றுவரை பெரிய மாற்றம் ஏதுமின்றித் தொடர்கிறது!

1621ம் ஆண்டு நடைபெற்ற நன்றித் திருநாள்,"First Thanks Giving Day". தொடர்ந்து இது அமெரிக்காவின் பட்டி தொட்டி,நகரம் எங்கும் நன்றி நவில்கிற விருந்து....... வருடம் தவறாமல் நடந்தது. 1676ம் ஆண்டு மஸாச்சுசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தசார்லஸ் டவுன் கவுன்சில் இந்த நாளை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றி அங்கீகரித்தது.

1777ம் ஆண்டு அமெரிக்க கான்டிணென்டல் காங்கிரஸ் தேசியக் கொண்டாட்டமாக அறிவித்தது. இதில் அன்றைய 13மாகாணங்கள் கலந்து கொண்ட பெருவிழாவாக நடைபெற்றது.

1783ம் ஆண்டு வரை அரசின் சார்பில் நன்றி நவிலும் நாளாக விளங்கினாலும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் 1789ம்ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று நாம் ஒவ்வொருவரும் நன்றி பரிமாறிக்கொண்டாலும் அன்றையதினம் இறைவனுக்கும் நன்றிசெலுத்திடும் வகையில் விசேஷ பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்றார்.

தேசிய விடுமுறை தினம்...

"சாரா ஜோசப் ஹேலி" என்ற பத்திரிக்கை ஆசிரியரும் சமூக சேவை இயக்கத்தலைவியுமான இவர் அமெரிக்க அரசாங்கத்தை இந்நாளை தேசிய விடுமுறைதினமாக அறிவிக்கக்கோரி போராடினார். இவருடைய சீரிய முயல்வுகளுக்கு விடை கண்டவர்அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஆவார்.

நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் வரும் வியாழக்கிழமை "தேசிய விடுமுறை தினம்" என 1863ம் ஆண்டு அறிவிக்க, நன்றிநவிலல் மழையில் நனைந்தார் லிங்கன்.

அரசியல்வாதிகள் அநியாயம் அந்தக் காலகட்டத்தில்கூட அரங்கேறியிருக்கிறது. லிங்கனுக்குப் பின் வந்த அமெரிக்க அதிபர்ஃப்ராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் தடாலடியாக நன்றி நவிலல் தினம் நவம்பர் மாதத்தில் மூன்றாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமைஎன்று 1939ம் ஆண்டில் மாற்றி அறிவித்தார். இந்த மாற்றத்திற்கு வினோதமான காரணத்தைக் கூறினார். இதற்கு அமெரிக்க மக்கள்தரவு இல்லாததோடு தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். அது மட்டுமல்லாமல் வழக்கமாக கொண்டாடும் நாலாவதுவாரத்தில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதிபர் ரூஸ்வெல்ட், தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் 1941ம் ஆண்டு மீண்டும் "THANKS GIVING DAY"நவம்பர் நான்காம் வார வியாழக்கிழமை தேசிய விடுமுறையோடு நன்றி நவில் தினம் அனுசரிக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வஅறிவிப்பை வெளியிட்டார்.

இன்று...

Tghouseஉறவினர்களும் நண்பர்களும் அவரவர் பகுதியில் உள்ள சமூகக் கூடங்களில் கூடி மன மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றனர். குடும்பங்கள், நண்பர்கள், அண்டை அயலார், தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடின்றிபொதுவிருந்தில் கலந்துகொள்கின்றனர். சந்தோசங்களில் சங்கமித்துப் போகின்றனர். வெளியூர் மற்றும் அண்டைமாநிலங்களில்உள்ள உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து அஞ்சல் அட்டைகளை அனுப்பித் தங்கள் எண்ணக் கிடக்கைகளை - நன்றியைவெளிப்படுத்துகின்றனர்.

அலுவலகங்களில் வேலை பார்ப்போர் அலுவலக வளாகங்களிலோ அல்லது ஹோட்டல்களில் விருந்து உண்டு பரிசுப்பொருட்கள் அளித்து மகிழ்கின்றனர். இந்த நாளில் எல்லோர் இல்ல விருந்துகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது "டர்க்கி" எனப்படும்வான்கோழி இடம் பெற்றிருக்கும்.

இல்லங்களில் அங்குமிங்குமாக பணியின் நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களால் சிதறியிருக்கிறவர்கள் ஒன்றுகூடுவார்கள்; விருந்து உண்ணும் முன் பிரார்த்தனைக்கு கூடுவது போல கூடத்தில் கூடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்தங்கள் நன்றியை சொல்லுவார்கள்.

அது 5 வயதுச் சிறுமியாகயிருந்தாலும் 60வயது பாட்டியாக இருந்தாலும், "இந்த வருடத்தில் இன்ன நன்மை கிடைக்கச்செய்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்," என்று நினைவுகூர்வது முக்கிய அம்சமாக இடம் பெறும். அதன் பின்அவர்களை அழைத்த உறவினர் அல்லது நண்பர்கள் இல்லத்துக்குச் சென்று நேரில் வாழ்த்துச் சொல்லி அல்லது நன்றி கூறிஅவர்கள் அளிக்கும் விருந்திலும் பங்கு பெறுவார்கள்.

தங்களுக்கு உதவி செய்தவர்கள் இல்லத்துக்குநேரில் சென்று தங்கள் நன்றியை தெரிவிப்பதோடு "பரிசு" களும் அளித்து தங்கள்நன்றியை வெளிப்படுத்துவார்கள். சர்ச்சுகளில் விசேஷ பிரார்த்தனைகளின் முடிவில் சிறப்பு விருந்துண்டு மகிழ்கிறார்கள்.பெரும்பாலான அலுவலகங்களில் தமது ஊழியர்களுக்கு "கிஃப்ட் சர்டிபிகேட்"டை பரிசாக வழங்கி கெளரவிக்கின்றனர். கடைகள்10% முதல் 50% வரை சிறப்புத் தள்ளுபடிகளை வழங்கி வாடிக்கையாளர்களை வசீகரிக்கிறது. பள்ளிகளில், கல்லூரிகளில்ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி நன்றிதனை விருந்தோடு பரிமாறிக் கொள்ளுகின்றனர்.

அமெரிக்கா என்றாலே சொர்க்கமாகவும், பணம் கொழிக்கும் பூமியாகவும், வாழ்கிறவர்கள் எல்லோரும் மலர் படுக்கையில்இருப்பதுபோலவும் பல நாட்டினர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர்களுக்கு முள் படுக்கையாக இருக்கிறதுஎன்பதை இது போன்ற நாளில்தான் அறியமுடியும்.

அனாதைச் சிறுவர், சிறுமியர், ஆதரவற்ற முதியோர், மூவேளை உணவுக் கனவு... ஒருவேளை நனவு ஆகுமா? உயிரைஉறையவைக்கும் உறை பனியில் உறைவிடம் சாத்தியமில்லாமல் வாழ்க்கைச் சிக்கல்களில் நைந்து நாராகிப் போனவர்கள்இங்கும் இருக்கிறார்கள் என்றால் மிகப் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்காக பல்வேறு சமூகத்தொண்டு நிறுவனங்கள் இந் நாளில் பொது விருந்து ஏற்பாடு செய்து அளிக்கின்றனர். பெரிய, பெரிய உணவு விடுதிகள் கூடபாரம்பரிய விருந்தான வான்கோழிக் கறி சமைத்து ஏழைகளுக்கு அன்று மதியம் இலவசமாக வழங்குகிறார்கள்.

அவர்களின் குழந்தைகளுக்கு உணவுடன் சிறுபரிசுகள் அல்லது ஐந்து டாலர் பணமும் உணவுப்பொட்டலமும் வழங்குவதைக்காணலாம். பசித்தே கிடந்த வயிறு புசித்த பின் மனநிறைவாக இதயப்பூர்வமாக பூக்கிற "நன்றி"யும் இந் நாளில்தான் என்றால் அதுமிகையில்லை!

-ஆல்பர்ட்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1 .நூர்ஜஹானின் நிக்காஹ்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X