For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர் திருநாள்....!

By Staff
Google Oneindia Tamil News

சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு, இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும்இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக் கிராமங்கள் அன்றாடம் பொங்க வழியின்றிவிழிகள் பொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கண்ணீர் துடைக்க நாம் ஏதேனும் ஒரு வகையில் நம் கரம் நீள வேண்டும் என்ற முன்வைப்போடு தமிழியவிழாவான பொங்கல் விழாக் கட்டுரையை இங்கே முன்னிடுகிறேன்.

இவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்" கை வைக்க முடியும். யார் இவர்கள்? "செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும்சிறுகோலே"என்றுரைத்த கம்பர், "உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி" என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள்தான்இவர்கள்!

உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான்... பொங்கல் திருநாள். பொங்கல் விழாஎன்று பெயர் வந்தது ஏன்? இது ஒரு சமுதாயத்தினர் கொண்டாடும் விழாவா? அல்லது மதம் சார்ந்த பண்டிகையா?

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா? என்றெல்லாம் வினாக்கள் கண் முன் விரிகிறது.

மனித இயந்திரங்கள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இதுதமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எத்தனைப்பொங்கல் காலத்தை இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும்?

எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது. "மேழிச் செல்வம் கோழைபடாது" என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தைஆட்கொண்டிருக்கிறது. இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து, ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன.இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப்பூர்வமாகவும்உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்தசமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.

இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!

ஒளவைப்பிராட்டியார் "இளவரசே வாழ்க பல்லாண்டு!"என்று வாழ்த்தவில்லை! அரசே உன் "வரப்பு உயர்க"! என்று வாழ்த்தினார். ஏன்?

வரப்புயர நீருயரும்!
நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!.

இந்தப் பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்திருக்காலமாக இருப்பதுஎவ்வளவு பொருத்தமான ஒன்று; எவ்வளவு அறிவார்ந்த செயல் அது! அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப்பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்தபொருத்தமான செயல்!.

சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாளன்று வழிபட, இந்திர விழா தொடங்குகிறது.

தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி,
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி:"

காவிரியின் பூந்தாது பொலிந்து கிடக்கும் சங்கமத்துறையிலிருந்து, பொற்குடங்களிலே குளிர்ந்த நீரை நிறைத்து வந்து நிலவுலகோர் மருளவும், விண்ணுலகோர்வியக்கவும் இந்திரனைத் திருமுழுக்காட்ட மகளிர், ஊன் தசைச் சோறு, பொங்கல், மலர் போன்றவற்றை வைத்து வழிபட்டு, துணங்கைக் கூத்து, குரவைக்கூத்து போன்றவற்றை ஆடி வழிபடுகின்றனர்! என்று சிலம்பு சிலாகித்துச் சொல்கிறது.

சற்றொப்ப 2000ம் ஆண்டுகளுக்கு முந்தையது சிலம்பின் காலம்! அதற்கும் முந்தியது தமிழர் இலக்கணமான தொல்காப்பியம். அதில் மருதநிலக்கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்தமழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன்! இந்தச் செய்தியைச்சற்று உள்வாங்கிப் பார்க்கும்போது, காலமாற்றத்தில் இந்திரவிழா பொங்கல் விழாவாக உருமாற்றம் பெற்றிருக்கக்கூடும் என்றமிகைப்படுத்தப்படா உண்மை புலர்கிறது!

இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போமேயானால்,
பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் எனவியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றி மூத்தகுடி.

என்பது தமிழரின் வீரத்தை வலியுறுத்தும் புறப்பொருள் வெண்பாமாலை என்ற அரிய நூலில் இடம்பெற்றுள்ள பாடலிது. இத்தகைய தொன்மைக்காலவரலாற்று நாகரிகத் தோற்றக் காலத்திலேயே சூரிய வழிபாடும் அதையொட்டிய பொங்கல் திருநாளும் மறத்தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த ஆதாரச்சான்றுகளைப் பல பாடல்கள் மூலம் நாமறியலாம். பொங்கல் தமிழரால், வானியல் அறிவை வெளிப்படுத்தும் ஓர் அறிவியல் நுட்பத்தோடுகொண்டாடப்பட ஒரு பெருவிழாவாக நாம் பார்க்கலாம்.

ஆதிமனிதன் உருவானான் அகிலத்திலே. அவனுக்கு உணவேது? காய்கனிகளைத் தின்றான்; போதவில்லை; பச்சப்பசேலென்ற பூமியைப் பார்த்தான்.வேளாண்தொழிலில் வேகம் காட்டினான்; விவேகமாய் சாகுபடி செய்தான்; நெல் விளைந்தது; சோறாயிற்று. சுழன்றும் ஏர்பின்னது உலகம்! இதுதான்வேளாண்மையின் துவக்கம். வேளாண்மை மனித குமுகாயத்தின் உயிர்நாடி. எல்லா இனமும் பயன்பெற்றாலும் தமிழன் ஒருவனே பொங்கலை தனிச் சிறப்புடன்அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டாட வேண்டுமென எண்ணினான்.

இயற்கைக்கும், இறைமைக்கும் நன்றி நவில்கின்ற பொன்னாளாக பொங்கல் நாளைத் தமிழர்கள் கொண்டாடத் தலைப்பட்டனர். பொங்கல் மதவிழாவன்று. நிலம் பொது. நிலா பொது. கதிர் பொது. கதிரவன் பொது. நீரும் பொது. நெருப்பும் பொது. இவற்றை உள்ளடக்கிக் கொண்டாடப்படும்பொங்கலும் பொது. எவ்வகையான புராணச் சார்புமில்லாத மூடத்தனமற்ற விழா பொங்கல் விழா. தமிழர் கொண்டாடும் ஒப்பற்ற விழா பொங்கல்விழா மட்டுமே என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

("ஒரு காலத்தில் இந்திரன் முதலான தேவர்களுக்கு மக்கள் விசேச பூசைகளைச் செய்தனர். அதனால் அவர்கள் கர்வம் கொண்டனர். அதனால் தேவதைகள்மூலம் வரவேண்டிய உதவிகள் குறைந்து விட்டன. மக்கள் கண்ணனிடம் வேண்டினர். இந்திரன் கோபமுற்றான். மிகுதியான மழை பொழியச் செய்து மக்களைதுன்பத்துக்குள்ளாக்க, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து மழையிலிருந்து மக்களைக் காத்தான். இந்திரன் மன்னிப்பு கேட்டான். கண்ணன்மக்களைப் பார்த்து கோ-பூசை செய்யுங்கள் என்று சொன்னதில் தொடங்கியது பொங்கல் பண்டிகை.." என்று பொங்கல் வரலாறு துவங்கியதாக காஞ்சிசெயேந்திரர் கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தார். )

தமிழர் திருநாள் எனும் சொல்லாட்சியினை முதன்முதலில் பொங்கலுக்குச் சூட்டியவர் பேரறிஞர் கா.நமச்சிவாயர்! மலையகத்தில் கோ.சாரங்கபாணியார் இதனைப்பரவலாக்கினார். பொங்கல் என்பது விழாவுக்குரிய மரபுப் பெயராகும். இவ்விழா தமிழரால் தமிழிய நெறியோடு கொண்டாடப்படுவதால் தமிழர்திருநாள் என்றே அழைக்கலாம்.

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா தனிப்பெருந்திருவிழாக்கோலம் பூணுகிறது.

இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தைப் போல மூன்று, நான்கு நாட்கள் எனபொங்கல் திருவிழாவைக் கொண்டாடவில்லை என்றாலும் பிறந்த மண்ணின் பெருமையை நினைவில் கொள்கிறார் போல உலக நாடுகளில் வாழும்தமிழர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர். தாய்த் தமிழ் நாட்டையே பார்த்திராத உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்தப் பொங்கல்கட்டுரை சமர்ப்பணம்.

தை பிறந்தால்...

நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சரி, வானம் பார்த்து மழைக்குக் கதறும் பூமியானாலும் சரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்குவருகிற நாள் "தை"யில்தான்! உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று,சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா!

தைமாதம் கொண்டாடப்படுவதால் " தைத் திருநாள் " என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களைஎடுத்து, உரமிட்டு, நீர்பாய்ச்சி, கண்ணின் கருமணிபோல பாதுகாக்கின்ற உழவனின் இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் மடியும் கனக்கும்; மனமும்நிறைந்திருக்கும். அதனால்தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர்செனத்தியோடு புத்தாடைகள் வாங்குவதையே உழவன் ஒத்திப் போட்டுக்கொள்வதுவழக்கம். எல்லாத்துக்கும் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியே இதனால் ஏற்பட்டதுதானே!

போகிப் பொங்கல்...

bhogiபோகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது போகிப் பொங்கல். "பழையனக் கழித்து, புதியன புகவிடும்" நாளாகக் கருதப் படுகிறது.பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. வீட்டில் வேண்டாத பொருட்களை குப்பை கூளங்களோடு தீயிட்டுப்பொசுக்குவார்கள். சுண்ணாம்பு தீற்றப்பட்ட (வெள்ளையடிக்கப்பட்ட) வீடுகள் புத்தாடை அணிந்தது போல "ஜம்"மென்றிருக்கும்.

போகி என்றால் இந்திரன் என்று ஒரு பொருள் உண்டு. இந்திரனுக்கு வணக்கம் செய்வது போகிப் பண்டிகை. தமிழர் வழக்கப்படி இந்திரன் என்பவன்மேகங்களை இயக்குபவன். மேகங்களே வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பொழிகின்றன. கையின் அவனை வணங்கும் நாளாகப் போகிப் பொங்கல்கருதப்படுகிறது.

வாயிற்படிகளின் நுழைவு நெற்றியில் மாவிலை, மஞ்சள், மரிகொளுந்து, பூளையிலை கோர்த்துக் கட்டுவார்கள்; தனைக் " காப்புக் கட்டுதல் " என்பார்கள்.சிறுவர்கள் முதல் பெரியவர் வரை தத்தம் அலுவல்களில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். மார்கழி மாதக் குளிரில் சிறுவர் முதல் பெரியோர்வரைசூரிய உதயத்திற்கு முன் நீராடி இறைவனை வழிபடுவார்கள். பீடைகள் ஒழிக்கப்பட்டு மங்கல வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நன்நாள்தான்போகித் திருநாள். மொத்தத்தில் உறைவிடம் நிறைவிடமாகக் காட்சி தரும்.

போகித் திருநாள், மாரியம்மன் விழாவாகக் கொண்டாடப்படுவதும் உண்டு பல ஊர்களில். மாரியைப் பொழிபவள் மாரியம்மன், என்ற வகையில்கொண்டாடுகிறார்கள். மேலும் ஐந்தினையில் ஒன்றான மருதநிலத்திற்கு (வயலும் வயல்சார்ந்த இடமும்) உரிய கருப்பொருள்களில் இந்திரன் என்றதெய்வமும் ஒன்று. ஆகவே போகி என்பது இந்திரன் விழா என்று கொண்டாடுவோரும் உண்டு!

மறுநாள் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? ராகு, சனி பார்த்து நல்ல நேரம் பஞ்சாங்கப்பஐ குறிப்பது பெரியவர்கள் கடைப்பிடிக்கும் பழக்கம்.போகியன்று, பாயாசம், பச்சடி, மரக்கறி, கூட்டு,பொரியல், கோசுமல்லி, மோர்குழம்பு, ரசம், பருப்பு வடை, அப்பளம், போளி எனப்படும் இனிப்பு அல்லதுஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் போன்றவற்றைச் சமைத்து உண்டு மகிழ்வது வழக்கம். கொண்டாடப்படும் நாள் அக்கால வழக்கப்படி வருடத்தின்கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறி, வரும் ஆண்டிற்கும், பொங்கல் விழாவிற்கும் ஆயத்தம் செய்யவே போகிக்கொண்டாடப்படுகிறது எனலாம்.

தமிழரிடம் என்ன வாழ்க்கைத்தரம் மற்றும் பாங்கு நிலவியிருக்கிறது. பொங்கல் விழாக் கொண்டாட ஆயத்தம் செய்யவே ஒருநாளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், நம் மறத்தமிழர்கள்! சரி, பொங்கல் கொண்டாடும் விதம்தனைப் பார்ப்போம்.

சூரியப் பொங்கல்...

Pongalதை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரியபகவானைப் போற்றி வணங்கி வழிபடும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புது மிடுக்கோடு அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள். பெண்கள்தான் அந்த விடியலின் விளிம்பில் என்னசுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று தோன்றும். வீட்டு வாசற்படிகளில், முற்றத்தில் கோலமிட்டு ( "நான் 126 புள்ளி வச்சுல்ல கோலம் போட்டேன்போன்ற பறை சாற்றல்களும் கூட இருக்கும்...") தேடிப்பிடித்து பசுஞ்சாணம் கொண்டு வந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கோலங்களின் மேனியில் படாதுசமர்த்தாக வைப்பார்கள். பின்னே, இதெல்லாம் ஏனோதானோவென்று செய்ய முடியாதில்லையா?

வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் படர்ந்திருக்கிற பூசணிக்கொடியில் கதிரவனை வரவேற்க இதழ் விரிக்கலாமா வேண்டாமா எனத்தயக்கத்திலிருக்கும் பூசணிப் பூக்களை, அதன் பட்டுப் பூவுடலில் முத்துமுத்தாக நிற்கும் பளிங்குப் பனித்துளிகள் சிதறிவிடாமல், அவைகளுக்கு வலி தெரியாமல்மென்மையாகப் பறித்துக்கொண்டு வந்து சாண உருண்டகளில் செருகி, சற்று எட்ட நின்று பெண்கள் அழகு பார்ப்பதும் கூட அந்தப் பொழுதுபுலராதவேளையில்தான்!

பச்சரிசி மாவைக் கரைத்து, காவிக் கட்டியைக் கரைத்து வண்ணப் பொடிகளை சிறுசிறு வட்டில்களில் எடுத்துக்கொண்டு, முழங்கால் வரை பாவாடையை தூக்கிச்செருகிக் கொண்டு முன் அறை, சமையல் அறை, நடுக்கூடம், உள் அறை, மாடிப்படி, மொட்டைமாடி, முற்றம் என வீட்டில் ஒரு டம் கூட பாக்கியில்லாமல்உட்கார்ந்து, எழுந்து தன் கைத் திறமைகளைக் காட்டும் விடலைப் பெண்களுக்குத் தான் என்ன குதூகலம்!

மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாகப்பொழிகிறான். அதேபோல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டுவரும்தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.

"பரிதியே பொருள் யாவிற்கும் முதலே " என்கிற முறுக்கு மீசைகாரக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனைமுதன்மைப்படுத்தி வணங்குதல் கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும்ஆண்டில் நல்ல விளைச்சலைத் தரவும் வேண்டி பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.

கதிரவன் கணக்கு...

இன்றைக்கு அறிவியல் உலகம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் அன்றைய தமிழன் சந்திர, சூரியப் போக்கை வைத்து காலத்தையே கணித்தவர்கள்;கதிரவன் உத்ராயணப் பயணம் மேற்கொண்டு தனுசிலிருந்து மகரராசியில் நுழையும் இயற்கை நிகழ்வினைத்தான் "தை"த் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

பொங்கலோ பொங்கல்...

சூரிய உதயத்திற்கு முன்பாகக் குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல்அடுப்பு கூட்டி (கிராமங்களில்தான் பெரும்பாலும் இப்படி... நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் ஸ்டவ் அடுப்பு பெயருக்கு ஒரு பொங்கல், சாமிபடங்களுக்கு முன்நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு பொங்கல் சாப்பிட்டுவிட்டு ரெண்டு துண்டுக் கரும்பை கடிப்பதோடு பொங்கல் முடிந்து விடுகிறது...!? " )

Pongalமாக்கோலமிட்ட புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் செடி மாலையாக வளையமிட்டிருக்கும். பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல்குறிபோல தோகையுடன் கூடிய கரும்புகளை நிறுத்தி வைத்திருப்பார்கள்.

அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு கரும்புச் சாறில் செய்த வெல்லமிட்டு, பாலூற்றி, பசுநெய்விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின்மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க...ஆயிற்று பொங்கல் பொங்கி வழிய "பொங்கலோபொங்கல் " என்ற உற்சாகக் குரலகள் பீறிட பொங்கல் தயார்!

குடும்பமே கூடி நிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து, கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்கு பூஜை நைவேத்தியம் செய்து,பொங்கலையும் படையல் செய்து வணங்குவார்கள். எண்சாண் உடம்பும் பூமித் தரையில் பட விழுந்து பரிதியின் சீர் பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம்உள்ளவர்களுக்கு இவர்களும், இவர்களுக்கு அவர்களும் பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்!

கிராமங்களில்...

கிராமங்கள் வாசல், திண்ணை என்று செம்மண் பட்டை, சுண்ணாம்புப் பட்டை போட்டிருக்கும். வாசல் நிலைப்படிகளில் மாவிலைத் தோரணம் கட்டி, வேப்பிலை,பூளைப்பூ என்று கலந்த இந்தத் தோரணம் வீட்டுக்குள் நுழையும் போதே ஒருவித நறுமணம் நாசியைத் தடவிச் செல்வதை உணரமுடியும். சூரியன் தெரியும்படியானவீட்டுத் திறந்த முற்றத்தில் பூஜை செய்வார்கள். முற்றம் இல்லாதவர்கள் வீட்டில் பூஜையறையில் பூஜை செய்வது வழக்கம். நன்கு மெழுகப்பட்ட தரையில்,நான்கு மூலைச் சதுரமாகப் பெரிய கோலம் போட்டு, நடுவில் காவி இட்டு, அதில் அரிசி மாவினால் வடக்குப் பக்கம் சூரியன் உருவத்தையும், தெற்குப்பக்கம் சந்திரன் உருவத்தையும் வரைந்து அந்த இடத்தில் பூஜை செய்வார்கள். பூஜை செய்யுமிடத்தை பூசணி, பரங்கிப் பூக்கள்அலங்கரித்திருக்கும்.

பூஜைப் பொருட்களாக, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூக்கள், பசுமஞ்சள், இஞ்சிக் கொத்து, கரும்பு, சாம்பிராணி, கற்பூரம், அட்சதைப் பொருள்,காய்ச்சாத பசுவின் பால், குங்குமம், சந்தனம், திருநீறு, கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இவை அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.

பொங்கல் வைக்கும் வெண்கலப் பானையில் அல்லது மண் பானையில் சுண்ணாம்பைச் சுற்றி ஒரு விரலால் தடவிக் குங்குமப் பொட்டிட்டு ராகு காலம்இல்லாத வேளையில் பாலும் புதுத் தண்ணீரும் விட்டு கிழக்குப் பார்த்த அதாவது சூரியன் உதிக்கிற திசையில் அடுப்பு மூட்டி பொங்கல் பானையை வைப்பார்கள்.ஒரு கொதி வந்ததும் தயாராக வைத்துள்ள பொங்கலரிசி மற்றும் பாசிப் பருப்பை போடுவார்கள். நன்கு வெந்தபின் வெல்லம் இட்டு ஏலம் உட்பட மற்றபொருட்களையும் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். சிலர் வெண்பொங்கலும் உளுந்துவடையும் செய்வது உண்டு.

ஐந்தாறு மரக்கறி ஒன்றிரண்டு கூட்டு வகைகள் நவதானியங்கள் கலந்த குழம்பு வைத்து "அப்பளம் பொரிப்பவர்களும் உண்டு. சிலர் பொங்கலன்று வெறும்வெண்பொங்கல் மட்டும் செய்பவர்களும் உண்டு. நான்கு வித காய்கறிகளைத் தனித்தனியாக வேக வைத்து, நான்குவித வெல்லக் கூட்டுகளைச் செய்து, சர்க்கரைவள்ளிக் கிழங்கு கறி, பரங்கிக் காய் குழம்பு, அப்பளம் பொறித்து பொங்கல் படைப்போரும் உண்டு. சங்கராந்திக்கு முக்கியமாக இடம்பெறும் காய்கறியில்பச்சை மொச்சை, பரங்கிக் காய், சர்க்கரை வள்ளிகிழங்கு, வாழைக்காய் முதலியனவாகும்.

பூஜை முடிந்தபின், நைவேத்தியம் செய்த சாதத்தில் கொஞ்சம் எடுத்து உப்பு தயிர் சேர்த்து சிறிது சுக்கைத் தட்டிப் போட்டுப் பிசைந்து பூஜை செய்த இடத்தில் வைப்பதுவழக்கம். பூஜை முடிந்தபின் சைவச் சாப்பாடு விருந்துபோல நடக்கும். அன்று மிகுந்த கறி கூட்டு மற்றும் குழம்பினை அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி எரித்தகறி செய்து வைத்துக் கொள்வார்கள். எரித்த கறி மிகுதியாக இருந்தால் அது தீரும் வரை தினமும் கொதிக்க வைத்து பல நாட்கள் வரை கெட்டுப்போகாமல்

உபயோகிப்பவர்கள் உண்டு. தந்தை இல்லாதவர்கள் வீட்டில் மட்டும் மாதப் பிறப்பு தர்ப்பணம் செய்வார்கள். சூரிய நாராயணனைக் குறித்து பூஜை செய்வதுவழக்கம்.

கனுப் பொங்கல்...

பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் என்றும், " கனுப் பீடை" நாள் என்றும் கூறுவது உண்டு. கனுப்பொங்கல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது. கனுப் பொங்கல் நாளன்று வீட்டில் அனைவரும் குஹித்துவிட்டுத்தான்காரியம் தொடங்குவார்கள். முதல் நாள் பொங்கல் பானையில் கட்டிய பசு மஞ்சளை எடுத்துக் கழுவி வீட்டிலுள்ள பெண்கள் குழந்தைகள் அந்த மஞ்சளைப்பூசிக்கொண்டு ஆறு, குளம், ஊரணிக்குப் போய் "கனுப்பிடி" வைத்துவிட்டு வந்து குளித்து புத்தாடை அணிந்து முதல் நாள் பிசைந்து வைத்துள்ள தயிர் சாதமும் எரித்த கறிசேர்த்துச் சாப்பிடுவார்கள். குளம், று இல்லாத ஊர்களில் தங்கள் வீட்டில் முற்றத்தில் அல்லது மொட்டை மாடியில் கனுப்பிடி வைத்துவிட்டு பின் குளித்து புதுசுஉடுத்திய பின் தான் சாப்பிடுவது வழக்கம்.

கனுப் பிடி....

கனுப்பிடி வைப்பது பெண்களுடன் பிறந்த சகோதரர்களின் ஷேமத்தைக் குறிக்கவே செய்யப்படுகிறது. கனுப்பிடி வைப்பது என்றால் அந்த வீட்டில் எத்தனைசகோதரர்கள் இருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு மஞ்சள் இலையை வைத்து, அதில் முதல் நாள் பிசைந்த தயிர் சாதத்தில்கொஞ்சம் எடுத்து அதில் மஞ்சள் பொடியைச் சேர்த்து கலந்து கொள்வார்கள். கொஞ்சம் வெள்ளைச் சாதமும் எடுத்து வைத்திருப்பார்கள்.

சிலர் சர்க்கரைப் பொங்கலும் வைப்பார்கள். கொஞ்சம் சாதத்தில் குங்குமத்தைப் போட்டு கலந்து கொள்வார்கள். சிவப்பு, மஞ்சள்,வெள்ளை என்றுசாதங்களோடு சர்க்கரைப் பொங்கல் என நான்கு வகை சாதங்கள் இருக்கும். பெரும்பாலோர் வெண்பொங்கலையும், மஞ்சள் சாதத்தையும் மட்டும்படைப்பார்கள்.

ஒவ்வொரு சாத உருண்டையிலும் ஏழு அல்லது ஒன்பது சிறு உருண்டைகளாகப் பிடித்த சாதங்களை கனுப்பிடியாக மஞ்சள் இலையில் (அதாவது மஞ்சள் கிழங்குச் செடிசிறு வாழை இலை போன்று இருக்கும்) வைப்பார்கள்.

இலை நுனியில் நான்கு வெற்றிலை, ரெண்டு பாக்கு, ஒரு பழம், ரெண்டு கரும்புத் துண்டு என்று வைத்து நைவேத்தியம் செய்வார்கள். று குளங்களில் வைக்கப்படும்கனுப்பிடி சாதத்தை காக்கை குருவி சாப்பிட்டு விடும். அதிலுள்ள பழம் பாக்கு வெற்றிலையை ஏழைகள் எடுத்துக் கொள்வார்கள். பெண்கள் தங்கள்சகோதரர்கள் சேம நலனுக்காகச் செய்யப்படுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் பொங்கல் பண்டிகைக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர்செனத்தி செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

சுமங்கலிகள்அல்லாதவர்களும் சகோதரர்கள் இருந்தால் அவர்களும் கனுப்பிடி வைக்க வேண்டும். அன்று பகலில் சர்க்கரை பொங்கல் மற்றும் தயிர்சாதம் வற்றோடு மற்றும் இரண்டு பிசைந்த சாதங்களோடு வற்றல், வடாம், வறுவல் போன்றவற்றோடு அப்பளம் பொரித்து பகல் சாப்பாடுநடக்கும்.

மாட்டுப்பொங்கல்...

Mattu Pongalமூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்!

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு" என்ற வள்ளுவம் தமிழரிடத்து என்றும் வாழ்ந்திருக்கிறது.மனிதர்களிடம் மட்டுமில்லை விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். மாடுகள், வயல்கள்/பண்ணைகள் உள்ளவர்கள்இந்நாளைக் கொண்டாடுகிறார்கள். உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்குவெளிச்சம்தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவிஎண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை கெளரவிக்கும் வகையில் கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

வண்டியிழுக்க, செய்வது மாடு; காளைமாடு. காலைமாலை சுவைதரும் பால்தருவன பசுமாடு; அவை அனைத்தும் அன்று குளித்து, கொம்புகளைசீவிக்கொள்ளும். கொம்புகளில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்; (அன்று மட்டும் மாடுகளுக்கு அடி விழாது) எருமைமாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கூடகொம்புகளில் வண்ணம் பூசுவர். கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள்.

கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறுபூசி குங்குமத் திலகமிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக்கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை அது டிராக்டராக ருந்தாலும் கொழு கொம்பு கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம்,குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்து கருவிகளையும் இதே போலச் செய்வார்கள்.

தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காகஎடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது " பொங்கலோபொங்கல் மாட்டுப் பொங்கல் " என்ற எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள்சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின் பசு, காளை, எருமை எனஅனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால் நடைகளுக்கு நன்றிகூறும் நாளைத்தான் "மாட்டுப் பொங்கலாக"கொண்டடுகின்றனர்.

சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளைசற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு கூட்டி வருவார்கள். வீட்டுக்கு திரும்ப கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்துஅதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம். சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிச் சுவைக்கும் விதவிதமான கரும்புகள் தெருத்தெருவாக

விற்பனையாகும். கரும்பு திண்ணக் கூலியா என்ன? பல்லில்லாத வயதான மழலைகளுக்குக் கூட நாவினில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரமாயிற்றே!

காணும் பொங்கல்...

நான்காவது நாளைக் காணும் பொங்கலாக அனுசரிப்பார்கள். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல்மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் இந் நாளில்தான். தெருக்களில் ஒலி பெருக்கிகள் காதைத் துளைக்கும். அந்த நற்பணி மன்றம், இந்த நலச் சங்கம்,ரசிகர்மன்றங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல்என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இரவில் இசை கச்சேரிகள், நாடகம் என்று இன்றைக்கு ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்என்று தொன்மையான கலைகள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நடை பெறுவதும் உண்டு.

ஜல்லிக் கட்டு...

Jallikattuகிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரக ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் இவற்றோடு வீரவிளையாட்டான மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை பெறும். சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகைசூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர்,ாஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள். லட்சக்கணக்கானவர்கள் திரண்டு வந்துஇந்த ஜல்லிக்கட்டைப் பார்ப்பார்கள்.

இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படுமோசமாக காயப்படுத்திவிடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல்வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகைசூடுவார்கள். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் கோவை, கம்பம்,காங்கேயம், இராமாநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டுவருவார்கள். இத்தகைய காளைகள்விவசாயத்திற்கோ மற்றவேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள்.

தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையேபெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, அந்த இடம்நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கிவிடுவார்கள். மாடு முட்டி குடல் சரிஞ்சு செத்துப்போனா மக வாழாவெட்டியாப் போயிருவாள் என்று மகளைப்பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம்)

"ரேக்ளா ரேஸ்" எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் பலஇடங்களில் நடைபெறும். அதற்கும் ஏராளமான கூட்டம் கூடும். எந்த வண்டிஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம்.

சாவக்கட்டு ...

இது தவிர "சாவக் கட்டு" என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடைபெறும். கோழிச் சண்டை என்று சொன்னாலும்சேவல்களைத்தான் சண்டை போடவிடுவார்கள். சேவல்களை கோழி சண்டைக்காகவே வளர்ப்பார்கள். சேவல் கால் நகங்களை வெட்டி வெட்டி கூராக்கிவருவார்கள். முதிர்ச்சியடைந்ததும் அதை சண்டைக்கு பழக்குவார்கள். சேவலின் கால்களில் ஒரு சாண் நீளமுள்ள கூரான கத்தியை கட்டிவிடுவார்கள். அவரவர்சேவல்களை களத்தில் எதிரும் புதிருமாக இறக்கிவிடுவார்கள்.

சேவல்கள் எகிறிஎகிறி சண்டைபோட்டுக் கொள்ளும். சண்டையில் சேவல்களின் காலில் உள்ள கத்தியால் இரண்டுக்கும் காயம் ஏற்படலாம். ஆனால்க்ரோசமான சண்டையில் எதாவது ஒரு சேவல் தலை சாய்ந்துவிடும். ஜெயித்த சேவலுக்குரியவர் தோற்றசேவலை எடுத்துக் கொள்வார். ஆனால் எந்தச்சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுபவர்கள் கூட்டம் தான் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். இது சில இடங்களில் அடிதடி, கத்திகுத்து வரை போய்விடுவதும் உண்டு. இப்படி நடக்கும் இடங்களில் அடுத்ததடவை சாவக்கட்டு கிடையாது என போலீசார் தடை விதித்து விடுவதும் உண்டு.

அவர்களுக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு வேறு இடத்தில் ரகசியமாக சாவக்கட்டை நடத்துவார்கள். இது ஒரு சூதாட்டம் போல் நடப்பதால்பெரும்பாலும் கோழிச் சண்டைநடத்த போலீஸ் தடை இருக்கும். அதை எல்லாம் மீறி சாவக்கட்டு பொங்கல் திருநாளில் தமிழகத்தில் நடந்து வருகிறது.பொங்கல் திருநாளில் கிராமங்களில் கோழிக்குழம்பு மணக்கிறது என்றால் அது பெரும்பாலும் சாவக்கட்டில் சாவடிக்கப்பட்ட சேவல் குழம்புமணமாகத்தானிருக்கும் என்றால் அது மிகை இல்லை.

பொங்கல் என்பதும் நான்கு எழுத்து! பொங்கல் விழா நடக்கும் நாட்களும் நான்கு!! தமிழகத்தின் பாரம்பரியமான கலை, கலாச்சாரம் மற்றும் வீரவிளையாட்டுகளை பொங்கல் நாளில் புதுப்பித்து மகிழ்கின்றனர். பழமையான கிராமிய கலைகள் அழியாமல் பாதுகாக்கும் விழாக்களில்"பொங்கலுக்கும்" பங்கு இருக்கிறது என்பது பெருமையான விசயம் தானே!

சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு " தமிழர்திருவிழா" வைக் கொண்டாடுகிற பெருவிழா இந்தப்பொங்கல் திருநாள் ஒன்று தான் என்பது அதனினும் மகிழ்தன்றோ!!

-ஆல்பர்ட்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. நூர்ஜஹானின் நிக்காஹ்
2. பிற்பகல் விளையும்
3. நன்றி நவில ஓர் நாள்
4. உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா
5. கிறிஸ்துமஸ் பரிசு


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X